நயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள்

இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. சிறு தீவுகளில் மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும், மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் காணப்படுவதாலும், போக்குவரத்து வசதி குறைந்த இடங்களாலும், ஒதுக்குப் புறங்களில் இடவரைபு பெற்று இருப்பதாலும், இயற்கை அனர்த்தங்களாலும், வலுவற்ற சூழல் பண்புகள் பொதுவில் காணப்படுவதால் இவைகளில் அபிவிருத்தி சவால் மிக்கதானதாக அமைந்துள்ளன. மேலும் வெளிச் சூழ்நிலைகளால் பாதிப்புக்குள்ளாகக் கூடியன.

சிறு தீவுகளின் வளர்ச்சி, அபிவிருத்தியை முன்னெடுப்பதில் பல இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளன. போக்குவரத்து, பொருளாதார அளவு இன்மை, தரமான வேலைப்படையை பெறமுடியாமை, மட்டுப்படுத்தப்பட்ட சேவை வசதிகள் முக்கிய பிரச்சினைகளாக இருக்கின்றன. கல்வி, சுகாதாரம், சேவை வசதிகள் வழங்க உள்ளூர் போதிய மனிதவளம் இன்மையால் பிறவிடங்களில் மனிதவளத்தைப் பெறவேண்டி இருப்பதுடன், அவர்களை தக்கவைப்பது பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. பிற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு போதிய வசதிகள் கிடைக்காமையால் அவர்களது சேவைகள் குறுகியதாகவும், தரம் குறைந்ததாகவும் அமைந்துவிடும் பண்பைக் காணமுடிகின்றது. மேலும் அண்மையாண்டுகளில் புவி வெப்பம் அடைந்துவிடுவதால் கடல் மட்டம் உயர்ந்து உயரம் குறைந்த சிறு தீவுகள் கடலுக்கு கீழ் சென்றுவிடும் என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது. மேலும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் பண்புகளும் அதிகரித்துச் செல்வதும், நம்பிக்கையைக் குறைத்துள்ளது.

மேற்குறிப்பிட்ட பொதுவான பிரச்சினைகள் மத்தியிலும், இன்று தீவுகளின் அபிவிருத்தி, பயன்பாடு பற்றி பலராலும் பேசப்படுகின்றன. முன்னர் யாராலும் தேடுவாரற்ற பல சிறு தீவுகள் இன்று பல காரணங்களால் தேசிய, சர்வதேச முக்கியத்துவம் பெற்று பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளன. பொருளாதாரம், சுற்றுச்சூழல், கேந்திரஸ்தானம் போன்ற காரணிகளால் முக்கியத்துவம் பெறலாயின. நாடுகளின் ஆள்புல நீர்ப்பரப்பு, பொருளாதார வலயம் பெரிதாக விரிவாக்கப்பட்டதால் சிறு தீவுகளின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளன. மேலும் சிறு தீவுகளை இன்று சுற்றுலா மையங்களாக, சமயவழிபாட்டு நிலையங்களாக மற்றும் சுற்றுச் சூழல் மேம்பாட்டுப் பகுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் தனித்துவிடப்பட்ட தீவுகள் இன்று சிறப்பான கடல்வழிப் போக்குவரத்தாலும், தகவல் தொடர்பாடல் விருத்தியாலும், அரசுகளிள் முழுமையான அபிவிருத்தி முறையாலும் (Inclusive Development Strategy) தேசிய அபிவிருத்தி நீரோட்டத்துக்குள் கொண்டுவரப்படும் பண்பை காணமுடிகின்றது. மேலும் பின்தங்கிய தீவுகளின் அபிவிருத்தி சிறப்பு பிராந்திய அபிவிருத்தி தந்திரோபாயங்கள் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் பல இடங்களில் காணப்படுகின்றது. சர்வதேச நிறுவனங்களைத் தேசிய அரசுகள் தத்தம் பகுதிகளுக்குள் இருக்கும் தீவுகள் பற்றிய அபிவிருத்தியில் கவனம் செலுத்துகின்றன. மாலைதீவு, சீ.செல்ஸ், மொறீசியஸ், பீஜி போன்ற நாடுகள் பெரும் எண்ணிக்கையான சிறு தீவுகளைக் கொண்டன. இதே போல் தென்பசுபிக் பொலிளேஷpயா, மைக்கிறளேஷpயா பகுதிகளில் பல சிறு தீவுகள் காணப்படுகின்றன. இத் தீவுகளின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு பல்வேறு தந்திரோபாயங்கள் கையாளப்படுகின்றன. இவைகளுள் பொருத்தமான தந்திரோபாயங்களை, யாழ்ப்பாணத் தீவுகளிள் குறிப்பாக நயினாதீவில் அபிவிருத்திக்கு மேற்கொள்ளமுடியும்.

யாழ்ப்பாணக் குடாநாடு 28 நடுத்தர, சிறு நுண் நிலத்திணிவுகளால் ஆனது. இதில் தென்மராட்சி, வடமராட்சி, வலிகாமம் ஆகியன நடுத்தர நிலத்திணிவுகளாகும். வேலணைத்தீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு, காரைநகர், நயினாதீவு, அனலைதீவு, மண்டைதீவு, எழுவதீவு ஆகியன மக்கள் குடியிருக்கும் முக்கிய தீவுகளாகும். வேலணைத்தீவு, புங்குடுதீவு, காரைநகர், மண்டைதீவு ஆகியன இப்பொழுது யாழ்ப்பாணக் குடாநாட்டுடனான வீதியில் இணைக்கப்பட்டு இருப்பதால் அவைகளின் தீவுத் தன்மையின் பண்பு சற்று குறைந்துள்ளது. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவதீவு ஆகியன இன்றும் பல நிலைகளில் தீவுப்பண்பைக் கொண்டுள்ளன. இவற்றுள் நயினாதீவு யாத்திரிக தலமாக இருப்பதால் பெரும் எண்ணிக்கையான இந்து, பௌத்தர்கள் தினமும் வந்து போகும் இடமாக இருக்கின்றது.

நயினாதீவு இன்று 3000 மக்களைக் கொண்டுள்ளது. 1946 இல் இத்தீவு 2640 பேரைக் கொண்டு இருந்தது. தொடர்ச்சியான குடிசன வெளியிடப்பெயர்வு இடம்பெற்று வந்ததால், இத்தீவின் குடிசன வளர்ச்சி மிதமாகவே இருக்கின்றது. பொதுவில், நயினாதீவை ஒரு குடியிருப்பாகக் கொண்டாலும் இத்தீவினுள் இனம் காணக்கூடிய ஒன்பது குடியிருப்புகள் காணப்படுகின்றன. அவையாவன தம்பகைப்பதி, வள்ளிக்காடு, இரட்டங்காலி, நடுவங்காடு, வெள்ளைபுற்றுமண்தரை, கிழக்குக் காடு, வங்களாவடி, மலையடி, கத்தியாகுடா.

இத்தீவின் தரைத் தோற்றம் சமதரையாக இருப்பினும், தீவின் மேற்குப்பகுதி ஒப்பீட்டு ரீதியில் சற்று உயரமாக இருக்கின்றது. மலையடிப்பகுதி 10 அடிக்கும் மேற்பட்ட உயரமுடையது. காலநிலை பொதுவாக யாழ்ப்பாணக் காலநிலையை ஒத்ததாக இருப்பினும், வெப்பம் சற்று கூடுதலாகவும், மழைவீழ்ச்சி சற்று குறைவாகவும், காற்றின் தாக்கம் கூடுதலாகவும் காணப்படுகின்றது. இத்தீவின் சராசரி வெப்பநிலை 29 ழ உ ஆகவும், மழைவீழ்ச்சி 1000 மி.மீ க்கு சற்று மேலாகவும் இருக்கின்றது. தீவாக இருப்பதனால் வருடத்தின் கூடிய காலம் காற்றின் தாக்கம் கூடுதலாக இருக்கின்றதுடன் சோளகக் காற்றின் தாக்கம் உயர்வாகவும் இருக்கின்றது. தரை கீழ் நீர் மக்களின் நீர்த் தேவை ஓரளவு பூர்த்தி செய்தாலும் கோடை காலத்தில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாதுள்ளதால், வேலணை சாட்டியில் இருந்து யாத்திரிகர்களுக்குத் தேவையான குடிநீரைக் கொண்டுவர வேண்டியுள்ளது.

நயினாதீவில் விவசாயம், குறிப்பாக நெற்செய்கை முன்னர் பெற்று இருந்த முக்கியத்துவம் இன்று இல்லை. வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், ஒப்பீட்டு ரீதியில் உற்பத்தி செலவு கூடுதலாக இருப்பதால் நெற்செய்கை பொருளாதார ரீதியில் பொருத்தமற்ற பயிராக மாறியுள்ளது தோட்டக் காணிகளில் கால போகத்தில் வெங்காயச்செய்கை குறிப்பிடத்தக்களவு இடம்பெறுகின்றது. நயினாதீவில் தென்னை மூலம் குறிப்பிடத்தக்க வருமானத்தை மக்கள் பெறுகின்றனர். தென்னை, பனை முக்கியமான பயிராக இருக்கின்றன. நாகபூசணியம்மனுக்கு நேர்த்திக் கடனுக்கு காணிக்கையாகக் கொண்டுவரப்படும் தென்னம் கன்றுகள் கிராமத்தில் தொடர்ச்சியாக நடப்படுவதால் தென்னஞ் செய்கை சிறப்பாக விருத்திபெற்று வருகின்றது. மேலும் இங்கு பலவகை தென்னை இனங்கள் காணப்படுவது ஒரு சிறப்பம்சம். பனம்பொருள் உற்பத்தியிலும் நயினாதீவுக்கு ஒரு சிறப்பிடமுண்டு.

இத்தீவின் மீன்பிடித் தொழில் அண்மை ஆண்டுகளில் நன்கு விருத்தி பெற்றுவருவதை காணமுடிகின்றது. இங்கு பிடிக்கப்படும் மீனின் ஒரு பகுதி உள்ளூர் தேவைக்கு பயன்படுத்தி மிகுதி புங்குடுதீவு மடத்து வெளி மீன் சந்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணச் சந்தைகளை அடைகின்றன. நயினைதீவின் உள்ளூர் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்தில் மீன்பிடி முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

நயினா தீவின் பொருளாதாரத்தில் வர்த்தகம், சேவைத் தொழில்களில் ஈடுபடுவோரின் பங்களிப்பு சில தசாப்தங்களுக்கு முன்னர் முக்கியத்துவம் பெற்றிருந்த பொழுதும், இப்பிரிவினர் இன்று யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்கும் வெளிநாட்டிற்கும் இடம் பெயர்ந்துவிட்டனர். மேலும் தென்னிலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும், அரச சேவையிலுள்ள நயினாதீவு மக்கள் எண்ணிக்கை இன்று வெகுவாக குறைந்துவிட்டது.

நயினாதீவு இந்துக்களுக்கும், பௌதர்களுக்கும் முக்கிய யாத்திரை தலமாக இருப்பதால் தினமும் பெரும் எண்ணிக்கையான யாத்திரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் யாத்திரிகர்களை அடிப்படையாக ஒரு பொருளாதார செயற்பாடுகள் வளர்ச்சி பெற்றுள்ளன. இவற்றுள் போக்குவரத்து துறையில், குறிப்பாக படகு சேவை செய்வோர், மற்றும் சிறு வர்த்தக முயற்சிகளில் ஈடுபடுவோர் குறிப்பிடத்தக்களவானவர்கள். வரும் காலத்தில் யாத்திரிகர்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள் விரிவடையும் என எதிர்பார்க்கலாம்.

நயினாதீவின் அபிவிருத்தி வளர்ச்சிக்கு பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

(i) குறிகட்டுவான் - நயினாதீவுக்கு இடைப்பட்ட பிரயாண வசதிகள் அதிகரிக்கப்படவேண்டும். தற்பொழுது கடல் பயணம் நேரம் எடுப்பதுடன் கூடிய நேரம் வெய்யிலில் நிற்க வேண்டியதாகவும் இருக்கின்றது.

(ii) கழுதைப்பிட்டிக்கும் - நயினாதீவுக்கும் இடையே படகுச் சேவை ஆரம்பிக்கப்படவேண்டும்.

(iii) சமய விழுமியங்கள் உள்வாங்கப்பட்ட சுற்றலா விடுதிகள் அமைக்கப்படவேண்டும்.

(iv) நயினாதீவின் குடிநீர் தேவையை சாட்டியில் இருந்தோ, அல்லது இரணமடு நீர்விநியோகத் திட்டத்தின் மூலம் தீர்க்கப்படவேண்டும்.
(v) நயினாதீவை தேசிய மின்சார வலைப்பின்னலுக்குக் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். (யேவழையெட நடநஉவசiஉவைல பசனை) கிராமம் முழுவதற்கும் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும். காற்றாலை மூலம் உள்ளூர் மின்சாரம் உற்பத்தி செய்ய காற்றாலை பண்ணை அமைக்க இங்கு சிறந்த வாய்ப்புண்டு - வருடத்தில்கூடிய காலம் வேகமான காற்று வீசுவதால் காற்றாலைப் பண்ணை அமைக்க நயினாதீவு சிறந்த இடமாகும். பெரிய காற்றாலை பண்ணை அமைக்கப்படின் மேலதிக மின்சாரத்தை தேசிய வலைபின்னலுக்குட்பாய்ச்சலாம்.

மீன்பிடித்தொழில் வளர்ச்சிக்கு கத்தியாக் குடாவில் ஓர் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்படவேண்டும்.

விவசாய விருத்திக்கு நயினாதீவில் ஒரு விவசாய விரிவாக்கக் காரியாலயம் அமைக்கப்படவேண்டும்.

நயினாதீவிலுள்ள மூன்று பாடசாலைகளும் புதுப் பொலிவு பெறுவதுடன் மகாவித்தியாலயம் LAB பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு பௌதிகவளம், மனித வளம், மேம்படுத்தப்படவேண்டும்.

நயினாதீவு மக்களின் சமூக சமுதாய விருத்தி ஒருங்கிணைந்த அபிவிருத்தி முன்னெடுக்கக் கூடிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நயினாதீவு மக்களின் ஒத்துமொத்த மேம்பாட்டை முன்னெடுக்க நயினாதீவு அபிவிருத்தி நிறுவனம் அமைக்கப்படவேண்டும். நயினாதீவு தற்போது தீவுகள் தெற்குப் பிரதேச செயலகத்துக்குள்ளும், வேலணை பிரதேசசபைக்குள், வேலணை கமநலசேவை மையத்துள்ளும், புங்குடுதீவு - நயினாதீவு பல நோக்குக் கூட்டுறவு சங்கத்துக்குள் இருப்பதால் தனது பிரச்சினைகளை சிறப்பாக முன்னெடுக்க முடியாதுள்ளது. முன்னைய நயினாதீவு கிராமச்சபை அக்கிராமத்தின் வாழ்வில் முழுமையாக பங்கு கொண்ட மாதிரி இப்போதைய நிறுவனங்கள் செயற்படுவதாக தெரியவில்லை. இதனால் நயினாதீவின் குரல் கேட்கக்கூடிய ஒரு கூட்டமைப்பு ஏற்பாட்டின் இத்தீவின் அபிவிருத்தியைத் துரிதப்படுத்தலாம். அபிவிருத்தியில் சகல மக்களும் பங்கு கொள்ள வேண்டும். கிடைக்கும் பலன்களும் சகலருக்கும் சென்றடைய வேண்டும். அபிவிருத்தியை முன்னெடுத்து பின்தங்கும் மக்களை முன்நகர்த்துவோம்

Posted on 03/12/14 & edited 02/04/15 @ Nainativu, LK