கதிரேசு சிவநந்தினி - அகவை எண்பத்துமூன்று

கதிரேசு சிவநந்தினி - அகவை எண்பத்துமூன்று

நேர்மையின் பாடம் கற்பித்த ஆசிரியை

 

நயினாதீவின் மண்மணம் கலந்த

ஒரு கருணை முகம்—

பெயர் சொன்னால் மரியாதை கூட நடந்து வரும்,

கதிரேசு சிவானந்தி

ஆசிரியையாய் மட்டும் அல்ல,

ஆளுமையாய் வாழ்ந்த ஒரு உயிர்.

கண்டிப்பு—அவர் குரலில் அல்ல,

அவர் ஒழுக்கத்தில்.

 

கடமை—பேசுவதில் அல்ல,

வாழ்வதிலே பதிந்திருந்தது.

நயினாதீவு மகாவித்தியாலயத்தின்

பாடசாலை சுவர்களுக்குள்

அவர் நடந்த பாதைகள்

இன்றும் பாடமாகவே ஒலிக்கின்றன.

 

பொருளியல்—

அவரிடம் ஒரு பாடமல்ல,

மாணவர்களின் எதிர்காலத்தை

எண்ணிக்கைகளால் உயர்த்தியது.

வாழ்க்கையின் வழிகாட்டி

பல கனவுகள்

அவரது கரும்பலகையில் பிறந்து,

பல்கலைக்கழக வாசல்களை

தட்டிச்சென்றன.

 

என்னை—

தூக்கி வளர்த்து

பெரிய கனவுகளை விதைத்து,

அம்மாவாய் அணைத்து,

ஆசிரியையாய் வடித்து,

“எங்கட றஞ்ஜித்து” என்று சொன்ன

தாயம்மா.

 

நீங்கள் இல்லை என்றாலும்

இல்லை என்ற சொல்லுக்கு

இடமில்லை இங்கு.

உங்கள் கண்டிப்பு என் நடை.

உங்கள் அன்பு என் பலம்.

உங்கள் கல்வி என் அடையாளம்.

 

இன்று—

எண்பத்துமூன்றாவது அகவை நாள்

ஒவ்வொரு நாளும்-உங்கள்

நினைவுகள் மலர்கின்றன.

நீங்கள் வாழ்ந்த விதம்

எங்கள் வாழ்வின்

நித்திய பாடநூல்.

 

நினைவு வணக்கம் தாயே



Sivananthy
Kathiresu
light

Similar events