நயினாதீவில் ஆலங்குளத்தினை அண்டிய பகுதி மற்றும் ஏனைய பகுதிகளில் மிக வேகமாக பரவிவரும் இனங்காணப்படாத தாவரம் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு சாதக பாதகம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தருமாறு எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையம் வழங்கிய அறிக்கை பின்வருமாறு
தாவர அடையாளம் மற்றும் வளர்ச்சித் தன்மை
1. தாவரம் அவரைக் குடும்பத்தினை சேர்ந்தது(Fabaceae)
தாவரத்தின் வகை: பல்லாண்டு புதர்ச்செடி
தாவரம் வளரும் சூழல்: வறட்சியான சூழல், அதிக காரத்தன்மை மற்றும் உவர்த்தன்மை கொண்ட நிலங்கள், மணற்பாங்கான கரையோரப் பகுதிகள்
தாவர பரம்பல்: தெற்காசிய நாடுகளிலும் இலங்கையிலும் பொதுவாகக் காணப்படும் ஒரு செடி வகை இது
2. வளர்ச்சி மற்றும் பரவும் முறை
வேகமான பரம்பல்: இத்தாவரத்தின் விதைகள் மிகச் சிறியவை.
பரவும் வழிகள்: காற்று, நீர் மற்றும் விலங்குகள் மூலம் விதைகள் எளிதாகப் பரவுகின்றன.
வளர்ச்சி இயல்பு: விவசாயப் பயன்பாட்டில் இல்லாத கைவிடப்பட்ட நிலங்களில் அடர்த்தியாகப் பரவி வளரக்கூடியது.
நன்மைகள் (மண்வள மேம்பாடு)
நைதரசன் சத்து செறிவூட்டல்: வேர்ச் சிறுகுடுக்கள் மூலம் வளிமண்டல நைதரனை மண்ணில் நிலைநிறுத்தி மண்வளத்தை அதிகரிக்கிறது.
இயற்கை உரம்: உதிரும் இலைகள் மற்றும் தாவரக் கழிவுகள் மண்ணின் ஊட்டச்சத்து சுழற்சியை மேம்படுத்துகின்றன.
மண் அரிப்புத் தடுப்பு: இதன் கிளைகள் மற்றும் தாவர மூடி, மழைத்துளிகளின் நேரடித் தாக்குதலிலிருந்து மண் பரப்பைப் பாதுகாக்கின்றன.
மண் கட்டமைப்பு மேம்பாடு: மண்ணின் சிறு திரள்களையும் துளைத்தன்மையையும் உருவாக்கி, ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது.
ஊட்டச்சத்து மறுசுழற்சி: ஆழமான பகுதிகளிலிருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சி மேல் மண்ணுக்குத் திரும்ப அளிக்கிறது.
தீமைகள் / பாதிப்புகள்
ஆக்கிரமிப்புத் தன்மை: கட்டுப்படுத்தாவிட்டால் அடர்ந்த புதராக வளர்ந்து, விவசாய நிலங்களையும் பிற தாவர நிலங்களையும் ஆக்கிரமிக்கக்கூடும்.
மேலாண்மை வழிகாட்டல்
புதராக வளர விடக்கூடாது: இச்செடியை அதிகளவில் புதராக வளர விடாமல் கட்டுப்படுத்த வேண்டும்.
பசுந்தாள் உரமாகப் பயன்படுத்துதல்: தாவர வளர்ச்சிப் பருவத்தில், பூக்கள் மற்றும் காய்கள் தோன்றுவதற்கு முன்னரே செடியைப் பிடுங்கி, மண்ணுடன் புரட்டிச் சேர்த்து உழுவதன் மூலம் பசுந்தாள் உரமாகப் பயன்படுத்தலாம்.
கட்டுப்படுத்தப்பட்ட பரம்பல்: முறையான மேலாண்மை மூலம் இதன் பரவலைக் குறைத்து, மண்வளத்தை உயர்த்தும் மாற்று வழியாகப் பயன்படுத்தலாம்.
குறிப்பு: குறித்த கள விஜயத்தில் மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான விரிவான அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அறியத்தந்துள்ளனர்.
தகவல் மூலம்: விவசாய ஆராய்ச்சி நிலையம் - திருநெல்வேலி, விவசாயத் திணைக்களம்.