தாயுமான சுவாமி

திருச்சி என அழைக்கப்படும் திருச்சிராப்பள்ளியில், மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் பெருமான் தாயுமானவர் என்று அழைக்கப்படுகின்றார். அவரை வணங்கிப் பிரார்த்தனை பண்ணி அவரது அருளால் தாம் பெற்ற பிள்ளைக்கும் தாயுமானார் என்றே பெயரிட்டனர் கேடிலியப்ப பிள்ளையும் அவரது அன்புத்துணைவியாகிய கெஜவல்லி அம்மையும்.

இளம் வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம், கணிதம், சோதிடசாஸ்திரம் என்பவற்றில் நன்கு தேர்ச்சிபெற்ற தாயுமானார் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்றவற்றிலும் ஏனைய சைவநூல்களிலும் அதிக ஈடுபாடு கொண்டார். பின்னர் வேதம், ஆகமம், உபநிடதம், மெய்கண்டசாஸ்திரம் என்பனவும் பயின்றார்.

மலைக்கோட்டையில் எழுந்தருளியுள்ள பெருமானை வணங்கிக் கீழே இறங்கிவரும் வழியில் தாயுமானவரைத் திருமூலர் மரபில் வந்த "மெளனகுரு" என்னும் சித்தர் ஆட்கொண்டார். அவரைக் குருவாக ஏற்ற தாயுமானவர் அவரைத் தமது பாடல்களில் தனியாகவும், வேறுபலவிடங்களிலும் அமைத்தும் பாராட்டிப் பாடியுள்ளார்.
கல்லால நீழலில் இருந்து சனகர் முதலிய நால்வருக்கும் போதிக்கும் போது ஞானநிட்டை கூடி மெளனோபதேசம் இறைவன் அருளியது போன்றது, தமது குருவாகிய மெளனகுரு உபதேசம் என்கின்றார்.

"நீதியாய்க் கல்லாலின் நீழலின், கீழே இருந்து
போதியா உண்மை எல்லாம் போதித்தான் - ஏதில்
சனகாதியாய தவத்தோர்க்கு ஞான
தினகரனாம் மெளன சிவன்"

என்னும் பாடல் தம் குருநாதரைப் பற்றித் தாயுமானார் கொண்டிருந்த பெருமதிப்பையும் அவர்மேல் வைத்த பக்தியையும் எடுத்துரைக்கின்றது.

"சும்மா இருக்கக் சுகம் உதயம் ஆகுமே
இம்மாயா யோகம் இனி ஏனடா"

என்பதுவே "சும்மா இரு" என்பதுவே குருநாதரின் உபதேசம் என்கிறார். முருகன் தனக்கருளிய உபதேசம் பற்றிச்
"சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே"
என அருணகிரிநாதரும்
"சும்மா இருக்கச் சுகம் சுகம் என்று சுருதி எலாம்
அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டும் அறிவின்றியே"

எனப் பட்டினத்தாரும் கூறுவனவற்றுடன் இத்தொடர்கள் நோக்கத்தக்கன.

``நீயற்ற அந்நிலையே நிட்டை அதில் நீ இல்லையோ
வாய்றவன் மயங்காதே"

எனவரும் அடிகள் குருநாதர் கூறிய சும்மா இரு என்ற உபதேசப் பொருளை விளக்குவனவாக அமைவதையும் காணலாம்.

தந்தையார் மறைவுக்குப்பின் அவர் வகித்த ``சம்பிரதி`` எனப்படும் இராசப்பிரதிநிதி உத்தியோகத்தை வகித்தவர் தாயுமானவர். ஒருநாள் முக்கிய அரசாங்கக் குறிப்படங்கிய ஓலை ஒன்றை ஆய்வு செய்து கொண்டிருந்த போது திடீரெனத் தாயுமானவர் தம்கையில் இருந்த ஓலையைக் கசக்கினார். பழைய எடு நொறுங்கித் தூளாகியது. ஏனைய மந்திரிமாரும் பிறரும் திகைத்தனர். தம்முணர்வு பெற்ற தாயுமானார் திருவானைக்காவில் அம்பிகையின் ஆடையில் கற்பூரதீபத்தின் தீபற்றியதைக் கண்டு அதை அணைக்க தாம்முயன்றதாகக் கூறி ஏடு வீணாகிவிட்டமைக்காக வருந்தினார்.

ஆலயத்தில் அம்பிகையின் ஆடையில் தீபற்றியமையும், யாவரும் பதறியபோது தானாகவே அத்தீ அணைந்துவிட்ட அற்புதம் பற்றிய செய்தி அரண்மனைக்கும் வந்தது. அப்போது ஆட்சிபுரிந்த அரசியார் தாயுமானவரை வணங்கி உலக சேமம் கருதி ஆட்சிப் பொறுப்பை அவரே ஏற்க வேண்டுமென வேண்டினர்.

தாயே இனி என்மனம் உலகவிவகாரத்தை நாடாது. என்போக்கில் நான் செல்ல அனுமதியளிப்பதே தாங்கள் எனக்குச் செய்யும் உபகாரமாகும் எனக்கேட்டு அப்பதவி துறந்தார் தாயுமானார். பிட்டுக்கு மண் சுமந்து இறைவன் பிரம்படிபட்ட பின், அரிமர்த்தன பாண்டியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, அதைத் துறந்து இசைநெறியிற் செல்லத் தன்னை அனுமதிக்குமாறு வேண்டிய மணிவாசகப் பெருமானின் வரலாற்றுடன் இது ஒப்பிடத்தக்கதாகும்.

"சம்பிரதி" பதவியைத் துறந்த தாயுமானார் மெளன குருவை நாடிச் சென்று உபதேசம் பெற்றுத் துறவியானார். அரசமரியாதைகளுடன் தாம் உலாவந்த திருச்சியிலே கோவணாண்டியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட அவர் துணிந்தமை, வேண்டுதல் வேண்டாமையற்ற அவரது பக்குவ நிலையைப் புலப்படுதுகின்றது.
இராமேஸ்வரத்தைத் தரிசிக்க தாயுமானவர் விரும்பினார். அத்தலத்துக்கு "தேவை" என்ற வேறோர் பெயரும் உண்டு. அங்கு எழுந்தருளியுள்ள அம்பிகைக்குப் பர்வதவர்த்தனி என்ற திருநாமமுமுண்டு. தமிழில் "மலைவளர் காதலி" என்பர்.

"வளமருவு தேவை அரசே
வரைராசனுக்கு இருகண் மணியாய் உதித்த மலை
வளர் காதலிப் பெண் உமையே"
என அம்பிகையை விழித்துப் போற்றிய பாடல்கள் ஆத்ம சாதகர்களுக்கு அருள்விருந்தாய் அமைவன.
தாயுமானவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மேலை நாட்டுச் சமயங்களும் தமிழ் நாட்டில் பரவிய காலம் அது. சமயவாதப் பிரதி வாதங்களும் அப்பொழுது தலை தூக்கின. வேதாந்த, சித்தாந்த சொற்போர்களும் மலிந்தன.

அன்றைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு "பிரமசமாஜம்" போன்றன தோன்றுவதற்கு முன்னரே சமயசமரம் பற்றி அறிவுறுத்திய பெருமை தாயுமானாருடையதாகும். யாவரும் போற்றுவது ஒரு தெய்வத்தையே என்ற உயர்ந்த தத்துவக் கருத்தை அவருடைய பாடல்கள் தோறும் காணலாம்.

"சமய கோடிகள் எலாம் தந்தெய்வம் எந்தெய்வம் என்று
எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றதெது ..."
"ஆறு சமயங்கள் தொறும் வேறு வேறாகிவிளை
யாடும் உனை யாவர் அறிவார்`` எனவும்
"வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற
வித்தகச் சித்தர் கணமே"
எனவும் வரும் அடிகள் சமய சமரசப் போக்கைத் தெளிவுறுத்துவனவாகும்.

இறைவனை நினைந்து நினைந்து ஊற்றேழும் கண்ணீரதனால் நனைந்து நனைந்து பாடி "அழுதடி அடைந்த அன்பர்" எனப் போற்றப்படுபவர் மணிவாசப் பெருமான். அவ்வாறே இறைவனை எண்ணி எண்ணி ஆனந்தமும் அவனுடைய திருவடியைச் சேரமுடியவில்லையே என்ற ஆதங்கமும் கொண்டு பாடியவர் தாயுமானவர்.

"அரும்பொனே மணியே என் அன்பே என் அன்பான
அறிவே என் அறிவில் ஊறும்
ஆனந்த வெள்ளமே என்றென்று பாடினேன்
ஆடினேன் நாடி நாடி
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன்
மெய்சிலிர்த்து இருகை கூப்பி
விண்மாரி என்வென்னிரு கண்மாரி பெய்யவே
வேசற்று அயர்ந்தேன் யான்"
எனவரும் பாடல் எடுத்துக்காட்டாகும்.

"இரும்பு சேர் நெஞ்சகக் கள்வனானாலும் உனை
இடைவிட்டு நின்றதுண்டோ"
எனவும்
“கல்லேனும் ஐய! ஒரு காலத்தில் உருகும் என்
கல் நெஞ்சம் உருக விலையே
கருணைக்கு இணங்காத வன்மையையும்
நான் முகன் கற்பிக்க ஒரு கடவுளோ"
எனவும் வருமடிகள் திருவாசகக் கூற்றை நிறைவுறுத்துகின்றன.

ஆசைகளை யறுத்த பெருமான் ஆதலின் "பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன் - உன்னை நாடுவன்" என்கின்றார். ஆயினும் மனம் அடங்கவில்லை என்கின்றார்.

"எல்லாம் வல்லது இந்த மனமாயை ஏழையாம்
என்னால் அடக்க வசமோ"
என்றும்
"சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது" என்றும் கூறும் அடிகளில் இக்கருத்தே புலப்படுகின்றது.சுமையைத் தூக்கு என்று எம்மைத் தூண்டுவதோடு சுமப்பதற்கு உதவியாகும் சும்மாடும் தானே ஆகி எம்மைச் சுமையாளுமாய் மாற்றிவிடும் மனமாயை என்று கூறும் நயம் கண்டு இன்புறத்தக்கது. ஆதலின்
"சித்தமும் வாக்கும் தேகமும் நினைவே
ஜென்மமும் இனி என்னால் ஆற்றேன்
வைத்திடு இங்கு என்னை நின்னடிக் குடியாய்"
என வேண்டி நிற்கின்றார்.

கல்வி பற்றிய அவர் கருத்தும் சிந்தனைக்குரியது. கல்விஞானம் தருக்கவாதத்தை வளர்ப்பது.
"ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா" என்கின்றது தேவாரம்.
"கல்வி என்னும் பல் கடற் பிழைத்தும்" என்கின்றார் மணிவாசகர்.
"கல்லாத பேர்களே நல்லவர்கள்" என்கின்றார் தாயுமானார்.
"தத்துவப் பேயோடே தலையடித்துக் கொள்ளாமல்" என்பது அவர் உலகுக்குக் கூறும் நல்லுப தேசமாகும்.
"கல்லாதேன் ஆனாலும் கற்றுணர்ந்த மெய்யடியார்
சொல்லாலே நின்னைத் தொழுதேன் பராபரமே"
எனவரும் அடிகள் சிந்தனைக்குரியன.
அடியார்களைப் போற்றும் பண்பும் தாயுமானார் பாடலிற் காணப்படும் முக்கிய பண்புகளில் ஒன்றாகும்.
"...மொழிக்கு மொழி தித்திப்பாக
மூவர் சொலும் தமிழ் கேட்கும் திருச்செவிக்கே
மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோ தான்"
எனவும்
"போதவூர் நாடறியப் புத்தர்தமை வாதில் வென்ற
வாதவூர் ஐயன் அன்பை வாஞ்சிர்ப தெந்நாளோ"
எனவும்
"ஐயா அருணகிரி அப்பா உனைப் போல
மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார்"
எனவும் வரும் அடிகளால் நாம் இதனை உணரலாம். எந்நாட் கண்ணியில் திருமூலர், பட்டினத்தார், பத்திரகிரி, சிவவாக்கியர், மெய்கண்டார் போன்ற பலரையும் போற்றித் துதிக்கின்றார்.

"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே"
என்ற கண்ணி அவர் உள்ளத்தை ஆட்கொண்டிருந்த மனிதநேயப் பண்பையும் எமக்குணர்த்தி நிற்கின்றது.
தூங்காமல் தூங்கும் சுகம் கேட்டுத் துரியாதீத நிலையில் சமாதிநிலையை எய்திய பெருமானாரின் சமாதிக் கோயில் இராமநாதபுரத்தின் அயலில் அமைந்துள்ளது.
உள்ளத்தை உருக்கவும் ஒடுக்கவும் வல்ல தாயுமானார் பாடல்களிற் சிலவற்றையேனும் மனனஞ் செய்து பாடி இறையின்பம் எய்துவோமாக.

Posted on 03/01/13 & edited 04/04/15 @ ,