சட்டவிரோத விகாரை – காணி உரிமையாளர்களின் நயினாதீவு பயணம்: உரிமை மீட்புக்கான இன்னொரு குரல்!

சட்டவிரோத விகாரை – காணி உரிமையாளர்களின் நயினாதீவு பயணம்: உரிமை மீட்புக்கான இன்னொரு குரல்!

நீண்ட காலமாக இழுபறியாகி வரும் இவ்விவகாரம், வடபகுதி தமிழர்களிடையே பெரும் மனவேதனையையும் அவநம்பிக்கையையும் உருவாக்கிய நிலையில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்தச் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டதாகக் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

குறிப்பாக குறித்த விகாரை கட்டப்பட்ட காணிகள் தமது குடும்பங்களுக்குப் பூர்வீகமாகச் சொந்தமானவை என்றும் உரிய சட்ட நடைமுறைகள் இன்றியே அவை கையகப்படுத்தப்பட்டு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதனை நிரூபிக்கும் வகையில் காணி அனுமதிப்பத்திரங்கள், பதிவுகள், வரி செலுத்திய ஆவணங்கள் உள்ளிட்ட சட்டரீதியான உறுதிகளை விகாராதிபதியிடம் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

 

நாகதீப விகாராதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பு அமைதியான முறையில் நடைபெற்றதாகவும் தமது கோரிக்கை பகைமையோ மோதலோ அல்ல. நீதியும் உண்மையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர். “எங்களுக்குச் சொந்தமான காணியை எங்களிடம் திருப்பிக் கொடுக்குமாறு கேட்பது ஒரு குற்றமல்ல. அது எங்கள் அடிப்படை உரிமை,” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

இந்தச் சந்திப்பு மதங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தூண்டும் நோக்கத்துடன் அல்லாமல் சட்டத்திற்கும் மனித உரிமைக்கும் உட்பட்ட ஒரு நியாயமான தீர்வை நாடி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். காணி உரிமை தொடர்பான பிரச்சினைகள் மதச்சாயம் பூசப்பட்டு அரசியலாக்கப்படாமல், உரிய சட்ட வழிமுறைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

இதனிடையே இந்தக் காணி விவகாரம் தொடர்பாக அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இன்னும் தெளிவான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்கிறது. நீதிமன்றத் தீர்ப்புகளும் சட்ட விதிகளும் புறக்கணிக்கப்படும் நிலை தொடருமானால், பாதிக்கப்பட்ட மக்கள் ஜனநாயக வழிகளில் தமது போராட்டங்களைத் தொடர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்ற அச்சமும் வெளிப்படுகிறது.

 

நயினாதீவில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு சட்டவிரோத காணி கையகப்படுத்தல்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளை அமைதியான முறையில் முன் வைக்கும் இன்னொரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இது வெறும் ஒரு சந்திப்பாக முடிவடையுமா? அல்லது காணி உரிமை மீட்புக்கான ஒரு தீர்மானமான திருப்புமுனையாக மாறுமா? என்பதே இப்போது யாழ்ப்பாணத் தமிழ்சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

T.K. பரமேஸ்வரன் - ஈழநாடு


Recent news