பாமாலை சூடிய பாவலர்

இத்தகைய மகிமை பொங்கும் தலத்தின்மீது பண்டைக்காலத்தில் புலவர் பலர் தோத்திரப் பாடல்களும் பிரபந்தங்களும் இயற்றியிருத்தல் கூடும்.அவை யாவும் பேணுவாரின்றி மறைந்துவிட்டன. நாகேஸ்வரி அம்பாள் மீது வண்ணைநகர் திரு. அமரசிங்கப் புலவர் அவர்கள் பாடிய 'நயினை ஊஞ்சல்' 1880 ஆம் ஆண்டு ஆடி மாதம் அச்சிடப்பெற்றுள்ளது. இவருடைய வரலாறு பூரணமாகத் தெரியவில்லை. நயினாதீவுத் தொடர்புடையவரோ என்பதும் தெரியவில்லை. இதன் பிரதியொன்றை எனக்குக் காட்டி அதனைப் பிரதிசெய்ய அனுமதி தந்த யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி நூல்நிலையப் பாதுகாப்பாளர் திரு. கே. செல்லையா அவர்களுக்கு நான் பெரிது கடப்பாடுடையேன். மிகவும் பிற்காலத்திலிருந்தவரும் அராலியிற் பிறந்து அனலைதீவு, நயினாதீவு, கரம்பன் முதலிய இடங்களில் வசித்துவந்தவருமாகிய வரகவி முத்துக்குமாரப் புலவர் நாகேஸ்வரி மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். பத்துச் செய்யுளும் விலைமதித்தற்கரிய பத்து வலம்புரிச் சங்கு எனக் கூறலாம். பத்து முத்தெனிலும் ஒக்கும். இருபதாம் நூற்றாண்டில் வரகவிப் புலவராக விளங்கிய நயினாதீவு நாகமணிப் புலவர் அவர்கள் நயினை நிரோட்டயமக வந்தாதி என்ற சிறந்த பிரபஞ்சத்தை இயற்றி "கற்றாளைத் தண்டுக்குப் பித்தளைப் பூணிட்டது போல் ஓர் உரையும் வரையத் துணிந்தது கற்றோர்க்கு நகைப்பையே உண்டாக்கும். ஆனால் அறிஞர்கள் என் வலுவுடை நூலைத்தழுவிடலின்றி உலகமாதாவாகிய ஸ்ரீ பரமேஸ்வரியின் திரு நாமத்தின் பொருட்டு இதிற்றோன்றுங் குற்றங் களைந்து குணத்தழீக் கொள்ளுமாறு பணிவோடு வேண்டுகின்றேன்" என்று புதியதொரு முறையில் அவையடக்கம் கூறி அந்நூலினை 1930 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்த வரகவி இயற்றிய நயினை மான்மியம் எனும் மதிப்பிடற்கரிய தல புராணம் இன்னும் அச்சுவாகனமேறாது கையெழுத்துப் பிரதியாகவே புலவர் அவர்களுடைய மகன் திரு. பொன்னுத்துரை அவர்களிடம் இருக்கின்றது. புலவர் அவர்களுடைய சகோதரர் தியாகர் என்பவர் மூலமாக 1936 ஆம் ஆண்டளவில் சில பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தேன். அளவிறந்த ஞாபகசக்தியுடைய திரு. தியாகர் அவர்கள் நயினை மான்மியம் முழுவதையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தார். புலவருடைய தனிப் பாடல்கள் பலவற்றைச் சொல்லிச் சொல்லி மகிழ்வார். புலவர் அவர்கள் செம்மறியாடோன்றுக்குப் பாடிய சரம கவி எவர் மனதையும் ஈர்க்குந் தன்னமையது. புலவர் அவர்கள் இயற்றிய நயினை மான்மியத்தின் சிறப்பினை எடுத்துக் கூற இது ஏற்ற சந்தர்ப்பமன்று. 'இந்தக் கலைக்களஞ்சியம் இதுவரை வெளிவராதிருப்பது பொதுவாக சைவமக்களுக்கும் சிறப்பாக நயினையம்பதியினருக்கும் ஒரு பெருங்குறை என்றே வருத்தத்துடன் குறிப்பிட விரும்புகின்றேன். இந்நூலின் கையெழுத்துப் பிரதியை என்னிடம் தந்த புலவர் மகன் திரு. பொன்னுத்துரை அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி உறித்தாகுக. இவர்கள் இப்பொழுது காலஞ்சென்று விட்டார்கள். அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தியடைவதாக. பாரதியடியான் எனப் பாராட்டப்பெற்ற ஆசிரியர் திரு வி. குகசரவணபவன் அவர்கள் 1909 ஆம் ஆண்டிற் பிறந்து தமது 40 ஆம் வயதில் மறைந்து விட்டார். தட்டுத் தடக்கின்றிக் கவிபாடும் சக்தி இயல்பாகவுள்ளவர். வேலணை திரு ம. தம்பு உபாத்தியார் அவர்கள் 'நயினை நாகேஸ்வரி பதிகமும், திருவிரட்டை மணிமாலையும்' எனும் பாடலை 1921 ஆம் ஆண்டில் பாடியுள்ளார்.

நயினாதீவுச் சாமியார் என்றழைக்கப்படும்
திருப்பெருந்திரு. முத்துக்குமார சாமிகள்

நயினாதீவுச் சுவாமிகள், கவியோகி சுத்தானந்த பாரதியார் போன்ற மாகான்களும் அம்பாளுக்கு அருட்பாமாலை சூட்டியுள்ளனர்.
இவ்வாறு நயினாதீவிலுள்ள புலவர்களும், அம்பாள் கடைக்கண்ணோக்கம் பெற்ற பிறதேயப் புலவர்களும் நாகேஸ்வரி மீது பக்திச் சுவை நிறைந்த பாமாலைகளைச் சூட்டி மகிழ்ந்தார்கள்.


நயினைக் கோயில் மூலஸ்தான மூர்த்தி

Posted on 15/02/13 & edited 15/02/13 @ ,