பழைய துறைமுகம்

நயினாதீவு பண்டைக்காலத்திற் சிறந்த ஒரு துறைமுகமாக விளங்கிற்றென்பதற்கு ஐயமில்லை. தென்னிந்தியாவிலிருந்து அந்நிய நாடுகளுக்குக் கப்பல்கள் செல்லும் பாதையில் நயினாதீவு இருக்கின்றமையால், தமிழ் நாட்டுக் கப்பல்களும் அந்நிய நாட்டுக் கப்பல்களும் இத்துறையிற்றங்கியே சென்றிருக்கக் கூடும். இத்தீவின் மேற்குக் கடற்கரையில் படகுத்துறை என்ற பெயரால் ஓர் இடம் இன்றும் அழைக்கப்பட்டுகின்றது. மேற்குப் பகுதிக் கடல் மிகவும் ஆழமாகவும் பெரிய கப்பல் போக்குவரத்துச் செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் நாகம்பாள் கோயிலிற் கண்டெடுக்கப்பட்ட சிலாசாசனமும் இக்கொள்கையினை வலியுறுத்துகின்றது. இச்சாசனம் கி, பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் பொலநறுவையிலிருந்து அரசாண்ட மகாபராக்கிரமவாகு என்பவனால் பொறிக்கப் பெற்றது. இக்கடலில் நாவாய்கள் காற்றில் அகப்பட்டு உடைந்து போனால் எவ்வித முறை கையாளப்பட வேண்டுமென்பது இச்சாசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. எனவே கப்பல்களிற் போக்குவரத்துச் செய்தவர்களும் வணிகரும், நயினாதீவிலுள்ள ஆலயத்தை தரிசித்திருத்தல் கூடுமென ஊகிக்க இடமுண்டு.

Posted on 13/02/13 & edited 13/02/13 @ ,