திருமதி. மங்களேஸ்வரி ஓங்காரநாதன் - எழுபதாவது பிறந்தநாள் வாழ்த்து

நயினை இரட்டங்காலி முருகனருகே, வீடு கொண்ட

குமாரன் நவரெத்தினங்களை நயினைக்குத் தந்த,

உயர் வணிகன் ஆறு பெண்ணைப் பெற்றும்

ஆறுமுகன் பேறு பெற்றதாய் எண்ணிப் பெருமிதம் கொண்டு

தேவி, ஈசன், தவம், பழம், லலிதா, அருள் என அழைத்தே

 

புவி போற்றும் வாழ்வு வாழ்ந்த, புண்ணியவான் குமாரசாமி

எள்ளளவும் தீங்கை எவருக்கும் எண்ணா,மனமுடையாள்

கண்ணாடியாச்சி கடையில் நின்றால் - சும்மா இனிப்புத்தருவா என்று,

நயினை மக்கள் நாவில் இன்றும் வாழும் இல்லாள் - வள்ளியம்மை

மகளாக மண்ணிலே வந்த மங்களேஸ்வரி இவள்

அகவை எழுபது எய்தினாள் இன்று என்றால் எவர் தான் நம்பிடுவார்?

 

நல்லதம்பி நன்மகனை நற்பண்பு கொண்டவனை

உறவுகளை உபசரிக்கும் உத்தம குணத்தவனை

வங்கியை நிர்வகிக்கும் வல்லமை மிகுந்தவனை

கோவில்குளத்தின் குட்டி ஜமீன்தாரை துணைவன் எனக்கொண்டு

 

துயர்தனை வென்று இணையில்லா இல்லறம் கண்டு அதன் பேறாய்

பெற்றவர் சொல் கேள் மகன்மாரையும் மற்றவர் பல் காக்கும்

மகள்மாரையும் பெற்றே வாழ்வில் பெருமை பெற்ற தாய் இவள்

 

அலை போன்ற குழலும் அழகான கையெழுத்தும் விலை போட்டு வாங்க முடியாக் கல்வியும்

மற்றவர் வியக்கும் நற்பண்பும் அன்பும்  பூமாதேவியை மிஞ்சிய பொறுமையும் – தகப்பன்

குமாரனும் தாயவள் வள்ளியும் தந்த சீதனமோ - அன்றில்

ஒங்காரனோடு ஒன்றி வாழ்ந்ததில் உன்னிடம் வந்த குணமோ?

 

ஆசிரியப்பணி புரிந்து மாணவர் அறிவுக்கண் திறந்து - உப அதிபராய்ப்

பணி செய்து கல்விப்பணிக்கெனத் தனை அர்ப்பணித்த தங்கத் தாயிவள்

நல் வாழ்வுக்காய் அம்பிகை அருள்தனை வேண்டி நல்லாசிகள் கூறி

உற்றார் உறவுகள் கூடியே வாழ்த்த உலகினில் நீ நீடூழி வாழ்க!

 

நயினை நங்கை


Mangaleswary
Ongaranathan

Similar events