நீதிமன்றங்களில் காத்துக்கிடக்கும் இந்து ஆலய அவலம் காண்மினே!

எங்கள் இந்து சமயத்தை நினைக்கும் போதெல்லாம் மனம் நொந்து கொள்ளும்.

ஒருபுறம் மறுசமயங்களின் நிந்தனைக்கு ஆளாகின்ற பரிதாபம். மறுபுறம் நீதிமன்றங்க ளில் இந்து ஆலயங்கள் நிறுத்தப்பட்டுள்ள துயரம்.

என்ன செய்வது வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்கள் கூட, நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்ற அளவில் நிலைமை வந்து விட்டது.

ஆம், உலகம் முழுவதும் பக்தர்களைக் கொண்ட நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் ஊர்காவற்றுறை நீதிமன்ற வழக்குப் புத்தகங்களில் கணிசமான இடத்தைப் பிடித்துள்ளதென்ற செய்தி எத்துணை துயர மானது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட, ஆலய பொதுக்கூட்ட அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதைவிட, வேறு சில வழக்குகளும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பெயரில் இருப்பதான தகவல்களும் உண்டு.

உண்மையில் நயினாதீவு மக்கள் மிகவும் பண்புடைமை கொண்டவர்கள். மற்றவர்களை வரவேற்பதிலும் மற்றவர்களுக்கு உரிய மதிப் பைக் கொடுப்பதிலும் அவர்களுக்கு நிகர் அவர் கள் என்றே கூறலாம்.

இதையும் கடந்து, கோபம் - கடுஞ்சொல் -பதற்றம் என்பன அவர்களிடம் அறவே இல்லை.

இதற்கும் மேலாக, யாழ்.மாவட்டத்தில் அதிக மருத்துவர்களைக் கொண்ட இடமாக நயினாதீவு மண் விளங்குகிறது.

தவிர, இன்முகத்துடன் உறவு பாராட்டி இன் சொல் பகரக்கூடிய நன்மக்களைக் கொண்ட நயினாதீவு கூட, வரலாற்றுப் பெருமைமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தை நீதிமன்றில் நிறுத்தியிருப்பது என்பது வேதனைக்குரியதே.

எனவே நயினாதீவு மக்கள் ஒன்றுகூடி அனைத்து வழக்குகளில் இருந்தும் ஆல யத்தை விடுவித்து, ஏனைய ஆலயங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

கூடவே இலங்கையில் பக்தர்கள் அதிகள வில் காணிக்கை செலுத்துகின்ற ஆலயமாக நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் திகழ் வதால், நாள்தோறும் அன்னதானம் என்ற ஆலயத்தின் அரும்பணிக்கு மேலாக, கல்வி மற்றும் மருத்துவப் பணிகளிலும் நயினை நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சமூகப் பணிகளில் ஈடுபடும்போது ஆலயம் தொடர்பில் எப்படி வழக்கு வைக்க லாம் எனச் சிந்திப்பதற்கு நேரம் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பும் உண்டு.


Recent news