உலகோரால் மங்கலவாத்தியம் எனக்கொள்ளப்படும் சிறப்பை நாதஸ்வரம் பெற்றுள்ளது. நாதகான வள்ளல்களாகச் சிறப்புப் பெறும் கலைஞர்கள் காலத்திற்குக் காலம் எம்மண்ணிலும் பாரத தேசத்தின் தென்னாட்டிலும் உதயமாகி வருகின்றனர். அத்தகையோருள் இன்றைய சூழலில் கூர்மையாக நோக்கப்படும் பெருங்கலைஞனாக பிஎஸ்பி என்ற அட்சரங்களால் போற்றப்படும் பாலமுருகன் திகழ்கின்றார்.
*பிறப்பும் ஆளுமை உருவாக்கமும்*
யாழ்ப்பாணம் நல்லூரில் சுப்புசாமி பஞ்சரத்தினம் தம்பதியரின் ஐந்து பிள்ளைகளுள் மூத்தவராக பாலமுருகன் 10 மார்ச் 1980 இல் பிறந்தார். தங்கைமார் ஜானகி மற்றும் ரேவதி தம்பியர்கள் செந்தில்நாதன் மற்றும் சங்கர். இவர்களில் செந்தில்நாதன் பாலமுருகனுக்க தவில் இசை வழங்கும் வித்துவான். சங்கர் பாலமுருகன் வழியில் நாதஸ்வரம் வாசிக்கும் வித்துவான்.
பாலமுருகனின் துணைவி காயத்திரி. நாதஸ்வர இரட்டையர்களான கானமூர்த்தி பஞ்சமூர்த்தி ஆகியோருள் அமரர் கானமூர்த்தியின் மகள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
*நாதஸ்வரக்கல்வி*
பாலமுருகனின் பள்ளிக்கல்வி நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தில் அமைந்தது. ஆயினும் சிறுவயது முதல் அவரது மூச்சுக்காற்று நாதஸ்வரமாகவே அமைந்திருந்தது. தனது ஆறாவது வயதில் நாதஸ்வரத்தை கையில் எடுத்த பாலமுருகன் தந்தையாருடன் சேர்ந்து எட்டு வயதினில் முதற் கச்சேரி மேற்கொண்டார்.
நாதஸ்வரக் கலையில் தந்தை சுப்புசாமி முதற்குரு. அவர் ஒரு பல்துறைக் கலைஞர். தவில் நாதஸ்வரம் வாய்ப்பாட்டு கொன்னக்கோல் எனப் பல நுட்பங்களை அறிந்தவர். அவரிடம் கற்றதோடல்லாமல் இலங்கையின் மூத்த நாதஸ்வர வித்துவான்களிடமும் இக்கலையின் நுட்பங்களை பிஎஸ்பி கற்றுக் கொண்டார். நாதஸ்வர இசையின் நுணுகங்களை புகழ்பெற்ற நாதஸ்வர மேதை கலாசூரி என் கே பத்மநாதனிடம் நான்கு வருட குருகுல வாசம் செய்து கற்றார்.
பாலமுருகன் வாய்ப்பாட்டிலும் வல்லவர். இதற்கும் அவரது தந்தையே குரு. இசை ஞானத்தை இவரது இருபத்துநான்கு வயது வரை அதாவது தான் இறக்கும் வரை தந்தை வழங்கினார். முற்கால நாதஸ்வர வித்துவான்கள் சிலர் நாதஸ்வரம் வாசிப்பதுடன் வாய்ப்பாட்டிலும் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். அந்த வரிசையில் சாஸ்திரிய சங்கீதத்தைத் தனது குரலிசையால் ஆளும் திறன் மிக்கவராகவும் பிஎஸ்பி விளங்குகின்றார்.
இலங்கையின் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் விகே கானமூர்த்தி அவர்களுடன் நான்கு வருடங்கள் உடன் வாசிக்கும் காலத்திலும் பிஎஸ்பி கற்றுக்கொண்டார். இக்காலத்தில் இலங்கையின் தேர்ச்சிபெற்ற மூத்த கலைஞர்கள் பலருடன் வாசித்து அவர்களது நுணுக்கங்களையும் பிஎஸ்பி உள்வாங்கிக்கொண்டார்.
*கடல் கடந்த இரசிகர்கள்*
ஈழமண்ணில் நாதஸ்வர இரசிகர்களுக்கு விருந்தளிக்க தமிழகத்தில் இருந்து கலைஞர்கள் வந்த காலம் ஒன்றிருந்தது. அநத வரலாற்றைப் புரட்டி தென்னாட்டில் வாழும் நாதஸ்வர இரசிகர்களுக்கு விருந்தளிக்க யாழ்ப்பாணக் கலைஞர் பாலமுருகன் அடிக்கடி இந்தியாவுக்கு கலைப்பயணங்கள் மேற்கொள்கின்றார். குறிப்பாக கேரளத்தில் அவருக்கென இரசிகர் பட்டாளமே இருக்கின்றது. சாஸ்திரிய சங்கீத நுணுக்கங்களை அறிந்த பெருஞ்சபை பாலமுருகனின் வாசிப்புக்கு மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகமென தலை ஆட்டுவதும் சபாஷ் கொட்டுவதும் நம்மண்ணிற்குப் பெருமை தரும் செய்தியல்லவா?
கேரளாவில் உள்ள பிரபல ஆலயங்களில் இவரது கச்சேரி என்றால் நாதஸ்வர இரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில்; கூடுகின்றனர். இதனைவிடத் தமிழகம் ஆந்திரம் கர்னாடகம் மகாராஷ்டிரம் என மாநிலங்கள் பலவற்றிலும் பிஎஸ்பிக்கு என இரசிகர்கள் நிறையப்பேர் உள்ளனர்.
நம்மண்ணைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகள் தாங்கள் வாழும் இடங்கள் தோறும் பாலமுருகனை அழைத்து இசைவிருந்து பெற்றுச் சுவைக்கின்றனர். அண்மையில் அமெரிக்க அரசின் இரு உயர் அங்கீகார விருதுகள் பாலமுருகனின் விருதுப் பட்டியலில் இணைந்துகொண்டன என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் காஞ்சிகாமகோடி சங்கரமடத்தின் ஆஸ்தான வித்துவானாகவும் தருமபுர ஆதீனத்தால் நாதஸ்வர கலாநிதி பட்டம் வழங்கப்பெற்றவராகவும் விளங்குகின்றார்.
*தனித்துவ வாசிப்பு*
தற்கால சூழலில் எங்கள் மண்ணில் திரைஇசையை மையப்படுத்திய நாதஸ்வர வித்துவான்களே இரசிகர்களால் கவரப்படுகின்றனர். ஆயினும் இவர்களில் இருந்து பாலமுருகன் மாறுபட்டவராகவே விளங்குகின்றார். சங்கீதம் தெரியாத பாமர இரசிகனும் தலையாட்டித் தாளம் போடும் வண்ணம் இசையால் அனைவரையும் ஈர்க்கும் திறன் பாலமுருகனுக்குக் கடவுள் கொடுத்த வரம் என்றால் மிகைப்படாது.
இராக ஆலாபனை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் ஒரு இராகத்தை ஒருமணி நேரத்திற்கும் மேலாக வாசித்து இரசிகர்களை இசையால் மயக்கும் ஆற்றல் இவருக்குக் கைவந்தகலை. இன்னும் - சீவாளியை வாயைவிட்டு எடுக்காது நீண்டகால அடைவில் கையாளும் திறனையும் இவர் பெற்றிருக்கின்றார். நாதஸ்வர வித்துவான்கள் பலர் வாசிக்கும் சந்தர்ப்பங்கள் அமைகின்றபோது அவர்களுள் பிஎஸ்பி தனித்துத் தெரிவார்.
*இசை வாரிசுகள்*
பாலமுருகனுக்கு நேரடி வாரிசுகள் மூவர். அவர்களுள் சாரங்கன், சரஜ்ஞன் தந்தை வழியில் நாதஸ்வர வித்துவான்களாக வளர்ந்து வருகின்றனர். இருவரும் தந்தையுடன் சேர்ந்து பல இடங்களிலும் புகழ்க்கொடி நாட்டி வருகின்றனர். மகள் தரங்கினி பேராதனைப் பல்கலைக்கழக மாணவி. தென்னிந்திய தொலைக்காட்சி வரை புகழ் பெற்று ஐரோப்பிய நாடுகளிலும் இசைப் பயணம் மேற்கொண்ட சிறப்பிற்குரியவர். சகோதரன் சங்கர் - பிஎஸ்பி வழியில் வாசிக்கும் நாதஸ்வர வித்துவான் அத்துடன் பெறாமகன் சபரீசனும் பிஎஸ்பி வழியில் நாதஸ்வர வித்துவானாக வளர்ந்து வருகின்றார். இவர்களைவிட பல நாதஸ்வரக் கலைஞர்கள் பிஎஸ்பியிடம் அவ்வப்பேர்து நாதஸ்வர நுணுக்கங்களைப் பயின்று வருகின்றனர்.
*சாதனைத் தமிழன்*
எம்மண்ணிற்குப் பெருமை சேர்த்தவர்களுக்கு டான் தொலைக்காட்சி வழங்கும் சாதனைத் தமிழன் விருது மிகப்பெரிய அங்கீகாரமாக விளங்குகின்றது. சிவபூமி அறக்கட்டளை தலைவர் செஞ்சொற்செலவர் கலாநிதி ஆறு. திருமுருகன், திருமறைக்கலாமன்ற இயக்குநர் (மறைந்த) அருட்கலாநிதி நீ. மரியசேவியர், நாடகத்துறைப் பேராசிரியர் சி. மௌனகுரு முல்லைமண்ணின் தொழில் முயற்சியாளர் சாஜிராணி, யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் இசைவாணர் மு. கண்ணன் பசிப்பிணி போக்கும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சு.மோகனதாஸ் சுவாமிகள் என்ற வரிசையில் 2025 ஆம் ஆண்டுக்கான சாதனைத் தமிழன் விருதை நாதஸ்வரச் சக்கரவர்த்தி கலாநிதி பிஎஸ் பாலமுருகன் அவர்களுக்கு வழங்குவதில் டான் குழுமம் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கின்றது.
விருதுக்குழு சார்பில்
*செந்தமிழ்ச்சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன்*
(முதல்வர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை)