சுவாமி விவேகானந்தர்

முன்னுரை:

புண்ணிய பூமியாம் பாரதத்தில் வந்துதித்த உத்தம புத்திரர் சுவாமி விவேகானந்தர். அம்மகான் பாரதத்தை மட்டுமன்று வையகத்தையே வாழ்வித்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றையும், உபதேசங்களையும், ஆற்றிய சேவைகளையும் மிகச் சுருக்கமாக இயல், இசை, நாடக வடிவில் அமைத்து அளிக்கின்றனர் பலர். சிக்காகோ சர்வசமய மகாநாட்டில் சுவாமி அவர்கள் உரையாற்றிய நூற்றாண்டு நிறைவை நினைவு கூறுகின்றோம்.

காட்சி 1
(தாயார் புவனேஸ்வரி சற்புத்திரனை வேண்டிச் சிவனை வணங்கினார். சிவன் கனவில் தோன்றி வரமருளிய செய்தியைக் கணவன் விசுவநாத தத்தருக்கு எடுத்துரைத்தார்.)

புவனேஸ்வரி அம்மையார் (கணவனிடம்)

1. பல்லவி

அப்பனை வேண்டி நின்றேன் - அம்மை
அப்பனை வேண்டி நின்றேன் ( அப்பனை)

அனுபல்லவி

ஒப்பிலாத் தேவா உன்போல்
ஒரு மக வருள்வாய் என்று ( அப்பனை)

சரணம்

அப்பன் கனவில் வந்தான்
அருள்புரிந் தேன்நான் என்றான்
செப்பரும் ஞானசீலச்
செல்வன் உதிப்பான் என்றான் (அப்பனை)

காட்சி 2

(தாயார் குழந்தையைக் கொஞ்சி மகிழ்தல்)

2. தாலாட்டல்

செல்வக் குழந்தையடா - நரேன் நீயும்
தெய்வக் குழந்தையடா - என் (செல்வக்)

வையகம் வாழ்வு பெறச் - சங்கிராந்தி
வந்தவதரித்த யோகா (செல்வக்)

பாரதம் வாழ்வு பெற - வந்த
பாக்கியமே என்செல்வா (செல்வக்)

3. சகோதரிமார்:

குறும்புகள் செய்கின்றானே - நரேன் பொல்லாக்
குறும்புகள் செய்கின்றானே - அம்மா (குறும்புகள்)

சின்னஞ் சிறு வயதில்
எம்மை எல்லாம் துரத்தி
என்ன என்ன குறும்பு
இவன் செய்கின்றான் பார் அம்மா (குறும்புகள்)

4. தோழர்:

விளையாட்டில் வீரனம்மா - நரேன்
வேடிக்கை மன்ன னம்மா
அழையா திருந்தால் - எம்மை
அடிக்கவும் வாரன் அம்மா (விளையாட்டில்)

தாயார் அறிவுரை (வசனம்)

நரேன், கோடிக்கணக்கான இந்துக்கள் கங்காதேவியைப் போற்றி, அப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடும் மகா சங்கிராந்தி புண்ணிய தினத்தில் அவதரித்தவனடா நீ. அவ்வாறு உதித்த தெய்வக் குழந்தையாகிய நீ சாதாரண சிறு குறும்புகள் செய்யலாமா?
சிவனார் எனக்களித்த செல்வமல்லவா நீ. இங்கே வா. நான் பாரத இராமாயணக் கதைகள் வாசித்துக் காட்டுகிறேன். இராமனையும், சீதையையும் வணங்கிப் போற்றுவாயாக.
(இராமாயணம் படித்துக் காட்டுதல்)

5. நரேன் சீதாராமரை வணங்கல். ஆடிப்பாடல்.

தசரத நந்தன ராஜாராம்
ரகுபதி ராகவ ராஜாராம்

இராவண சங்கார ராஜாராம்
ஜானகி மணாள ராஜாராம்

கோதண்ட பாணி ராஜாராம்
கெளசல்ய புத்திர ராஜாராம்

சீதாராம் ஜெய சீதாராம்
ராம ராம ஜெய சீதாராம்

(ஒவ்வோர் இரண்டடி ஈற்றிலும் மீட்டுப் பாடலாம்)

6. விவேகானந்தர் துறவறம் வேண்டும், தான் சீதாராமரை வணங்கேன்.

இல்லறம் வேண்டேன் அம்மா - நானும்
இறைவழி நிற்பேன் அம்மா அம்மா (இல்லறம்)

வல்வில்லை ஏந்திடும் ராமனை - என்றும்
வணங்கிடேன் சீதையொடே - யானும் (இல்லறம்)

தொல்லை மறைகள் துதித்திடும் அந்தச்
சிவனையே போற்றுவேன் – சிந்தையில் (இல்லறம்)

திரைக்குள்: உயிர்கள் எல்லாவற்றிடமும் கருணை காட்டும் மைந்தனின் பண்பு கண்டு அன்னை மகிழ்ந்தாள். இரந்து வருவோர்க்கும் வாரிக் கொடுத்தான், நரேன் ஆறு வயதிலேயே.

7. (விருத்தமாகவும் பாடலாம்) வேறுவிதமாகப் பாடுதல் நன்று.
1) அன்பால் உள்ளம் உருகியது
ஆருயிர் மாட்டப் பாலனிடம்
என்பே இல்லாப் புழுவிடமும்
இரக்கம் உதித்த தவனுளத்தில்

விலங்கு பறவை மனிதரென
வேற்றுமை இன்றித் துயர்துடைக்கக்
கலங்கும் மகனின் கருணையுளம்
கண்டே மகிழ்ந்திட்டாள் அன்னை

2) அச்சம் அறியா அவனுளத்தில் - அன்பு
அணை யேது மின்றிப் பெருகியதே
மெச்சு கருணை விலங்கு பறவைகள்
மீதும் நலிந்தவர் மீதும் வைத்தான் (அச்சம்)

சாதுக்கள் ஏழைகள் வந்துவிட்டால் - அள்ளித்
தானம் கொடுத்திடுந் தன் மகனை
ஏதுந் தடுக்க வகையறியா - தன்னை
எண்ணி மகிழ்ந்தாள் அருள் உளத்தை

8. 1) வீர தீரவிளை யாட்டுக்களில் நரேன்
வேண்டும் பயிற்சிகள் பெற்று நின்றான் (வீர)

சூரனுமாகி மல்யுத்தப் பயிற்சிகள்
தோணிக ளோட்டலும் தான்பயின்றான் (சூர)

வாளினை ஏந்தி அவன்புரி சாகசம்
வாய்பிளந் தேபலர் பார்த்து நின்றார் (வாளி)

காளை வயதை யடையுமுன்னே நரேன்
கட்டுடல் பெற்ற தோர் காளையானான் (காளை)

2) கல்லூரி வாழ்விலே பாடங்களை நரேன்
கற்ற திறமைபே ராசிரியர்
எல்லவருங்கண்டு போற்றி மகிழ்ந்தனர்
இறை சிந்தனையாய்வுங் கூடியதே

9. சாதுக்களுடன் விசாரணை

1) சாதுக்களை நரேன் நாடினன் - அவர்
தம்மையே கேள்விகள் கேட்டனன்
ஏதுக்கு வீண் தவம் கண்டதுண்டோ - அந்த
ஈசன் என் றேயொரு வன் உளனோ

வேறு
2) கடவுள் கடவுள் என்கின்றீர்
கண்டதுண்டோ என்றேனும்
கண்டதுண்டு ஆம் என்னில்
காட்டுவீரோ கூறுவீர்

3) என்று என்றே சாதுக்கள்
எல்லோரையும் வினவினன்
ஒன்றும் தெளிவாய் உரைத்திலரே
உண்மை நாட்டம் கூடியதே

வேறு
4) தவமுனி யாம்ராம கிருஷ்ண ரைத்தேடித்
தானே நரேன் ஒரு நாளடைந்தான்
அவாவுடன் தேடியே கொண்டிருந் தசீடன்
அவன் எனவேபக வான் அறிந்தார்

10. இராமகிருஷ்ணரும் விவேகானந்தரும்
(பிரபந்தம்)

இராம: வாராய் குழந்தாய் உன்னுளத்தை
வாட்டும் சந்தே கம் எதுவோ
நேராய் வாய்விட் டேகேட்பாய்
நெருடும் ஐயம் நீங்கிடவே

விவே: கடவுள் உளரோ கண்ணாலே
கண்டதுண்டோ கூறிடுவீர்
திடமாய் உள்ளச் சந்தேகம்
தீர்த்து யானும் தெளிந்திடவே

இராம: உன்னை யானும் காண்பதுபோல்
உருவாய் எந்தன் யோகத்தில்
அன்னை காளி வந்திடுவாள்
அருள்வெள் ளத்தில் திளைத்திடுவேன்

விவே: அன்னை வருவாள் என்கின்றீர்
அவளை நேரில் யான்கண்டால்
சொன்ன வார்த்தை நம்பிடுவேன்
சொல்லைச் செயலிற் காட்டிடுவீர்

இராம: காட்டு கின்றேன் அன்னை தனைக்
காண்பாய் நீயும் யோகத்தில்
வாட்டும் தேடல் அகன்றுவிடும்
வருவாய் தெய்வ மகனேநீ

11. இராமகிருஷ்ணர் வலது கையால் தீண்டல்
விவேகானந்தர் சமாதி கூடல்

1) கையைத் தலையில் வைத்ததும் - உடன்
ஐயன் சமாதியே கூடினன்
தெய்வப் பரவொளி தன்னிலே - காளி
தேவி களிநடம் கண்டனன்

2) உடலும் உளமும் சிந்தனையும்
ஒருங்கே அற்ற தந்நிலையில்
படரும் தெய்வ ஆனந்த
பரவசத்தில் மூழ்கினரே

3) வண்டி குதிரை மக்களில் - அவர்
வாழும் இறைவனைக் கண்டனர்
அண்டம் முழுதும் பரந்துள - சக்தி
அற்புதம் கண்டனர் எங்கணும்

12. துறவு பூணல்:

பல்லவி

துறவு பூண்டனரே - ஐயன்
துறவு பூண்டனரே (துறவு)

சரணம்

பிற பற்றெலாம் ஒழித்தார்
பேணும் காவி உடுத்தார்

தலை மொட்டை யாய்மழித்தார்
சுவாமி விவேகானந்தர்
ஆனார் ஆனார் ஆனார் (துறவு)

13. இராமகிருஷ்ணர் மகா சமாதியடைதல்; தபோபலம் முழுவதும்
விவேகனந்தருக்கு அளித்தல்

நோயாய்ப் பகவான் படுக்கையில் - உடல்
நீங்கும் சமயம் உணர்ந்தனர்
தாய் போற் பரிந்து தம் சீடனைக் - கூவிப்
பக்கல் இருத்தி அருளினால்
பெற்றிருந்த தவப் பேறுகள் - யாவும்
பெயர்த்துத் தம் சீடருக்காக்கினர்
உற்ற மகாயோக நிட்டையில் - சட
உலகைத் துறந்தனர் வாழிய
குருவின் வழியிற் சீடர்கள் - அவர்
கொள்கை வழுவாது கைக்கொண்டு
அரிய பல தொண்டு சாரதா - தேவி
அன்னையின் ஆசியில் ஆற்றினர்

வசனம்: சுவாமி விவேகனந்தர் பாரத தேசம் முழுவதிலும் ஆன்மீக ஒளி ஏற்ற அவாவினார். இமயமலையடிவாரத்தில் இருந்து தமது யாத்திரையை அவர் தொடந்தார். வடக்கே டெல்கி, அயோத்தி, காசி போன்ற இடங்களுக்கெல்லாம் சென்றபின் தெற்கு நோக்கி யாத்திரை செய்தார். மரத்தடியிலும், குகைவாயிலிலும், குடிசைகளிலும், அரண்மனைகளிலும் அவர் தங்க நேர்ந்த போது இந்திய மக்களின் வாழ்க்கை நிலையையும், வறுமைத்துயரையும், அறியாமையையும், அவலங்களையும் அவர் நேரிற் கண்டார். அவற்றை நீக்க வேண்டும் என்ற அவா கொள்கையாக அவர் உள்ளத்தில் மலர்ந்தது. இடம்பெற்றது.

தென்னிந்திய எல்லையில், கன்னியாகுமரியில் அன்னை ஆலயத்தில் புதியதோர் அருளாட்சிக்குட்பட்ட அவர், தேவியைச் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். கடற்கரையை அடைந்தார். கடலலைகளின் கம்பீர ஓங்கார ஒலியில் திளைத்தார்.

(பின்னணி இசை)

கடல் நடுவே தெரிந்த பாறையை நோக்கித் துணிவுடன் நீந்திச் சென்று, அப்பாறையில் அமர்ந்து இருநாட்கள் தியானத்தில் மூழ்கினார். இன்று அப்பாறையில் அழகும், கம்பீரமும், அமைதியும் கொண்ட விவேகானந்தர் தியான மண்டபம் அமைந்திருக்கின்றது.
14. சென்னை வாசிகளும் விவேகானந்தரும்
சென்னை வாசிகள் வீடு வீடாகச் சென்று நிதி திரட்டிச் சுவாமிகளின்
சிக்காகோ பயணத்துக்கு உதவல்

சர்வ சமய மகா நாட்டுக்கு - அவர்
செல்ல விளைந்தனரே - சுவாமிஜீ
செல்ல விளைந்தனரே

இல்லையே கைப்பொருள் என்றேழுந்த எண்ணம்
செல்கை தடுத்ததுவே - சுவாமிஜீ
செல்கை தடுத்ததுவே

சென்னையில் உள்ளோர் திரட்டினரே - பணம்
சுவாமிஜீ கைக்கொடுத்தார் - பணம்
சுவாமிஜீ கைக்கொடுத்தார்

அன்னையாம் காளி அருளை வியந்தவர்
அமெரிக்கா சென்றனரே - சுவாமிஜீ
அமெரிக்கா சென்றனரே

15, சிக்காகோவில்

சகோதரிகளே சகோதரர்களே
என்று விளித்திட்டார் - மந்ர
சக்தி படைத்தது போல அனைவரும்
கட்டுண் டிருந்திட்டார் (சகோ)

பாரத நாட்டின் வேதம் உபநிடதம்
பகவத் கீதையுடன்
ஓதும் புராண இதிகாச தர்ம
சாத்திர சாரமெலாம்

கூடியிருந்தோர் அறிந்தனர் பாரதம்
குவலயம் முழுவதுமே
நாடிட வேண்டிய தத்துவ ஞானம் சேர்
நாட தெனவறிந்தார்

சமய சமரசம் அன்பு சேவை
சகோதரத்வப் பண்பில்
இமயம் எனவுயர்ந் துள்ள எம்மதத்திற்கு
ஈடிலை எனவுணர்ந்தார்.

16. இந்தியா வந்தபின்

மன்றங்கள் சபைகள் மிஷன்களின் சேவை
மேலை நாடுணர்த்தியது
இங்கது போலவே ராமகிருஷ்ணமிஷன்
எனும் அமைப் பாக்கினரே - பேலூரில் (இங்கது)

யாவருக்கும் கல்வி ஊட்டி விழிப்புணர்
வேற்படுத் தவிழைந்தார்
மாதர்கள் கல்வியில் சமூகத்தில் உயர்ந்திட
வைத்திடப் பணிபுரிந்தார்

மக்கள் தொண்டே மகேசன் தொண்டாய்
மிஷன்கள் ஆற்றினவே
தக்க நற்கல்வி மருத்துவ சேவை
சமூகப் பணி பலவும்

திக்கெலாம் மடங்கள் அமைத்து நற்சீடர்கள்
தொண்டு புரிகின்றார்
அற்புதர் இராமகிருஷ்ணர் காட்டிய
அருள் நெறி பரப்புகின்றார்

வசனம்: எழுமின்! விழிமின்! என்று அறிவுறுத்தி அறியாமையில் அமிழ்ந்திக் கிடந்தோருக்குக் கல்வியூட்டவும், சாதிக் கொடுமை அகலவும், பெண்கள் கல்வியும், சமூக அந்தஸ்தும் பெறவும், விதவைகள் மறுவாழ்வு பெறவும், ஆன்மீக சிந்தனையும், தேச பக்தியும் எல்லோர் உள்ளத்திலும் இடம் பெறவும் வேண்டும் என எண்ணித் தொண்டாற்றத் துணிந்த சுவாமிஜீ தம் கண் முன்னே தமது இலட்சியங்கள் நிறைவேறுவது கண்டு உள நிறைவு கொண்டார்.

1902 ஆம் ஆண்டு ஆடி மாதம் நான்காம் நாள் அப்பெருமகனார் மகா சமாதியடைந்தார்.

பாடல்:

பல்லவி

சோதியுடன் இணைந்தார் - விவேகானந்தர்
சோதியுடன் இணைந்தார் - ஞான (சோதி)

அநுபல்லவி

அவதார புருடராய் வந்து எம்பாரத
ஆன்மீக அறிவலைகள்
உலகளாவப் போற்ற
வைத்திட்ட உத்தமர் (சோதி)

சரணம்

மக்கள் பணிக்கென மடங்கள் அமையவும்
வளர்பணி ஆற்றிடவும்
திக்கெலாம் இராமகிருஷ்ண மகரிஷி
சிந்தனை முகிழ்த்திடவும்
மிக்க விழிப்புணர்வூட்டி முழங்கிய
வேதாந்த சிங்கேறு
பக்கமெலாம் சீடர் சூழ்ந்து துதித்திடப்
பரம பதம் அடைந்தார் (சோதி)

முடிவுரை: பாரத ஜோதி அணைந்தது. ஆயினும் பலஜோதிகள் தோன்றிப் பகவான் பரம்மஹம்சரதும் அவரது உத்தம சீடனதும் உயர் சிந்தனைகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

Posted on 01/01/13 & edited 18/02/13 @ ,