பாரிஸ் மாநகரில் சுடர்விடும் நயினை! புலன்விசாரணை - நூல்வெளியீடு

மணிமேகலைக் காப்பியத்திற்கு மண்வாசனை கொடுத்து, அக் காப்பியத்திற்குக் களம் அமைத்துக் கொடுத்தது மணிபல்லவம் என்று அழைக்கப்படும் எனது கிராமமாகிய நயினாதீவு ஆகும். நான்கு மதங்களையும் தன்னகத்தே கொண்டு சர்வமத சந்நிதியாகத் திகழ்வது எங்கள் கிராமமாகும். அருள் சுமந்து நிற்கும் அன்னை நாகபூசணிஅம்பிகையும், போதிமரம் போதிக்கும் புத்தபிரான் அருள்வாக்கும் அருவியாய் ஓடுவது எங்கள் கிராமத்தில்தான். ஈழத்தில் ஆன்மீக ஒளி தவழ்வதும் அங்குதான்.

வயலும் வயல் சார்ந்ததுமாகி, கடலும் கடல்சார்ந்ததுமான மருதமும், நெய்தலும் கொஞ்சி விளையாடும் எங்கள் மண்; வரலாற்று ஏடுகளில் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே பதிவாகிவிட்ட பெருமைக்குரியதும் எனது கிராமம்தான்..

நாகரிகத்தை எட்டிப்பார்க்காத காலத்தில், நாகரிகத்தை எட்டத்துடித்த மக்கள் அறிவியலையும், அதன்பால் அறிவையும் வளர்த்துக்கொண்டு அரச உயர் பதவிகளில் அங்கம் வகித்த வரலாறுகள் எங்கள் உழைப்பின் அறுவடைகளாகும்.

என்னைப் பொறுத்தவரை நயினாதீவில் பிறந்தேன் என்கின்ற பெருமையைத் தவிர வேறு எந்தப் பெருமையும் புகழும் எனக்கு இல்லை. ஒருவன் என்னைப்பார்த்து நயினாதீவான் என்று சொல்லும்போது என்மனம் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகின்றது.

அந்தவகையில் புலம்பெயர்ந்த நயினை மக்கள் தங்கள் கலை, கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றைத் தாம் வாழும் எல்லா நாடுகளிலும் காப்பாற்றிவருவது மிகவும் பாராட்டிற்குரியது. 2002ம் ஆண்டு ஒரு மேடையில் வித்துவான் வேலன் அவர்கள் ஒரு மேடையில் என்னைப்பார்த்து மனிதனாகப் பிறக்கவேண்டுமாக இருந்தால் நயினாதீவில் பிறக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பாரிசில் வாழும் நயினைப் புத்திரர்கள் தங்கள் முன்னோரின் வழி நின்று அதன் பெருமைகளைக் கட்டிக் காப்பது மட்டுமன்றி நயினைச் சுடர் என்ற அமைப்பின்கீழ் ஒன்றுபட்டு இயங்கி, எங்கள் ஊரின் வளர்ச்சிக்காய்த் தோள் கொடுத்திருப்பது என்பது மிகவும் பாராட்டக்கூடிய விடையமாகும். அத்துடன் எமது முன்னோர்கள் வழி நின்று கலை, கலாச்சாரத்தைப் பேணவேண்டும் என்பதற்காக வருடாவருடம் விழா அமைத்து என் மண்ணின் பெருமைதனை உலகிற்கு அறிமுகம் செய்வது வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒரு விடையமாகும்.

பாரிசின் நயினைச் சுடர் நடாத்தும் 4வது விழாவில் எனது, இந்தியாவில் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புலன்விசாரணை என்ற கவிதை நூலை வெளியீடு செய்ய முன்வந்திருப்பது பெரியவர்களையும், புலமை உள்ளவர்களையும் கௌரவிக்கும் ஒரு பண்பாகும். இந்த நூல் மறுபதிப்பாக ஆங்கிலத்தில் அச்சாக இருக்கின்றது என்ற பெருமையும் எனது ஊருக்கே சேரவேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

பாரிசில் வாழும் அனைத்து நயினாதீவு மக்களையும் இந்த நூலைக் கொடுத்துக் கௌரவிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும். அனைத்து என் உடன்பிறப்புக்களையும் இத்தால் அழைக்கின்றேன்.

கோவையில் நடந்த புலன்விசாரணை நூலை கவிஞர் அறிவுமதி அவர்கள் வெளியிட்டு வைக்கின்றார். அனைவரையும் நயினைச்சுடர் சார்பில் அன்புடன் அழைக்கின்றேன்.

அன்புடன்
கங்கைமகன்

Posted on 05/08/14 & edited 03/04/15 @ France, FR