“நயினாதீவு அபிவிருத்திச் சங்கத்தின் சேவை அத்தீவு மக்களுக்கு கிடைக்க நாம் உதவ வேண்டும்”

நயினாதீவு மக்கள் தாம் பிறந்த மண்ணையும் ஊரையும் மறக்கக்கூடாது. பின்தங்கிய இந்த தீவில் வாழும் மக்களுக்கு தேவையான வசதிகளை, இயன்ற உதவிகளை நாம் செய்ய வேண்டும். நயினாதீவு சமூக,பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கம் இதற்காக செய்துவரும் பணிகள் பாராட்டப்பட வேண்டும்.

இந்த சங்கம் மேலும் வளர்சியடைந்து அதன் பணிகள் சிறக்க வேண்டும். இவ்வாறு வட-கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பளார் ஏ.ஈ.எஸ் இராஜேந்திரா தெரிவித்தார்.

நயினாதீவு சமூக,பொருளாதார, கல்வி கலாசார அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

வட- கிழக்கு மாகாண சபையின் காணி அமைச்சின் மேலதிக செயலாளரும் சங்கத்தின் தலைவருமான ப.க.பரமலிங்கம் தலைமையில் இவ் வைபவம் இடம்பெற்றது.

பணிப்பாளர் இராஜேந்திரா தமது உரையில்;
நயினாதீவின் வீதிகளைப் புனரமைப்பு செய்வதற்கு எமது திணைக்களம் முடிந்தளவு உதவிகளை செய்துள்ளது. இதே போல ஏனைய தேவைகளுக்கும் இச் சங்கம் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்சங்கம் செய்து வருகின்ற உதவிகளுக்கு நயினை மக்களும் உதவ வேண்டும் என்றார்.

தலைமையுரையாற்றிய ப.க.பரமலிங்கம் சங்கத்தின் சேவைகளை விளக்கி கூறியதுடன் சங்கத்தின்நோக்கம், பணிகள் குறித்தும் குறிப்பிட்டார். 24 மணி நேரம் மின்சாரம் கிடைக்க உதவிய முன்னாள் இந்துகலாசார அமைச்சர் மகேஸ்வரனுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். கலாநிதி மு.கதிர்காமநாதன்; யுத்தத்தினால் நயினாதீவும் பதிக்கப்பட்டது, நயினாதீவு வடக்கே உள்ள ஏழு தீவுகளில் ஒன்று நயினை அம்மனின் அருள் பெற வரும் பக்தர்கள் இத் தீவைக் கண்டு செல்கின்றனர். வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும் வசதியுடன் வாழும் நயினாதீவு மக்கள் இத் தீவின் அபிவிருத்திக்கு உதவ வேண்டும் என்றார். பேராசிரியர் சோ.சந்திரசேகரம் நயினை பிரதிஷ்டா பூஷணம் சிவஸ்ரீசுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள், இராமகிருஷ்ண மிஷன் மடத் தலைவர் சுவாமிஜி ஆத்மாக்கனந்த மகாராஜ் உட்பட பலர் உரையாற்றினார்கள்.

காலை நிகழ்சிகளும் இடம் பெற்றன. நயினாதீவில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

தினக்குரல் – 18/08/2005

Posted on 18/08/05 & edited 12/09/14 @ Colombo, LK