வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வரலாற்றுச் சுவடுகளோடு பின்னிப் பிணைந்த இன்னுமொரு முக்கியமான வழிபாட்டுத் தலம் ஆலடி அம்மன் ஆலயம் ஆகும்.
இது வெறும் துணை ஆலயம் மட்டுமல்ல. காலத்தின் கொடூரங்களைக் கடந்து அம்மன் தன்னைத் தானே காத்துக் கொண்டதாக மக்கள் நம்பும் ஒரு உயிருள்ள வரலாற்றுச் சின்னமாகும்.
போர்த்துக்கீசர் காலத்தில் யாழ்ப்பாணத் தீபகற்பம் முழுவதும் இந்துக் கோவில்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்ட காலம் அது. நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலயமும் அந்த மதவெறித் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. ஆலயம் இடிக்கப்பட்ட போது அம்பாளின் திருவுருவம் அழியக் கூடாது என்ற தெய்வபக்தியுடனும் துணிவுடனும் ஒரு அந்தணச்சிவாச்சாரியார் அம்மனின் விக்கிரகத்தைத் தூக்கிக் கொண்டு தீவின் மேற்குக் கரையை நோக்கிச் சென்றதாக வரலாற்றுச் சொல்லாடல்களும் கர்ணபரம்பரைக் கதையும் கூறுகின்றன.
அந்தக் காலத்தில் அடர்ந்த இயற்கைச் சூழலில் இருந்த ஒரு ஆலமரத்தின் பொந்தில் அம்பாளை அவர் மறைத்து வைத்தார். எதிரிகளின் கண்களிலிருந்து தெய்வத்தை மறைத்த அந்த இடமே. காலப்போக்கில் பக்தர்களின் வழிபாட்டால் புனிதத் தலமாக மாறி இன்று ஆலடி அம்மன் ஆலயம் எனப் போற்றப்படுகிறது.
அம்மன் தங்கியிருந்த ஆலமர அடியையே நினைவு ஊட்டும் ஒரு வரலாற்றுச் சான்றாகவும் அது விளங்குகிறது. இந்த ஆலயத்தின் முக்கியச் சிறப்பம்சம் அதன் விருச்சமாக விளங்கும் ஆலமரம் ஆகும். அது ஒரு சாதாரண மரமல்ல அது அம்மனைத் தன் மார்பில் தாங்கிய புனித சாட்சியாகவே பக்தர்கள் அதை வழிபடுகின்றனர். ஆலடி அம்மன் ஆலயம் கற்களால் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் மட்டுமல்ல. அழிப்பின் நடுவே உருவான நம்பிக்கை. மறைவின் நடுவே ஒளிர்ந்த தெய்வீகம். அடக்குமுறைகளைக் கடந்து தொடர்ந்த வழிபாட்டு சைவத் தமிழ் மரபு என்பதன் அடையாளமாகத் திகழ்கிறது.
இவ்வாறு நாகபூஷணி அம்பாளின் வரலாற்றுத் தொடர்ச்சியாகவும் ஈழத் தமிழ் சைவ மரபின் தாங்குதிறனைப் பிரதிபலிப்பதாகவும் ஆலடி அம்மன் ஆலயம் இன்று வரை பக்தர்களின் உள்ளங்களில் நிலைத்து நிற்கிறது.
இத்தகைய சிறப்புமிக்க அந்த இடத்தில் நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் வாழ்ந்த பெரியவர் திரு சோமு. சின்னத்துரை அவர்களால் சிறு தொட்டில் ஆலயமாக ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இடத்தில் சிறப்பான முறையில் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஊர் இளைஞர்களின் விடாமுயற்சியும் புலம்பெயர்ந்த நயினாதீவு மக்களது பங்களிப்போடு எழில்மிகுந்த கடல் அலை தாலாட்ட - புளியந்தீவில் குடிகொண்டிருக்கும் நாகேஸ்வரர் அருட் பார்வையுடன் ஆலடி அம்மனாக அம்பாள் வீற்றிருக்கின்றாள்.
இலங்கைத்தீவில் எத்தனையோ வரலாற்றுச்சிறப்புமிக்க ஆலயங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தும் காடுகள் சூழ்ந்து புதர் மட்டிக் கிடக்கும் நிலையில் 400 ஆண்டு கால வரலாற்றுச் சுவடுகளை எடுத்தியம்பும் ஆலயமாக எழுந்து நிற்கின்றது ஆலடி அம்மன் ஆலயம்.
நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் இருந்து சிறு தூரத்திலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளதால் நாகபூஷணி அம்பாள் ஆலயத்திற்குச் செல்லும் வெளி ஊர் அடியார்கள் நிச்சயம் இந்த ஆலடி அம்பாளையும் தரிசிக்க வேண்டும். தன்னை நாடி வருவோருக்கு நல்லருளை வழங்கும் நாகபூஷணி அம்பாள் தன்னைதத் தற்காத்துக் கொண்ட ஆலடி அம்மனையும் தரிசிப்பது அடியார்களுக்கு பெரும்பேறாக அமையும்.
T.K. பரமேஸ்வரன் -கனடா