தமிழில் நாவல் இலக்கியம்

மேனாட்டில் வளர்ச்சி பெற்றிருந்த நாவல், சிறுகதை போன்ற இலக்கிய வகைகள் தமிழிலும் அத்தகைய இலக்கியங்கள் தோன்றுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே நாவல் இலக்கியம் தமிழிலே தோன்றிவிட்டது. அதன் பின்னரே, இருபதாம் நூற்றாண்டில் சிறுகதை இலக்கியம் தமிழில் தோன்றியது.

வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி சரித்திரம் என்னும் இருநாவல்களும், ராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என்னும் நாவலும், மாதவையா எழுதிய பத்மாவதி சரித்திரம் என்னும் நாவலும் தமிழிலே தோன்றிய முதல் தமிழ் நாவல்கள் என்று போற்றப்படுகின்றன. சரித்திரம், புதினம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட போதிலும் அச்சொற்கள் நின்று நிலைபெறவில்லை. NOVEL என்ற ஆங்கிலச் சொல்லே தமிழில் நாவல் என நிலைபெற்றுவிட்டது.

1878 இல் வெளிவந்த பிரதாப முதலியார் சரித்திரம் ஒரு சுயசரிதை போலவே செல்கின்றது. நீதிகளையும், வாழ்க்கைக்குரிய போதனைகளையும் எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டே தமது நாவல்கள் எழுதப்பட்டிருப்பதாக ஆசிரியரே முன்னுரைகளிற் கூறியிருப்பதைக் காணலாம். கதாபாத்திரங்களின் கூற்றாக வைத்து அவற்றை விரித்துரைப்பதால் நாவலின் பண்பு குன்றுவதாக விமர்சகர்கள் கூறுவர். ஆயினும் தமது முதல் முயற்சியில் கதை, போதனை, நவரசமூட்டும் உத்தி, இனிய எளிய தமிழ்நடை, பழமொழிகள், கிளைக்கதைகள் போன்ற பல்வேறு பண்புகளுடன் நாவலை இயற்றி ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார் எனத் துணிந்து கூறலாம்.

ராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் 1894 இல் வெளிவந்தது. ஆசிரியராக விளங்கும் ஆடுசாபட்டி அம்மையப்பபிள்ளை, வம்பர் மகாசபைக்குத் தலைமை தாங்கும் சுப்பம்மாள், போன்ற மறக்கமுடியாத பாத்திரங்களை நாவலில் உலவவிட்டுக் கதையை நடத்திச் செல்லும் பாங்கு போற்றுதற்குரியது. பாத்திரங்களின் குணச்சித்திரப் படைப்பிலும் கமலாம்பாள் சரித்திரம் பலபடி உயர்ந்து விளங்குகின்றது. தத்துவ வேதாந்த விசாரம் கதைக்குத் தேவையற்றது போன்று காணப்படினும், கமலாம்பாள

Posted on 17/01/13 & edited 17/01/13 @ ,