நயினாதீவில் இடம்பெற்ற கண்டன ஊர்வலம்

புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர மாணவி சிவலோகநாதன் வித்தியா அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக்கண்டித்து நேற்றைய தினம் கொட்டும் மழையிலும் நயினாதீவில் இடம்பெற்ற கண்டன ஊர்வலம்.

நயினாதீவின் 3 பாடசாலைகளான மகாவித்தியாலயம், ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலயம், ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் நயினாதீவின் படகுரிமையாளர் சங்கத்தினர், பொது அமைப்புக்கள், நயினாதீவின் நாகவிகாரை விகாராதிபதிகள், கிராம அலுவலர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பியவண்ணம் நயினாதீவின் காவல்த்துறையினரிடம் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மகஜரையும் கையளித்தனர்.

அத்துடன் வித்தியாவின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும்தண்டனை வழங்கும் வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.

புங்குடுதீவு9ம் வட்டாரத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (19) என்ற மாணவிக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவர் கூட்டு வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கருதுகிறார்கள். இதன்மூலம், கும்பலொன்று திட்டமிட்ட ரீதியில் இந்த கொடூரத்தை புரிந்துள்ளது உறுதி செய்யப்படுகிறது.

நேற்றையதினம் பாடசாலை விட்டு திரும்பிய மாணவி வீடு திரும்பவில்லை. வீட்டிற்கும் பாடசாலைக்குமிடையில் இருந்த சிறிய பற்றைக்காடு போன்ற பகுதியில்த்தான் அவர் கடத்தப்பட்டு, வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை இச்சம்பவத்தின் கொலை சந்தேகநபர்களான புங்குடுதீவு வல்லனை சேர்ந்த ஒரு கூட்டம் பொலிசாரினால் அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர்.

முதலில் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு கூட்டத்தை பொலிசார் விசாரித்ததுடன், அவர்களின் வீட்டையும் சோதனையிட்ட போது அங்கு இரத்தத்துடன் இருந்த சேட் ஒன்றையும் கைப்பற்றி, அதன் சூத்திரதாரியான அவனது தம்பியான கொழும்பில் தொழில் புரியும் ஒருவரும் அதன் தொடர்ச்சியாக மற்றவர்களும் தேடப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.

Posted on 16/05/15 & edited 16/05/15 @ Nainativu, LK