பாட்டும் பதமும - 8 - தூது

ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி சுமக்கிறான். அதனை வெளிக்காட்டாமல் இருப்பதுவே மனிதப் பண்பாகின்றது.
.
கால ஓட்டத்தில் கருத்துப் பரிமாற்றங்களும், தொடர்புச் சாதனங்களும் நான் முந்தி, நீ முந்தி என மனிதனை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன. அண்மைக் காலங்களில்கூடத் தொலைபேசி இல்லாத கிராமங்கள் இருந்தன. ஆனால் தற்காலத்தில் தொலைபேசி இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது.
.
விஞ்ஞானம் மனிதகுலத்தைப் பயம்காட்டித் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. எதையும் சாதிக்கும் திறன் படைத்த விஞ்ஞானத்தால் மனித எண்ணங்களை மட்டும் கட்டுப்படுத்தவோ, தடுத்து நிறுத்தவோ முடியவில்லை.
.
இந்த உலகம் சிந்திப்பவர் கைகளுக்குள் சிறகடித்துப் பறக்கின்றது. இந்த உலகத்தில் விஞ்ஞானிகளைவிடக் கவிஞர்களே அதிகம் சிந்திக்கின்றார்கள் எனக் கண்டுபிடித்ததும் விஞ்ஞானம்தான்.
.
தூது என்ற சிற்றிலக்கிய வகையைப் பற்றிய பொதுக் கருத்துகளையும் தூது இலக்கியத்தின் இலக்கணத்தையும், தூது இலக்கியத்தின் தோற்றத்தையும் பார்ப்போமாக இருந்தால்

தூது
இருவரிடையே பேச்சு நிகழ்வதற்குச் செய்திகளை அல்லது கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உறுதுணையாய் இருப்பவரைத் தூதர் என்று வழங்குவர். காதலர்களிடையே தூது அனுப்பும் பழக்கம் உண்டு. அரசர்களிடையே தூது அனுப்பும் மரபும் உண்டு. இன்றும் அரசுகளுக்கு இடையே கருத்துப் பரிமாற்றங்களுக்காகத் தூதர்கள் நியமிக்கப்படுகின்றனர். நாடுகள் தோறும் பிறநாட்டுத் தூதரகங்கள் உள்ளன. தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் தூது பற்றி இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளன.
.
தூது அனுப்புவோர் ஓர் ஆணாக அல்லது பெண்ணாக இருக்கலாம். தூது பெறுவோரும் ஓர் ஆண் அல்லது பெண்ணாக இருக்கலாம். காதல் காரணமாக ஏற்பட்ட பிரிவுத்துயரம், தூது அனுப்புவதன் நோக்கமாக அமையும்.
.
தமிழ் மொழியில் தோன்றிய முதல் தூது நூல் நெஞ்சு விடு தூது எனும் நூல் ஆகும். இந்த நூலின் ஆசிரியர் உமாபதி சிவாச்சாரியார். அவர் தமது நெஞ்சத்தைத் தம் ஆசிரியருக்குத் தூதாக அனுப்புகிறார். இதில் சைவ சித்தாந்தக் கருத்துகள் நிரம்ப உள்ளன.
.
தொல்காப்பியத்தில் தூது
தொல்காப்பியர் தாம் இயற்றிய இலக்கண நூல் ஆகிய தொல்காப்பியத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு ஏற்படுவதற்கு உரிய காரணங்களில் ஒன்றாகத் தூது செல்வதைக் குறிப்பிடுகின்றார். இந்தச் செய்தியைக் கூறும் தொல்காப்பிய நூற்பா இதோ தரப்படுகிறது.
.
ஓதல் பகை தூது இவை பிரிவே
(அகத்திணையியல். 27 )

.

தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே தூது செல்பவர்கள் யாவர் என்பதையும் தொல்காப்பியம் கூறுகின்றது. தோழி, தாய், பார்ப்பான், பாங்கன் (தோழன்), பாணன் என்போர் தூது செல்வர் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இவை போன்று தூது பற்றிய செய்திகள் தொல்காப்பியத்தில் இடம்பெறக் காணலாம்.
.

திருவள்ளுவர் தூதின் சிறப்புக்கருதித் திருக்குறளில் தூது என்ற தலைப்பில் ஓர் அதிகாரத்தையே அமைத்துள்ளார். அந்த அதிகாரத்தில் தூதுவரின் இலக்கணம், பண்புகள், தூது சொல்லும் முறை என்பவற்றைப் பத்துக் குறள்களில் விளக்குகின்றார். சான்றாக ஒரு குறளைப் பார்ப்போம்.

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்ப தாம் தூது

இந்த வகையில் பிற்பட்ட காலத்துக் கவிஞர்கள் பல தூதுப்பாடல்களை ஆக்கியுள்ளனர். அவை சினிமாவையும் ஆக்கிரமித்ததில் வியப்பொன்றும் இல்லை. "வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு" என்பதும் ஒரு முல்லை நிலத் தலைவியின் தூதுப் பாடல்தான். இதனைச் சிறப்பாகக் கையாண்டவர் கவிஞர் கண்ணதாசன்.
.
இங்கும் ஒரு தவைவனின் வேதனையை எவ்வாறு கவிஞர் காற்றின்மூலம் தூதாக்கியுள்ளார் என்பதனைக் கண்டு மகிழ்வோமாக.
.
அன்புடன்
கங்கைமகன்.

Posted on 22/10/15 & edited 22/10/15 @ ,