அருள்மிரு நயினாதீவு ஸ்ரீ நாகபூஷனி அம்மன் கோவில் 2013ம் வருட உயர்திருவிழா இன்று ஞாயிற்றுக் கிழமை இன்று (9/6/2013) அன்னையின் திருவருளினால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வழமை போலவே நயினாதீவு ஸ்ரீ நாகபூஷனி அமுதசுரபி அன்னதான சபையினர் அன்னதான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனர். அம்பிகையின் ஆலயத்திலிருந்து சிறப்பு பூஜை வழிபாடுகளின் பின் ஆலய அறங்காவல் சபைத் தலைவர் திரு.ப.க பரமலிங்கம் அவர்களும் முன்னாள் தலைவர் திரு.சா.ஆ தியாகராசாவும் அன்ன பூரணியின் திருவுருவப் படத்தினை தங்கள் கரங்களில் தாங்கி தீவகம் தெற்கு பிரதேச செயலாளர் திருமதி சதீசன் மஞ்சுளா தம்பதிகள் சம்பிரதாய பூர்வமாக அன்னையின் திருவுருவப் படத்தினை வாங்க மங்கள வாத்தியங்கள் முழங்க அமுதசுரபி மண்டபத்திற்கு அடியார்களின் அரோகரா ஒலி வானைப் பிளக்க ஊர்வலமாக வந்து சேர்ந்தது. இங்கு அன்னபூரணி அம்மாள் பூரண நிறைகும்பம் வைத்து வரவேற்கப்பட்டு மண்டபத்தில் அமைந்துள்ள பூஜை அறையில் ஸ்ரீநாகபுஷணி அம்மன் ஆலய நித்தியகுரு சிவகாமபானு சிவஸ்ரீ கைலை வாமதேவகுருக்கள் பூஜை வழிபாடுகளை நிறைவேற்றி வைக்க தீவகம் தெற்கு பிரதேச செயலாளர் தம்பதியினரும், நயினை முன்னாள் அதிபர் திரு. தனபாலசிங்கம் அவர்களும் முதல் அன்னம் பரிமாறி அன்னதானப் பெருவிழாவை ஆரம்பித்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து சுமார் 10.000ஆயிரம் அடியவர்களுக்கு அறுசுவை அன்னம் வழங்கி அரும்பசி தீர்த்து வைத்தாள் அமுதசுரபி.
இவ்வருடம் அமுதசுரபி நிர்வாகத்தினர் அடியவர்கள் வழங்கிய பேருதவியால் ஆலயத்திலிருந்து அமுதசுரபிக்கு செல்லும் வழி நெடுகிலும் ஓலைக் கீற்றினால் வேயப்பட்ட நிழற் பந்தல்கள் அமைத்து அடிக்கடி நிலத்திற்கு நீர் தெளித்து வைத்திருந்தனர். அம்பிகை அடியார்களின் திருப்பாதங்கள் நயினை மண்ணில் வெந்து புண்ணாகி விடக்கூடாது என்ற பெரு நோக்கோடு இப் பந்தல் பல இலட்சம் ரூபாவில் செலவில் தொண்டர்களால் அமைக்கப்பட்டுள்ளதாக அமுதசுரபி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து 28ம் திகதி வரை அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தகவல் : M. அம்பிகைபாகன், செயலாளர், நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அமுதசுரபி அன்னதானசபை