சதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி

“அந்தணர் என்போர் அறவோர் மற்(று)
எவ்வுயிர்க்கும்
செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப் பெருமானின் குறளுக்கேற்ப வாழ்ந்துவரும் சிவஸ்ரீ. சம்பு மஹேஸ்வரக் குருக்கள் ஐயா வின் சதாபிஷேகம் நயினை நாகபூஷணி அம்பாள்,அருளாசியுடன் சுதுமலை புவனேஸ்வரி ஆலயத்தில் நடைபெற்றது.

சதாபிஷேகம் பிரயோகாச்சார்யர்களாக டாக்டர் யு.பு.ஸ்ரீநிவாஸ சாந்திரிகள் (ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோவில் சென்னை), சிதம்பர நடராஜ பூஜ்யஸ்ரீ.ஜி .பரமேஸ்வர தீட்சிதர்(ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜப் பெருமான் திருக்கோவில்.சிதம்பரம்) கலந்துகொண்டனர்.

ஈழத்து அந்தணப் பெருமக்களும் கிரியா நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தமது ஆசீர்வாதத்தை வழங்கினர்.அந் நன்னாளில் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை மொழிபெயர்த்து உருவான “நெடுமால் பெயராயிரம் “ அதோடு லலிதா அஷ்டோத்தர சதநாமாக்களையும் சங்கரபாக்ஷ்ய மரபில் தமிழ் உரையோடு உள்ளடக்கிய “சீதா மஹேஸ்வரம்” என்ற சதாபிஷேக சிறப்பிதழும் அன்றைய தினம் வெளியிடப்பட்டது .

ஈழத்து மக்கள் அனைவரினதும் வணக்கத்திற்கும், மதிப்புக்கும் உரியவராகத் திகழ்பவர், இவர் சக்திபீடங்களில் சிறப்புபெற்ற நயினையம்பதியில் பிறந்து இப் பீடத்திற்கு நிகாரகதிகழும் சுதுமலையில் மணவாழ்வில் இணைந்து இன்று இந்த இருபீடங்களுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி ,பிறந்த மண்ணுக்கும் ,புகுந்த மண்ணுக்கும் பெருமை தேடித்தந்து சதாபிஷேகம் கண்ட சிறப்புக்குரியவர்.

அந்தன சிரேஷ்டரான சிவஸ்ரீ மஹேஸ் வரக் குருக்கள் இலங்கையின் மூத்த சிவாச்சாரியப் பெருமக்களுள் ஒருவராகத் கருதப்படும் பெருமைக்கும் ,புகழுக்குமுரிய உத்தமராவார் .

குருக்கள் தமது குருகுலக் கல்வியை சிறந்த அந்தணக் குருமார்களான கோண்டாவில் நாராயண சாஸ்திரிகள், யாழ்பாணம் சீதாராம சாஸ்திரிகள் ,நயினாதீவு சிவஸ்ரீ கைலாசநாதக் குருக்கள் ஆகியோரிடம் பயின்று அந்தண குலத்துக்குரிய சிறப்புகளை பெற்று கொண்டவர்.அதே போன்று பெருமைக்குரிய கைலாசநாதக் குருக்களால் ஆச்சார்ய அபிஷேகம்செய்து வைக்கப்படவர். 1966 ஆம் ஆண்டு சுதுமலை ஆலயத்தில் தமது முதல் உற்சவத்தை தொடக்கி குலப்பெருமைக்கு வித்திட்டவர் .

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் மூன்று பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகங்களை (1983,1999,2014)பிரதம குருவாக நடாத்தியமை அவருக்குள் இருக்கும் அம்பாளின் அருட்சக்தியை புலப்படுத்துகின்றது.

அக்காலந்தொட்டுஆயிரக்கணக்கான கும்பாவிஷேக வைபவங்களில் பங்கேற்றதுடன் 250 மேற்பட்ட மஹோற்சவங்களுக்கு பிரதம குருவாக இருந்து பணிசெய்தமை இவருக்கு கிடைத்த அரும்பேறாகும். பத்து ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவராகப் பணிபுரிந்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக விளங்கிமையும் தொடர்ச்சியாக சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதியாக விளங்கியமையும் குருக்களின் வாழ் நாள் சிறப்பு பணிகளாக நாம் போற்றலாம் .

கல்வியும், ஞானமும்,ஒழுக்கமும் நிறைந்த குருக்கள் அவர்கள் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். இருபெரும் அருட்சக்திகளின் நித்ய உபாசகராக விளங்கிய குருக்கள் ஐயா இந்த எண்பது வருட கால வெள்ளத்தில் எத்தனையோ சுக, துக்க நிகழ்வுகளை தாண்டி வந்துள்ளார்.இவரது புலமையும் ,சிறப்புக்களும் காரணமாக எத்தனையோ விருதுக்காய் பெற்றவர் .

“கிரியா கலாப முக்தாமணி”,” ஆகம வித்தகர்” ,“கிரியாதத்துவநிதி” ,முத்த சிவாச்சாரியார் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

தினமும் அன்னதானம் செய்பவர்களும் இளமையிலிருந்தே அக்கினி வழிபாடு செய்பவர்களும் மாதந்தோறும் ஏகாதசி விரதத்தில் உபவாசம் இருப்பவர்களும் பதிவிரதைகளும் வேதாந்த ஞானம் பெற்றவர்களும் ஆயிரம் பிறைகண்ட உத்தமர்களும் இவ்உலகில் என்னால் வணங்கப்படும் தகுதியுடையவர்கள் .
ஸ்ரீமத் பாகவத்தில் கிருஷ்ணர்

Posted on 17/03/15 & edited 31/03/15 @ Jaffna, LK