விமானப் புனரமைப்பு

நாகபூஷணி அம்பாள் கோயிலின் விமானப் புனரமைப்பு வேலையை, ஸ்தபதிகள் பரம்பரையில் உதித்தவரும் சிற்பத் தொழிலில் புகழ் பெற்றவருமாகிய காரைக்குடி திரு. எம்.செல்லக்கண்ணு ஸ்தபதியார் 1951 ஆம் ஆண்டு தை மாதம் மேற்கொண்டார்கள்.

பாண்டிய நாட்டுச் சிற்ப முறையில் இரண்டு நிலை விமானம் அமைக்கப்பட்டது. அம்பாள் கோயிலின் விமான வேலையை முடித்த பின்னர் பரிவார மூர்த்திகளின் பண்டிகைகளும் திருத்தியமைக்கப்பட்டன. 26 - 04 - 1951 இல் ஸ்ரீ நாகபூஷணாம்பிகை புநராவத்த சம்புரோஷன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது வெளிவந்த விஞ்ஞாபனப் பத்திரிகையில் இந்தத் தலத்தின் பெருமை இரத்தினச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அது பின்வருமாறு.

ஸ்ரீ விராட்புருடனது சரீரமாகிய பிரமாண்டத்தின் இடை நாடிக்கு ஸ்தானமென்று சாந்தேக்கியம் முதலிய உபநிஷந்துக்களிலே எடுத்தோதப்பட்டதும், இவ்விலங்கா தீபத்தின் கண்ணே அநேகம் சிவஸ்தலங்களோடு கூடியதும், வடமேற்றிசையில் ஆழிய சாகரம் மத்தியில் தோன்றி சப்ததுவீபங்களுட் சிறப்புற்று விளங்கும் நயினாதீவில் இற்றைக்குப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் சர்வலோக ரஷ்கியாகிய உமையம்மையாருக்குப் பிரபல வாசஸ்தானங்களாயமையப்பெற்ற அறுபத்து நான்கு பீடங்களுள் ஒன்றாயதும், நாகர்களினால் பூஜிக்கப்பட்டதும், அருச்சுனன் முதலிய அரசர்களால் தரிசிக்கப்பெற்றதும், சிவானுபூதிச் செல்வர்களாலும் பிறராலும் சிவபூமி, சுவர்ண பூமி, புண்ணிய பூமி, அனுக்கிரகஸ்தலம் என்று வியந்து கூறப்பெற்றதும், இவ்விலங்காதேவியின் பராசக்திக்கு முக்கிய ஸ்தானமாகவுள்ளதும், சர்வான்மாக்களுக்கும் மனோ பிஷ்டப்படி அனுக்கிரகிக்கும் சர்வரோக நிவாரணியும், ஆன்மாக்களது தியானாதிகளுக்குத் தாம் அகப்படுதல் வேண்டு மென்னுந் திருவருளினாலே சக்திகாரியமாகிய உருவத் திருமேனிகொண்டு திவ்விய மந்திர சிம்மாசனத்தின்மீது ஸ்ரீ நாகராஜேஸ்வரி எழுந்தருளியிருக்கும் திரு ஷேத்திரத்திலே......

சிலாபத்திலுள்ள முன்னேஸ்வரத்தில் வடிவாம்பிகைக்கு ஸ்ரீ சக்கரபூசை நடாத்திவந்த பிரமஸ்ரீ சோமஸ்கந்தக் குருக்களின் சீடராகிய நயினாதீவு பிரமஸ்ரீ சுவாமிநாதக்குருக்கள் அவர்கள் ஸ்ரீ சக்கர பூசையை நாகேஸ்வரி ஆலயத்திலும் ஆரம்பித்து வைத்தார்கள். குருக்கள் அவர்கள் கோயிற் கிரியைகளைப் பயபக்தியுடனும் முறை பிறழாமலும் செய்வதைப் பார்த்துக்கொண்டிருப்பவர் உள்ளத்தில் பக்தி தானாகவே அரும்பிவிடும். இவரிடம் கற்ற நயினாதீவு பிரமஸ்ரீ கயிலாயநாதக் குருக்கள் அவர்களும் கோயிற் கிரியைகளை முறையாகச் செய்வதிற் பிரசித்தி பெற்று விளங்குகின்றார்கள். பிரம்மஸ்ரீ சுவாமிநாதக் குருக்கள் அவர்களின் மகன் சிவஸ்ரீ நா. பரமேஸ்வரக் குருக்கள் அவர்களும் கோயிற் கிரியைகளைச் செவ்வனே செய்து வருகிறார்கள்.

கோயில் விக்கிரகங்களின் சிறப்பைப் பற்றி ஸ்ரீ செல்லக்கண்ணு ஸ்தபதியாரீ கூறிய கருத்து வருமாறு:

"மூலஸ்தான விக்கிரகத்தின் அமைப்பைப் பார்த்தால் அது ஆயிரம் வருடங்களுக்கு முந்தியதாகப் புலப்படுகிறது. ஆனால், நாகப் பிரதிஷ்டை இதற்கு முன்னால் ஏற்பட்டிருக்கலாம். மூலஸ்தான விக்கிரகத்துக்குப் பின்னால் உள்ள நாகபடம் பார்க்கப் பயங்கரமாக விருக்கிறது. சீறுவதுபோல் இருக்கிறது.

ஸ்ரீ நாகபூஷணி உற்சவ விக்கிரகம் லட்ஷணமாகவும், சாந்தநித்தியம் பொருந்தியதாகவும், தேஜோமயமாகவும் இருக்கிறது.

நவராத்திரி காலங்களில், ஸ்ரீ சக்கரபூசையின் மகத்துவத்தினாலும் மற்றும் சில அமானுஷிக காரணங்களாலும் இவ்விக்கிரகம் அசாதாரண சோபையுடன் காட்சியளிப்பதை எவரும் கண்டு களித்திருக்கலாம்.

உற்சவ விக்கிரகம் சுமார் 500 வருடத்திற்கு முந்தியதாகத் தெரிகிறது. இத்தகைய பிரகாசமுள்ள விக்கிரகங்களைக் காண்பதரிது.

கோயிலிலுள்ள ஸ்ரீசக்கரம் பூப்பிரஸ்தாதம்; செப்புத் தகட்டில் சாஸ்திரீய முறையில் செய்யப்பட்டிருக்கிறது”.

Posted on 13/02/13 & edited 13/02/13 @ ,