Mrs. Kanakamma Kumarasami

திருமதி கனகம்மா குமாரசாமி ஆசிரியர்
Full Name: கனகம்மா குமாரசாமி
Title: பயிற்சி பெற்ற ஆசிரியர்
Born: 05/08/1925, நயினாதீவு
Native: நயினாதீவு, சிறீலங்கா
Residence: யாழ்ப்பாணம்
Occupation: பயிற்சி பெற்ற ஆசிரியர்
Spouse: சின்னத்தம்பி குமாரசாமி
Kalvettu: நினைவு மலர்

வாழ்க்கை வரலாறு

பிறப்பு:
இவர் இலங்கைத் தீவின் வடபகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் நடுநாயகமாக அமைந்துள்ள நயினாதீவில் சின்னத்தம்பி, நாகம்மா தம்பதியினருக்கு மூத்த மகளாக 1925 ஆம் ஆண்டு ஆவணி மாதம் ஐந்தாம் திகதி பிறந்தார். இவரின் சகோதரர்கள் சுந்தரலிங்கம், கோபாலசுந்தரம், குலசிங்கம் என்போராவர்.

கல்வி:
திருமதி கனகம்மா குமாரசாமி அவர்கள் "வளரும் பயிரை முளையிலே தெரியும்" என்பதற்கமைய சிறுவயதில் இருந்தே கல்வியில் ஆர்வம் காட்டி வந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை நயினாதீவு தில்லையம்பல வித்தியாசாலையில் பயின்றார். தொடர்ந்து பயின்று, தனது உயர் கல்வியை நயினாதீவு கணேச வித்தியாசாலையில் கற்றார்.
“தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு” (குறள் - 396)

என்ற குறட்பாவின் பொருளுக்கமைய கசடறக்கற்று அறிவில் தேர்ச்சி பெற்று ஆசிரிய நியமனம் பெற்றார். தனது ஆசிரியப் பயிற்சியை, நல்லூர் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் நிறைவு செய்தார்.

தொழில்:
முதல் ஆசிரிய நியமனம் அனலைதீவில் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பன்விலை, பூண்டுலோயா, முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி, நெல்லியடி மகாவித்தியாலயம், நயினாதீவு நாகபூஷணி வித்தியாலயம், பருத்தித்துறை மெதடிஸ்ட் மகளிர் கல்லூரி, கொட்டடி நமசிவாய வித்தியாலயம், பரமேஸ்வராக் கல்லூரி, யாழ்ப்பாணம் மங்கையர்க்கரசி வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் தமிழையும் கணிதத்தையும் மாணவர்களுக்குப் போதித்து பல நன்மாணாக்கரை உருவாக்கிய ஆசிரியப் பெருந்தகையாகத் திகழ்ந்தார். இவர் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

கல்விப் பணியே கடவுட் பணியாக, செய்யும் தொழிலே தெய்வமாக, மாணவர்களுக்குக் கண்ணெனத் தகும் எண்ணையும் எழுத்தையும் போதித்து நல்வழிகாட்டியாகத் திகழ்ந்த இவர் 1985 இல் யாழ் மங்கையர்க்கரசி வித்தியாசாலையில் கற்பிக்கும் போது தனது கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இல்லறம்:
1952 பங்குனியில் தனது வாழ்க்கைத்துணைவரான வித்துவான் சி. குமாரசாமி அவர்களை மணமுடித்தார். இவர்கள் நிறைவான ஒரு வாழ்வை வாழ்ந்து வையத்தார் வாழ்த்தும் படி சிறந்து நின்றார்கள். "சீரும் திருவும் பொலிய மனமொத்த தம்பதிகளாய் “காதலரிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்" என்பதற்கமைய வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தார்கள். அதன் பேறாக சிவகுமார், சிவநேசன், வத்சலா, இளங்கோ, கௌசல்யா, வாசுகி, நந்தினி ஆகியோரைப் பிள்ளைகளாகப் பெற்றார்.

வித்துவான் சி. குமாரசாமி அவர்கள் ஒரு நல்ல குருநாதர். துணையும், தொழும் தெய்வமுமாக நின்று துலங்கிய அமரர் வித்துவான் சி. குமாரசாமி அவர்கள், கோப்பாய் அரசினர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமை புரிந்தவர். அறிவுப் பெருங்கடலாக, ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோனாகத் திகழ்ந்தவர்.

கனகம்மா அவர்கள் நெடிந்துயர்ந்த நிமிர்ந்த தோற்றமும், அன்பும், பண்பும், அறனும் கொண்ட உள்ளம் படைத்தவர். இவரின் தமிழுணர்வும், முருகபக்தியும், எடுத்த காரியங்களை செவ்வனே செய்து முடிக்கும் நேர்த்தியும், தேசிய உணர்வும், உரிமைப்போரில் காட்டிய ஆர்வமும், விடுதலை வீரர்கள் மீது கொண்டிருந்த பற்றும் பாசமும் இவரை அடையாளப்படுத்தும் பண்புகளாய் நின்றன.

இவர் இயற்கை எழிலை, அதன் உயிர்ப்பை எப்போதும் ரசிப்பதில் மிகவும் விருப்பமுள்ளவர். எந்த நேரமும் மலர்களின் அழகிய காட்சியைக் காண்பதில் விருப்பமுடையவர். தன்னுடைய நேரங்களில் பல மணித்துளிகளைப் பூஞ்செடி வளர்ப்பதிலே செலவிட்டு வண்ணமலர்களின் அழகில் சிந்தை மறந்து நிற்பவர்.

நல்லூர்க் கந்தனின் மணியோசையில் அதிகாலை விழித்தெழுந்து கந்தன் காலடியில் கசிந்துருகிப் பாடும் பேற்றை ஒவ்வொருநாளும் தான் பெற்றது தனது பெரும்பாக்கியமெனக் கருதி வாழ்ந்தவர்.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பும் பண்பில், கணவனுடன் இணைந்து தங்களது இல்லறத்தை நல்லறமாக்கியவர்கள். அதனால் அவர்களது வீடு என்றுமே அமுதசுரபியாய் திகழ்ந்தது. உற்றாரையும் உறவினரையும் வரவேற்று மகிழும் அடைவாயிலகமாகத் திகழ்ந்தது.

இவர்கள் துணைவனும் துணைவியுமாக அறிவூட்டும் அரிய பணியில் தமது கடமையை மேற்கொண்ட பெருமைக்குரியவர்கள். இவர்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளாக இவர்களின் மாணாக்கர்கள் பலர் ஊரிலும், நாட்டிலும் நிறைந்து காணப்படுகின்றார்கள்.

எந்தையும் தாயும் குலாவி இருந்த வீடும், நாடும் விட்டுப் "புலப்பெயர்வு" என்ற இடப்பெயர்வு இடம்பெயரவைக்க 1996 ஆம் ஆண்டு கனடா வந்தார். வந்து மூன்று ஆண்டுகள் கூட முடியாத நிலையில், விதி தன்னுடைய வலியகரங்களால் முடிவுரையை எழுதி, அவர் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இவர் 1999 ஆம் ஆண்டு ஆவணி நாலாம் திகதி இறைவனடி சேர்ந்தார்.

Posted on 18/01/13 & edited 04/04/15 @ Jaffna, LK