இப்போதுள்ள கோயிலமைப்பு

நயினாதீவின் கிழக்குத் திசையிற்றான் துறைமுகம் உண்டு. இத்துறைமுகத்திலிருந்து செல்லும் பாதை அம்பாளின் கீழைவீதி வரை சென்று பின்னர் தெற்கு நோக்கிச் செல்கின்றது. எனவே நயினாதீவுத் துறைமுகத்தில் வந்து இறங்குகின்ற சகலரும் அம்பாளின் விடை பெற்றே ஊருக்குள் உலாவவேண்டும் என்ற முறையிற் கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதியுடையதாய்க் கட்டப்பட்டுள்ளது. யாத்திரீகர் நாவாயில் வரும்பொழுதே தூரத்தில் தூலலிங்கமாகிய கோபுரத்தைத் தெரிசித்து புனித தலத்திற் கால் வைக்கின்றனர். கோயிலும் அதனைச் சார்ந்த நிலமும் 150 லாச்சம் விஸ்தீரணமுள்ளது. கோயிலும் வீதியும் 15 பரப்பு வரை இருக்கும். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனு மும்மையானும் சிறந்து விளங்குவது இந்த நாகேஸ்வரி ஆலயமாகும். கோயிலுக்குத் தென்புறத்திலும் வடபுறத்திலும் தீர்த்தம் உண்டு.

இராமலிங்கர் இராமச்சந்திரர்
யாழ்ப்பாணக் கச்சேரியில் சைவசமயக் கோயில்களைப் பதிவு செய்து வைத்திருக்கும் பழைய இடாப்பு ஒன்று உண்டு. இது 1882 ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்டது. அதில் இந்த நாகபூஷணி அம்பாள் ஆலயத்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் விவரம் பின்வருமாறு:

நாகபூஷணி அம்மன் கோவில்
இராமலிங்கர் இராமச்சந்திரர் 1788 இல் கட்டியது.
மனேச்சர்: இராமலிங்கர் கார்த்திகேசரும் பிறரும்
கற்கட்டடம்.
திருவிழா: ஆண்டுக்கொருமுறை ஆணி 10 ஆந் தேதி தொடக்கம் 20 ஆந் தேதிவரை 10 நாட்கள் திருவிழா.
கோயில் வீதியில் மக்கள் அம்பாளைக் காவிக்கொண்டு வலம் வருதல் அல்லது தேரில் வலம் வருதல்.
திருவிழாக் காலங்களில் 10,000 பேர்வரை வருகின்றனர். யாழ்ப்பாணத்திலும் அயலிலுள்ள தீவுகளிளுமிருந்து யாத்திரீகர் வருகின்றனர்.
மேலே குறிப்பிட்ட இராமச்சந்திரனின் ஆண் சந்ததியினரே இக்கோயில் மனேச்சராக இருந்து வருகின்றனர் எனச் சொல்லப்படுகின்றது.

காலத்துக்குக் காலம் இக் கோயிலில் அநேக திருப்பணிகள் நடைபெற்று வந்துள்ளன. திருக்கோயிலின் கீர்த்திக்கியைய வானுற ஓங்கிநிற்கும் கோபுரமொன்று கிழக்கு வாயிலில் அமைக்கப் பெற்றுள்ளது. இத்திருப்பணியில் வட்டுக்கோட்டையைச் சார்ந்த இரகுப்பிள்ளை மணியம் அவர்கள் அதிக அக்கறை எடுத்து வந்தார்கள். பின்னர் வேலனைச் சோமசுந்தரமணியம் அவர்களும் இத்திருப்பணியில் ஈடுபட்டுழைத்தனர். இந்தக் கோபுரம் 1935 ஆம் ஆண்டளவிற் கட்டப்பெற்றது. இந்தக் கோயில் ஏனைய சாதாரண கோயில்களைப் போலவே கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் முதலியவற்றைக் கொண்டுள்ளது. கோயிலின் தென்புற உள்வீதியில் தேவஸ்தான அலுவலகம் உண்டு. மேற்கு வீதியில் பிள்ளையார் கோயில், வாகனசாலை, சுப்பிரமணியர் கோயில் என்பவை உண்டு. கிழக்கு வீதியில் நவக்கிரகங்கள், வைரவர் கோயில் முதலியன உண்டு. தேரோடும் வெளிவீதியில் வேப்ப மரங்கள் காணப்படுகின்றன. யாத்திரீகர் தங்குவதற்கு வசதியான கிழக்கு மடம், மேற்கு மடம், தெற்கு மடம், தென்மேற்கு (சொமபதி) மடம், வடமேற்கு (நகரத்தார்) மடம், வடக்கு (இளந்தளையசிங்க முதலியார், வட்டுக்கோட்டை) மடம், குணரத்தின மடம் ஆதியன உண்டு.

Posted on 13/02/13 & edited 13/02/13 @ ,