Thillaiyampal Vidhyasalai

தில்லையம்பல வித்தியாசாலை

கிறிஸ்தவப் பாடசாலைகளில் நடைபெற்ற மத மாற்றத்தை கண்டித்து ஆறுமுக நாவலரின் பிரசாரங்கள் தீவிரமடைந்திருந்த காலம் இது. குடாநாட்டின் பல பாகங்களிலும் சைவப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. நயினாதீவிலும் 19ஆம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தில் ஆரம்பிக்கப்பட்ட சைவப்பாடசாலை தில்லையம்பல வித்தியாசாலையாகும். இதன் தாபகர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெரியார் சின்னக் குட்டியார் அவர்கள். அவர் தனது நண்பர் நயினைப் பெரியார் கதிரேசு அவர்களின் வேண்டுகோளுக்கமைய காலம் சென்ற தன் புதல்வன் தில்லையம்பலத்தின் பெயரால் இவ்வித்தியாலயத்தை நிறுவினார் என்பர். இதற்கான நிலத்தை திரு.மு.செல்லப்பா என்னும் வள்ளல் நன்கொடையாக அளித்தார். இக்காணி தற்போது நயினை மகா வித்தியாலய விளையாட்டுத்திடலுக்கு சற்று வடக்குப் புறமாக உள்ளது. பெரியார் சிவனடியார் அவர்களும் அவர் பின் அவரின் மகன் சட்டத்தரணி பொன்னம்பலம் அவர்களும் பாடசாலை முகாமைத்துவத்தை பார்த்து வந்தனர். கிராமத்தின் மாணவர்கள் இங்கு தம் கல்வியைத் தொடந்தனர்.
தில்லையம்பல வித்தியாலயத்தில் வித்துவ சிரோன்மணி கணேசையர் (புங்குடுதீவு சிவ ஸ்ரீசோமசுந்தரக் குருக்கள்) தலைமை ஆசிரியராக இருந்து அரும் பணியாற்றினார் இவர் பின் வேலணை தம்பு வாத்தியார் தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் 8ஆம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்பட்டது. சிறந்த சைவ ஆசார சீலரான இவரைப் பின்பற்றிய மாணவர்கள் சிறந்த ஒழுக்க சீலராகத் திகழ்ந்தனர். மாணவர்களின் தொகை பெருக உள்ளூர் பிரமுகர்கள் சிலரும் தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர். ஆரம்பத்தில் திருவாளர்கள் மு.பரமலிங்கம், கா.கந்தையா, என்போரும் பின்னர் ச.வைத்திலிங்கம், த.கதிரேசு, ப.சுந்தரம்பிள்ளை, வை.சடையப்பசுவாமி, மு.நாகலிங்கம், திருமதி.வை.இராசம்மா, செல்விகள் க.நாகம்மா, ச.சிவக்கொழுந்து ஆகியோரும் ஆவர். முதன்மை ஆசிரியர் தம்பு அவர்கள் ஆர்வமுள்ள படித்த இளைஞர்களை ஒன்று திரட்டி ஓய்வுவேளை களில் புராண படனம், பயன் விரித்தல் போன்ற துறைகளில் பயிற்சிகளை வழங்கினார். அமரர்களான திருவாளர் ப.கந்தசாமி, க.மாணிக்கம், த.அமர்தலிங்கம், கா.ஆறுமுகம் போன்ற புராண படனப்பரம்பரை தோன்றிற்று தம்பு வாத்தியார் நயினை மக்களின் மனத்தில் என்றும் நீங்காத இடத்தினைப் பெறுகிறார்.
தில்லையம்பல வித்தியாலயம் இவ்வாறு விருத்தியடைந்து வருகையில் முகாமையாளர் சட்டத்தரணி சி.பொன்னம்பலம் அவர்கள் 1926ஆம் ஆண்டு பாடசாலையின் முகாமைத்துவத்தை யாழ்ப்பாணம் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்திடம் ஒப்படைத்தார். சங்கத்தினால் புலோலியூர் வே.விசாகர் அவர்கள் முதன்மை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். கல்வித் தகைமை உடைய உதவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தகைமை பெற்றிருந்த மு.நாகலிங்கம், செல்வி க.நாகம்மா, என்போர் நிரந்தர ஆசிரியர்களாக ஏனையோர் இளைப்பாறிக் கொண்டனர். விசாகர் அவர்களது சேவை மாணவர் களாலும், பெற்றோராலும் புகழ்ந்து பேசப்பட்டது என அறிய முடிகிறது. 1928ஆம் ஆண்டு திருவாளர் ச.நா.கந்தையா அவர்கள் தலைமை ஆசிரியரானார். நயினை மக்களால் பெரிய உபாத்தியாயர் என அழைக்கப்பட்ட இவரது காலப்பகுதி நயினைக் கல்வி வளர்ச்சியில் பொற்காலமெனப் போற்றத்தக்கது. கனிஷ்ட பாடசாலைத் தராதரப் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றிச் சித்தியடையத் தொடங்கினர். இப்பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது.

Posted on 16/10/12 & edited 16/10/13 @ ,