"கண்ணியது உன்புகழ் கற்பது உன்
நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு புயத்தில்
இரவாய்
நண்ணியது உன்னை நயந்தோர்
அவையத்து நான்முன் செய்த
புண்ணியம் ஏது என்னம்மே! புவி
ஏழையும் பூத்தவளே"
சாந்தியும், சமாதானமும் நிறைந்த புண்ணிய பூமியாகிய நயினாதீவில் அம்பிகை எழுந்தருளி உலகெங்கிலுமுள்ள ஆன்மாக்களுக்கு, அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றாள். உலகத்துக்குத் தாயாகிய அன்னை பலசக்தி பீடங்களில் அமர்ந்திருக்கின்றாள். நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் 'புவனேஸ்வரி' பீடமாக அமர்ந்து அருள் பாலிக்கின்றாள். இலங்கைத் திருநாட்டில் இப்புனித ஆலயத்தைப் போன்ற தொன்மையும், கீர்த்தியும் வாய்ந்த சக்திபீடம் பிறிதொன்றில்லை எனலாம். தனது அருள்பெரும் கருணையினால் உயிர்வர்க்கத்தை அரவணைத்துக் காத்து வருகின்றாள் அன்னை. ஒரு சர்ப்பம் நெடுநாள் இங்கே வசித்து தவஞ்செய்து தனது சாபம் நீங்கப்பெற்றது. அதனைத் தனது திருமேனியில் அணிந்து சாப நிவர்த்தி செய்தமையால் தான் இங்கு எழுந்தருளிய அம்பிகை 'நாகபூசணி' என்னும் திருநாமம் உடையவளாக விளங்குகின்றாள். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் சிறப்புக்களைக் கொண்டமைந்த நாகபூசணி அம்பாள் பயபக்தியுடன் வழிபடக்கூடிய வழிபாட்டுத் தெய்வமாகவும் சிறப்புற்று விளங்குகின்றாள். சாந்தியும், அருளும், அனுக்கிரகமும் நிறைந்த அற்புத நாயகியாகிய நாகபூசணியை அனுபூதியாளர்கள் தங்கள் இதயத்தில் இருத்தி, தினமும் பூஜித்து வருவதனால் ஆன்ம பலம்பெறுகின்றனர்.
மக்களின் துயர் துடைக்கும் அருள் நிலையங்களாக ஆலயங்கள் இருக்கின்றன. காலத்துக் காலம் ஆலயத்தில் திருப்பணிகள் தடையின்றிச் சிறப்புடன் நடைபெறவேண்டும். அன்பும், பக்தியும், சிரத்தையும் கொண்டு அன்பர்கள், அடியார்கள் உருகி வழிபட்டு ஆறுதலடைய வேண்டும் பிரார்த்தனையிலே தான் உடலும், உயிரும், உள்ளமும், மனமும் அசைக்க முடியாத சக்தியைப் பெறும்..
பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பாபிஷேகம் சகலவிதமான நோய்களையும் நீக்கும். கும்பாபிஷேகம் சகலவிதமான நோய்களையும் நீக்கும். கும்பாபிஷேகம் எல்லாவற்றையும் விடச் சிறந்த கிரியையாகும். இதனால் பேரானந்தப் பெருவாழ்வும், கோடி புண்ணியமும் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. கும்பாபிஷேகம் என்பது பல்வேறுபட்ட குறைபாடுகளையும் நீக்கி, இறைவனது திருவருள் பாலிக்குமாறு செய்யும் பெருஞ் சாந்தியாகும். இந்தச் சாந்தியானது ஆலயங்களில் உரிய காலங்களில் செய்ய வேண்டியது இன்றியமையாதது. இந்த மகாகும்பாபிஷேகத்தை மெய்யன்போடு கண்டுகளித்து தரிசனம் செய்பவர்கள், அகன்று, சகல நலன்களையும் பெறுவார்கள் என்பது உண்மை.
பிறந்திருக்கும் இப்புத்தாண்டு, எமது திருக்கோயில்களுக்கு அணிசெய்யும் ஆண்டாக மிளிர வேண்டும் என்பதே எம் போன்றவர்களின் விருப்பமாகும். அந்த வகையில் நயினை அம்பிகையின் கருணையும் இதற்குத் துணைசெய்வதாக அமைய வேண்டும். எனவேதான் நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாளுக்கு இன்று (20.01.2012) ஞாயிற்றுக்கிழமை மகாகும்பாபிஷேகம் நடைபெறத் திருவருள் பாலித்துள்ளது.
இன்று நயினாதீவில் 'இரத்தலோகம்' எனப்போற்றத்தக்க வகையில் அம்பிகையின் ஆலயத்தில் பலவகைப்பட்ட சிறப்பான திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆலய உட்பிரகாரத்தில் நிரந்தர சிமெந்துக் கூரையிடுதல், சிமெந்துக்கூரையை திராவிடச் சிற்ப வேலைபாடுகளுடன் நவீனப்படுத்தல், புதியதாக தூண்கள் அமைத்து திராவிட சிற்பமுறையில் அழகுபடுத்தல். ஆலய சுற்றுமதில்கள் புதுப்பித்தல், அம்பிகையின் அலங்காரத் தோற்றம் கொண்ட சிலைகள் அமைத்தல், இரதோற் சவ இளைப்பாற்று மண்டபம், புதிய கருமபீடங்கள் அமைத்தல், இன்னோரன்ன பல திருப்பணிகள் நிறைவேற்றபட்டுள்ளன. ஆலய கிழக்கு வெளிவாசலில் 108 அடி உயர இராஜகோபுரம் அமைக்கப்பட்டுச் சிறப்புடன் காட்சியளிக்கின்றது.
மகாகும்பாபிஷேகம் கிரியைகள் யாவும் சிறப்புடன் நடைபெற அம்பிகை திருவருள் பாலித்துள்ளாள். நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் திருக்கோயில் ஆதின பிரதம சிவாச்சாரியார் ஸாகித்திய சிரோன்மணி, வித்யா கலாபநிதி.சிவாகம திவாகரன் சிவஸ்ரீ பரமசாமி குருமணி – முத்துக்குமாரசாமி சிவாச்சாரியார் அவர்கள் பிரதம சிவாச்சாரியராக இருந்து, கும்பாபிஷேககத்தை நடத்தி வைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் திருவருளும், ஆசியும், நிறைவோடு கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திப்போம்.
நயினை. நாக. குமாரசூரியர்
நல்லை ஆதின குரு முதல்வரின் அருளாசிச் செய்தி
ஆதிபராசக்தியாக விளங்குகின்ற அம்பிகை உமையவள் நயினையிலே ஸ்ரீநாகபூசணியாக எழுந்தருளி வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயத்தில் இன்று பெருஞ்சாந்தி எனப்படும் மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுவதையிட்டு பேருவகையடைகின்றோம்.
ஆன்மாக்களுக்கெல்லாம் அன்னைக்கு அன்னையாகத் தாய்க்குத்தாயாக விளங்கும் ஆதிபராசக்தி உமையவள் ஸ்ரீநாகபூசணியாக வழிபடும் அடியார்களின் அல்லல் நீக்கி ஆறுதலும் தேறுதலும் அள்ளிச் சொரிய வீற்றிருக்கின்ற அலை கடலின் நடுவிலே நயினாதீவிலே அழகிய வானளாவ உயர்ந்த இராஜகோபுரத்துக்கும் மூலஸ்தானத்துக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் இன்று மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
இந்தப் புண்ணியகைங்கரியம் பன்னிருவருடங்களுக்குக்கொரு முறை நடைபெறும். இன்று நிகழும் இப்பெருஞ் சாந்தி விழா நல்ல முறையில் சிறப்புற நிறைவேற எல்லாம் வல்ல அன்னையின் திருத்தாள்பணிந்து அருளாசி நல்கி அடியவர்கள் நலமே வாழப் பிரார்த்திகின்றோம்.
இதில் பங்கேற்கும் பக்தர்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழவேண்;டுமென்று நல்லைக்குருமணியின் கமல மலர்ப்பாதம் பணிந்து அருளாசி வழங்கி வாழ்த்துகின்றோம்.
"என்றும் வேண்டும் இன்ப அன்பு"
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிய
ஞானசம்பந்தபரமாசார்ய சுவாமிகள்
இரண்டாவது குருமஹாசந்நிதானம்
நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம், யாழ்ப்பாணம்.
"வேதங்கள் தொழுதேத்தும் வேதநாயகன் நாயகிக்கு பெரும் சாந்தி"
நந்தா வரமுதவு நயினை நகர் மேவும் நாயகிக்கு பெரும் சாந்தி
புவனம் பதின்னான்கையும் பூத்தவண்ணம் காப்பவளுக்கு பெரும் சாந்தி
பேதங்கள் அனைத்தும் பேதமில்லா பெருமாட்டிக்கு பெரும் சாந்தி
வேதங்கள் தொழுதேத்துத் வேதநாயகன் நாயகிக்கு பெரும் சாந்தி
சங்கு சங்கர நாயகி சஞ்சலங்கள் தீர்த்திடும் பூரணிக்கு பெரும் சாந்தி
அண்ட சராசரங்கள் பூத்திருந்து அனைத்துயிரும் காப்பவளுக்கு பெரும் சாந்தி
தரணியில் சாந்தி சமாதானம் நிலவ நாகநர்த்தனிக்கு பெரும் சாந்தி
நவசக்தி நான்முகி நாராயணி நாகபூசணித் தாய்க்கு பெரும் சாந்தி
தனக்கொருவர் ஒப்பிலா நயினை நகர் அன்னைக்கு பெரும் சாந்தி
தொல்புரத்தூர். க. லோகேஸ்வரன்
மணிபல்லவத்தின் கும்பாபிஷேகம் காண வாரீர்
மணிபல்லவ பீடத்துக்கு வாரீர் வாரீர்
மகத்தான தாயவளின் திரு குடமுழுக்கு காண வாரீர்
புனிதம் பெருகும் புவனேஸ்வரி பீடத்துக்கு வாரீர்
பாராளும் நாகபூசணியின் பக்திப் பெருக்கை போற்ற வாரீர்
புகழான நூற்றெட்டடி கோபுரத்தை காண வாரீர்
பணி செய்துயர்ந்தே பாராளும் கடல் கோபுரம் காண வாரீர்
பிணி தீர்க்கும் பிராட்டியின் திருக்கோவில் காண வாரீர்
பேசாப் பொருளெல்லாம் பேசும் திறன் காண வாரீர்
அதியுயர் சிற்பங்கள் கொலுவிருக்கும் அழகைக் காண வாரீர்
அதிசுந்தர நவதள நவகலச கோபுரம் காண வாரீர்
புருஷோத்தமனெனும் கலைஞனின் கலை வண்ணம் காண வாரீர்
புவன நாயகியின் திருக்கோவிலில் அழகைக் காண வாரீர்
அருளான அதிகார நந்தியை திருக்கலைக் காட்சியைக் காண வாரீர்
அதி உயர் கோபுரத்தில் சத்திபீட சரித்திரத்தை காண வாரீர்
பெருங் கோவிலென புகழ்விஞ்சும் நயினைப் பகுதிக்கு வாரீர்
பேரளம் பெருகும் கோவிலின் மகத்தான கும்பாபிஷேகம் காண வாரீர்
மதுரகவி. காரை. எம். பி. அருளானந்தன்
நயினை நாகபூசணியே நல்லருள் தரும் தாயே
அலைகடல் சூழ்ந்த நயினாதீவிலே எழுந்தருளி அருள்மாரி பொழியும் அம்பிகை ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயத்தில் இன்று மகாகும்பாபிஷேகம்.
விண்ணைத்தொடும் வண்ணக் கோபுரத்துக்கும் அடியார்களுக்கும் அம்மனுக்கும் மற்றும் பாரிவாரமூர்த்திகளுக்கும் இன்று நடைபெறும் கும்பாபிஷேகம் இனிதே நிறைவு பெற எல்லாம்வல்ல ஸ்ரீநாகபூசணித் தாயின் பாதாவிந்தங்களைப் பணிந்து ஆசிர்நல்கி வாழ்த்துகின்றோம்.
நயினை நாகபூசணியே நல்லருள் தரும் தாயே என மனமுருக வழிபடும் அடியார்களின் துன்பதுயரங்கள் நீக்கி இன்பவாழ் வளிக்கும் அம்பிகை ஸ்ரீநாகேஸ்வரித்தாய் எல்லோருக்கும் அருள் பாலிக்க வேண்டுமென்று பத்மமலர்ப்பாதம் வணங்கிப் பிரார்த்தித்து ஆசிவழங்குகின்றோம்.
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க"
சிவநெறிக்காலநிதி, கலாபூஷணம்,
இராசையா ஸ்ரீதரன்
Author
Kumarasooriyar
Kanapathipillai