உருப்பெறுக ஒரு குலமாம் ஒருமைப்பாடு

நீதி நெறி நிறையறிவு இல்லாமக்கள்
   நினைத்தவுடன் உணர்ச்சிகளை நிரப்பும் சிற்றூர்
ஓதிடுதல் எள்ளளவும் ஏற்கார், அங்கு
   ஒரு பொழுதும் ஒப்புரவு எண்ணார், சற்றும்
கூசிடுதல் இல்லாது குறைகள் செய்து
   குடிமரபாற் கோலோச்சிக் கொடுமை செய்வர்.
பேசிடுதல் பெரும் கொள்கை, பிறி தொன்றில்லை(ப்)
   பிறர்பழிக்கு அஞ்சாதார் பிறந்தாரங்கே.

வீதியெல்லாம் பெருமதிலும் வீடுந்தோன்றும்
   விருப்பற்ற வெறு நிலத்திற் குச்சுத் தோன்றும்
சாதி யெலாம் மனித குலம் ஆனால் அங்கே.
   சண்டைகளும் சச்சரவும் சாதியாலே
மோதி யெழ மூண்ட பெரும் தீயாலெந்தன்
   முகடிருக்கக் கூரையெல்லாம் மூண்ட கொட்டில்
பாதியதாயக் காட்சி தரப் பயந்து அங்கே
   பறையன் நான் பறைச்சியொடு பதுங்கி வாழ்ந்தேன்.

எரிந்ததிலே மிஞ்சியதாய் ஒடியற் சாக்கும்,
   எப்பவோ எடுத்து வைத்த பனாட்டுத் தட்டும்,
பரிந்தது எம் பசிகண்டு, பறைச்சி சொன்னாள்
   பாரப்பா இரவாச்சுப் பகைவர் வாரார்,
கரிந்த சிறு சூளெடுத்துக் கவரும் மீனைக்
   காச்சிடுவம் கூழ் குடித்து நாளாய்ப் போச்சு
தெரிந்திடுவம் விடியு முனம் செய்தி என்றாள்
   சென்று வர மீன் கண்டாள் செய்தாள் கூழை.

குல நடுக்கம் குளிர் நடுக்கம் கொடியோர் செய்த
   குறைநடுக்கம் ஈதெல்லாம் குலப்பனாகப்
பல நடுக்கம் நடுங்கிய நான் பசிக்காய் உண்ட
   பனை கொடுத்த பனாட்டுடனே கூழும் சேரச்
சில நடுக்கம் நீங்கியது சிரித்தாள் மாதி
   சிரிப்புள்ளே பெருந்துயரின் சலிப்பே பாதி
புலனடக்கம் பரம்பரையாய்ப் பழகிப் போச்சு
   புறப் பட்டால் மறக் கூட்டம் புகழ்பட்டாடும்.

எண்ண அலை மீதூர இரவோ எம்மை
   இருட்டடித்து மறைத்ததுவே, எந்தன் வீட்டின்
திண்ணையிலே தேவிமடி சிறிது சாய்ந்து
   சிற்றறிவின் சிறுக்கியவள் சிந்தை யெல்லாம்
வண்ணமுறச் சொல்திறந்து வாயிற் கொட்டி
   வகையடிமை வாழையடி வாழையாகச்
சொன்னகதை எம்வாழ்வின் சோகம் சொல்ல(ச்)
   சொப்பனம்தான் சுகம் என்று தூங்கச் சென்றோம்.

இடையிடையே கடலலையின் இரைச்சலோசை
   எலி நுளம்பு தௌ;ளிவற்றின் எரிச்சல் வேறு
தடை யெதுவும் இன்றி யொரு பூனை பாய்ந்து
   சட்டியதிற் கூழ் நக்கும் சத்தம் வேறு
படை யொடு வந்தெம் மவரைத் தாக்கப் போகும்
   பயம் வேறு பறையர் குலப் பற்றே வேறு
கடையவராய்க் கடவுளெமைக் கையே விட்ட
   கதிவேறு கண்ணயரக் கதியேயில்லை.

சூலாசையால் அவளும் கூழை உண்டு
   துயில் கின்றாள் காண்கின்றேன் துயரம் விஞ்ச
மேலாசைக் கொருகுழந்தை மீளப் போகும்
   மிகு மாசக் கெர்ப்பமவள் வயிற்றிற் றங்கப்
பாலாசைக் காய் வளர்த்த பசுவும் கன்றும்
   பறையற்கேன் என்ற வற்றைப் பறித்துச் சென்ற
பேராசைப் பெருங் குடியிற் பிறந்தோர் செய்கை
   பிய்த் தெடுத்து உள்ளத்தைப் பிடுங்கிற்றன்றே.

இன்றைக்கோ நாளைக்கோ இப்பதானோ
   என்றவளும் நாரியினை இறுக்கப் பற்றி
என்றைக்கும் இப்படித்தான் எங்கள் வாழ்வு
   ஏன் குழந்தை பிறந்தாலும் பறையன் தானே
கன்றிற்காய்த் தேரோட்டி மகவைக் கொன்று
   காத்தபெரு மனுநீதி காலம் போச்சே
கொன்றிட்டார் கொள்ளி வைத்தார் குலத்தின் பேரால்
   கொதித்திட்டாள் குத்துவலி கூடு தென்றாள்.

கூரையினிற் கொக்கரித்துக் கோழிச் சேவல்
   கூவிற்றுக் குலத்தாழ்ச்சி குன்ற வென்று
பேரையது கூப்பிட்டுக் காக்கா என்று
   பிறப்பித்த துத்தரவு கா கா என்று
ஊரையெவர் திருத்தியு மென் உணரார் அன்றோ?
   ஓம் என்று ஓதியது கடலின் ஓசை
பாரையிருள் மறைந்த கலப் பனிமப் பொன்று
   பார்த்திருந்து மூடியது பகைமை காட்ட

எப்பக்கம் கேட்டாலும் ஏதோ ஓசை
   இடியோசை தடியோசை இரைச்சலோசை
அப்பக்கம் அப்பப்பா அகப் பட்டாச்சே
   ஆண்டியவன் வீடல்லோ அழுகை ஓசை
'டக் டக்' கென்றாரிதுவோ கதவின் பக்கம்
   யாரப்பா கேளுங்கள் யாராம் என்றான்
'டப் டப்' பென்றடிக்குதடி எந்தன் நெஞ்சு
   யாரென்று பொறுத்திடடி கேட்போம் சற்று.

மூன்று தரம் தட்டட்டும் பார்ப்போம் இன்று
   முளி வளத்திற் கார் முன்னே நிற்கின்றாரோ
தோன்றியதோர் கனவாலே சொல்வேன் செய்தி
   துயரம் தான் இன்று வரக் காண் போம் அம்மா
'மாண்ட நமதுறவினராம் மாமனாரும்
   மசிந்த தொரு மேளமுடன் மருவக் கண்டேன்'
ஆண்டவனே அபலைகளுக் கபயம் தாரும்
   ஆடுகிறீர் சுடலையினுக் கன்பர் நாமே.

'மேளத்திற் கால்வைத்து மிதித்து மெல்ல
   மேவி எனைக் காதலிக்க வந்த போது
தாளத்திற் துள்ளியது சரிந்து வீழத்
   தாயாரும் விழித் தெழுந்து தடவிப் பார்க்க
ஜாலத்திற் பூனையென' நானும் சொன்ன
   ஜாமத்தை மறக்காமல் ஜாமம் தோன்றும்
காலத்தில் கனவு எலாம் மேளம் உம்மைக்
   கலக்குவதைக் கதை கதையாய்க் கட்டலாமே.

போகட்டும் புரிகிறதா யார் தட்டென்று
   பொழுதிருக்கே இவ்வேளை யார் வந்தாரோ?
போய் தட்டும் ஒரு தட்டுப் பேரன் சொன்னார்
   பிறதட்டும் கேட்கவிலை பேயின் தட்டோ?
வாய்விட்டும் கேட்கவிலை ஊமைப் பேயோ?
   வைரவரோ பைரவியோ கூழிப்பேயோ?
போய் எட்டும் வேப்பிலையைப் போட்டுப் பாரும்!
   போகட்டும் பேயென்றாற் பொழுதாய்ப் போச்சு'

'வேப்பிலையும் வேண்டாம் போ வீணாய் நீயும்
   விசனங்கள் கொள்ளாதே வயிறும் நோக
மாப்பிளை நான் சொல்லுகிறேன் மச்சான் தாண்டி
   மாமியொடு பரிகசிக்க வந்தான் போலும்'
கூப்பிடுவேன் கோபிப்பான் குறும்புக் காரன்
   கொண்டுவா திறப்பதனைத் திறந்து பார்ப்போம்
'சாப்பிடு முன் தலைமாட்டில் வைத்தேன் பாரும்'
   தம்பிதான் வருவனெனச் சொன்னான் நேற்று.

கைகட்டி வாய்கட்டிக் காலும் கட்டிக்
   கறுத்தானின் உடல் முழுதும் கண்டிப்போக
மெய்பட்ட அடியெல்லாம் தழும்பாய்க் காண
   மெது மெது வாய் உருண்டங்கு வந்த கோலம்
பிய்பட்ட பிணம் போலத் தோன்றிற் றென்முன்
   பேதலித்தேன் கதவதனை திறந்தபோது
'ஐயப்போ' தம்பியென அலறிப் போனான்
   ஆற்றா தாள் அழும் கண்ணீர் குளமாய்ப்போச்சு.

வீட்டுள்ளே சேர்த்தவனை வினவும் முன்னம்
   விறுவிறுத்து ஏதேதோ சொல்லப் பார்த்தான்.
மூட்டுள்ளே வலித்தவளும் முதுகும் நோக
   முறுவலித்தாள் முணுமுணுத்தாள் முத்து உன்னைக்
காட்டுள்ளே தேடியவர் வாறார் மச்சான்
   கட்டாயம் உனைக் கொல்லப் போறார் அப்பா
பூட்டுள்ளே கதவிழுத்துப் போடுதாளை
   புறப்படுவம் கட்டு மரம் கடலிற்தானே.

கேட்டிது என் செவி படு முன் ஏதோ சத்தம்
   கிளு கிளுப்பும் கீச் சென்ற குரலும் கேட்க
பாட்டிலவள் சரிந் தொரு காற் புரண்டாள் மாதி,
   பாலகனாய்ப் பாரிலவன் பிறந்தான் நந்தன்.
பூட்டியகை விலங்கொழுங்காய்ப் பொல்லாச் சாதிப்
   புளிப்பிடித்தோர் போகின்ற பொலிவைக் கண்டேன்
பாட்டியும் தன் பேரனையும் மகளைப் பேணப்
   பறந்தடித்தாள் பறையர் இனிப் பறையார் என்றாள்.

நாட்டிலுறை அரசியலார் நன்றாய்ச் சட்டம்
   நாட்டிமிகு குலத்தாழ்வு நசிக்கப் போறார்
பூட்டிலுறை கோயிலெலாம் திறக்கப் போறார்
   பொதுஎன்று விதி யொன்று புகுத்தப் போறார்
காட்டியது புதின மிதைக் காலைச் செய்தி
   களிப்புற்றேன் கறுத்தானைக் கட்டிக் கொண்டு
போட்டியிலே உள்ளிருந்து ஒலித்த ஓசை
   புகழ்ந்தது தன் மகன் பிறந்த புதுமை என்று,

பிறந்திடுக புது வாழ்வு பிளவே நீங்க,(ப்)
   பிரிந்த சிறு சாதி குலம் பெருமை யோடு
மறந்திடுக, மனித குலம் மாட்சி எய்தி
   மகிழ்வுறுக, அனுதினமும் மகிமை சேர்க,
அறம் புரிக, அன்பொழுக, அருளே ஓம்பி
   அனைத்துயிரும் அரும் பொருளை அகத்தால் வாழ்த்தி,
உரம் பெறுக, உயர் வெய்த, உழைப்பே ஓங்க
   உருப்பெறுக, ஒரு குலமாம் ஒருமைப் பாடு.

ஆக்கம் : Mr. Sunmuganathapillai BSc, SLEAS

Posted on 17/07/12 & edited 02/04/15 @ Nainativu, LK