கிருஷ்ண ஐயந்தி

ஆவணி மாதத்து அபரபட்ச அட்டமித் திதியும் ரோகிணியும் கூடிய சுபவேளையை நாங்கள் கிருஷ்ண ஐயந்தி எனக் கொண்டாடுகின்றோம். ஐயந்தி என்பதற்குப் பிறந்த தினம் என்றும் பொருள் கூறலாம். கிரகங்களும், திதி கரணங்களும், நட்சத்திரங்களும் நன்னிலையிற் கூடி நின்ற சமயம் என்றும் பொருள் கொள்ளலாம்.

நாம் செய்த வினைகளுக்கு ஈடாக எமக்குத் தனு, கரண, புவன போகங்கள் தரப்பட நாம் பிறவி எடுக்கின்றோம், ஆனால் நான் பிறப்பு, இறப்பு அற்றவன்; எனது உடல் அழிவற்றது; நானே சர்வேசுவரன் என்று கூறும் விஷ்ணு பிறப்பெடுப்பது எவ்வாறு பொருந்தும் என்ற வினா எழுகின்றது. அதற்கு பதிலையும் அப்பெருமானே கூறுகின்றார். "எனது சொந்த மாயையால் எனது இஷ்டப்படி நானே தோன்றுகின்றேன்" என்கின்றார். முழுமுதற் பொருளாய பெருமானைப் பிறவி எடுக்கச் செய்யும் ஆற்றல் பிறிதொருவருக்கில்லை என்பதையே இக்கூற்றுத் தெளிவாக்குகின்றது.

"பரித்திராணாய சாதூனாம்
விநாசாய சதுஷ்கிருதாம்
தர்ம சம் ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே "
என்று பகவத் கீதையில் பகவான் கூறுகின்றார். அதாவது நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், தர்மத்தை நிலை நிறுத்தவும் யான் யுகங்கள் தோறும் பிறவி எடுக்கின்றேன் என்கின்றார். துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் என்பதே அவதார நோக்கம் என்பதை இக்கூற்று புலப்படுத்துகின்றது.

அவதாரம் என்பதற்கு கீழே இறங்கி வருதல் என்பது நேர் பொருளாகும். பகவான் தம்முடைய மாயையால் தம்மைக் குறைந்த நிலையில் உள்ளவர் போல் காட்டி உலக சேமத்திற்காகத் திருவிளையாடல் புரிந்தமையையே அவதாரம் என்கின்றோம்.

மச்சம், கூர்மம், வராகம், வாமனம் முதலாகப் பத்து அவதாரங்கள் பகவானுக்குக் கூறப்படுகின்றன. அன்றியும் புருஷ அவதாரம், குணாவதாரம், லீலா அவதாரம், சத்திய ஆவேஷ அவதாரம் போன்று பல்வகை அவதாரங்களும் பேசப்படுகின்றன. அவையாவற்றுள்ளும் மிகச் சிறப்பித்துப் பேசப்படுவன இராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமுமேயாகும். இவற்றைச் சிறப்பித்து இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்கள் தோன்றிப் பலபடப் புகழ்ந்துரைத்து இவ்விரு அவதாரங்களை மேலும் அழுத்தமாக மக்கள் உள்ளத்திற் பதித்துப் பக்தி உணர்வை ஊட்டி நிற்கின்றன.

இராமாவதாரத்தில் அரசகுமாரனாகப் பிறந்து வளர்ந்து, பின் காடு சென்று அரக்கர்களை அழித்துத் தேவியைச் சிறைமீட்டு அரசாளுகின்றான் இராமன். ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் எங்கோ பிறந்து, யாரோ வளர்க்க இடையர் சேரியில் வளர்ந்து, ஆயர்பாடியில் லீலைகள் பல புரிந்து, ஆயர்களுடன் மாடுமேய்த்துக், கோபிகையரின் உள்ளம் கவர்ந்து நிற்கின்றான் கண்ணன் இளமைப் பருவத்தில். பின்னர் கம்சனைக் கொன்று வடமதுரையிலும், பின்னர் துவாரகையிலும் அரசாளுகின்றான். ஆபத்பாந்தவனாக நின்று பார்த்த சாரதியாகிப் பாரதப் போரில் பூபாரம் தீர்க்கின்றான். பிற்கால தத்துவ ஆராய்ச்சிகளுக்கெல்லாம் இடம் தரும் முக்கிய தத்துவ நூலாகிய பகவத் கீதையும் கிருஷ்ணாவதாரத்தால் நாம் பெற்ற பெரும்பயனேயாகும். இவ்வகையிற் பார்க்கும் போது இராமாவதாரத்திலும் பார்க்கக் கிருஷ்ணாவதாரமே ஒரு படி விஞ்சி நிற்பது போலத் தோன்றுகின்றது.

இராமாவதாரச் செய்திகளையும் கிருஷ்ணாவதாரச் செய்திகளையும் ஆழ்வார்கள் நினைந்து நினைந்து உருகிஉருகிப் பாராட்டிப் பாடியிருப்பதைத் திவ்யப் பிரபந்தத்திற் காணலாம். பாகவத புராணமும் பகவானின் அவதாரச் செய்திகளை விரிவாக எடுத்துரைக்கின்றது. கிருஷ்ணன் என்ற சங்கத….சொல்லே தமிழில் கண்ணன் என மருவி வழங்குகின்றது. கிருஷ்ணன் என்பதற்கு கரியவன் என்றும் பொருள் கூறுவர். பச்சை, கறுப்பு, நீலம் ஆகிய மூன்றும் அவன் நிறமாகப் பேசப்படுகின்றது.

“பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா” என்கின்றார் ஆழ்வார். “மையோ, மரகதமோ, மறிகடலோ, மலைமுகிலோ ஐயோ இவன் அழகு” எனக் கூற முடியாத தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். கிருஷ்ணன் என்பதற்கு இன்பமயமானவன் என்ற பொருளும் உண்டு. அதுவே பெரிதும் ஏற்புடையதாகும்.

வசுதேவர் என்பவர் யதுகுல மன்னனான சூரசேனனின் மகள் தேவகியை மணந்தார். சூரசேனனின் மூத்த மகன் கம்சன் வசுதேவரையும் தேவகியையும் மணமக்களாகத் தேரிலேற்றி ஓட்ட முன் வந்தான். மங்கள வாத்தியங்கள் முழங்கின. அப்போது "மூடனே நீ அன்புத் தங்கையாகக் கருதும் தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் நீ கொல்லப்படுவாய்" என ஒரு அசரீரி கேட்டது. சீறி எழுந்த கம்சன் தங்கையை வெட்ட வாளையும் உயர்த்தி விட்டான். வசுதேவர் கம்சனைப் பார்த்து, கம்சா, பொறுமையாகச் சிந்தி, தேவகியால் உனக்கு எவ்வித ஆபத்தும் விளையாது. அவளது வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளை உன்னிடமே தந்துவிடுகின்றேன். கவலையை விடு என்றார். கம்சனும் சினம் மாறினான்.

தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகள் கம்சனிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. நாரதர் ஒரு நாள் கம்சனிடம் வந்தார். கம்சா, நீ முற்பிறவியில் "காலநேமி" என்ற அசுரன். உன்னை அழிப்பதற்காகவே பகவான் பிறவி எடுக்கப் போகின்றார். வசுதேவர் தேவகி என்போரும் யதுகுலத்திலுள்ள நந்தகோபன், யசோதரை, ஏனைய இடையர், இடைச்சியர் என்போரும் தேவர்களே. அவர்கள் யாவரும் உனது அழிவுக்காகவே பிறவி எடுத்து வந்துள்ளனர். தேவகியின் எட்டாவது மகனால் நீ அழிவடைவாய் என்று கூறிச் சென்றார்.

உடனேயே கம்சன் வசுதேவரையும் தேவகியையும் சிறையிலடைத்தான். காவலையும் பலப்படுத்தினான். தேவகி கருவுற்றிருந்தாள். ஆதிசேடனே குழந்தையாகத் தேவகியின் வயிற்றில் உருவாகியிருந்தான். பகவான் யோகமாயையால் தேவகி வயிற்றில் இருந்த சிசுவைக் கோகுலத்தில் நந்தகோபன் மனையில் மறைந்து வாழ்ந்து வந்த வசுதேவரின் மூத்த மனைவியாகிய ரோகிணியின் கருப்பைக்கு மாற்றினார். குழந்தை ஆயர்பாடியில் பிறந்தது. அவ்வாறு பிறந்தவரே பலராமர் ஆவார். தேவகியின் ஏழாவது சிசு கருவில் அழிந்துவிட்டது என அறிந்த கம்சன் பெருமகிழ்ச்சியடைந்தான். எட்டாவது குழந்தை கருவில் இருப்பதை அறிந்த கம்சன் வசுதேவருக்கும் தேவகிக்கும் விலங்குபூட்டிச் சிறைகாவலை மேலும் பலப்படுத்தினான்.

பகவான் அவதரிக்கும் வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. நற்சகுனங்கள் பல தோன்றின. முனிவர்களதும் தேவர்களதும் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. மலர்கள் மலர்ந்து நறுமணம் பரப்பின. மெல்லிய பூங்காற்று அந்நறுமணத்தை எங்கும் அள்ளி வீசியது. தேவதுந்துபிகள் முழங்கின. தேவ மங்கையர் ஆடினர். கந்தருவர் பாடினர். எங்கும் ஒளிவெள்ளம் பரவியது. நள்ளிரவில் ரோகினி நட்சத்திரம் நிர்மலமான வானில் உதயமாகியது. விலங்குகள் கழன்றன. பகவானின் மாயையால் மதுரையில் யாவரும் அயர்ந்து உறங்கினர். அவ்வேளையில் பகவான் சிறையில் அவதரித்தார். சங்கு சக்கர தாரியாக நான்கு கரங்களுடன் நீல முகில் வண்ணணாய்க் கண்ணிலே கருணையும், முக மண்டலத்திலே மலர்ந்த புன்னகையுமாக வசுதேவருக்கும் தேவகிக்கும் காட்சி கொடுத்தார். இருவரும் வீழ்ந்து வணங்கிக் கரங் குவித்துப் பேரானந்த வெள்ளத்தில் மூழ்கினர். மீண்டும் பகவான் சிறு குழந்தையாய் மாறித் தேவகியின் கரங்களிற் கிடந்தார்.

அவர்கள் கேட்கக் கூடியதாக மெல்லிய தொனியிற் பின்வரும் செய்தி வெளிவந்தது. "முற்பிறவியிலே நீங்கள் சுதபா புரூசனி என்னும் பெயருடன் என்னைக் குறித்துக் கடுங்தவம் செய்தீர்கள். நான் உங்கள் முன் தோன்றினேன். நீங்கள் வேறு எதுவும் வேண்டாது, பெருமானே உம்மைப் போன்ற ஒரு புதல்வன் வேண்டும் என்றீர்கள். அதனால், என்னைப் போன்ற என்றில்லாது நானே உங்கள் மகனாக வந்துள்ளேன். யோகமாயை யசோதரை வயிற்றில் பெண்குழந்தையாக ஆயர்பாடியில் பிறந்துள்ளாள். நீங்கள் என்னை எடுத்துச் சென்று அங்கு வைத்துவிட்டு அக்குழந்தையை இங்கு எடுத்து வாருங்கள்." என்பதே அச்செய்தி.

வசுதேவர் எழுந்தார். சிறைக்கதவு திறந்தது. காவலர் மயங்கிக் கிடந்தனர். தேவகி ஆற்றாமையோடு குழந்தையை அணைத்து முத்தமிட்டு வசுதேவர் கையிற் கொடுத்தாள். வசுதேவர் குழந்தையை அணைத்தெடுத்துப் புறப்பட்டார். ஒளி ஒன்று அவருக்கு வழிகாட்டியது. இடி, மின்னல், மழை ஏற்பட ஆதிசேடனே குடையாகிக் காத்தான். சுழித்து ஓடிய யமுனை ஆறும் பிரிந்து வழிவிட்டது. நந்தகோபன் இல்லத்திலும் யாவரும் உறங்கிக் கிடந்தனர். யசோதரையின் அருகே கொண்டு வந்த குழந்தையைக் கிடத்திவிட்டு, அவளருகிற் கிடந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வசுதேவர் புறப்பட்டார். சிறைச்சாலையை அடைந்து தேவகியிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்தார். சிறைக்கதவுகள் பழையபடி மூடிக் கொண்டன. கைகளிலும் கால்களிலும் விலங்குகள் ஏறின. காவலர் விழித்தனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிச் சென்று கம்சனுக்கு உரைத்தனர். எட்டாவது குழந்தை பெண் குழந்தை என்றாலும் கம்சன் அதைக் கொல்லவே துணிந்தான். அக் குழந்தையைத் தூக்கி ஒரு பாறையிலே மோதி வீசினான். அக்குழந்தை அவனது கையை விட்டு நழுவி மேலெழுந்தது. எட்டுக்கரங்களுடன் வானில் காட்சி கொடுத்தது. "முட்டாளே உன்னைக் கொல்லப் பிறந்தவன் எங்கோ வளருகின்றான்" என்று கூறி மறைந்தது.

நந்தகோபன் இல்லம் மகிழ்சியில் திளைத்தது. ஆண் குழந்தை பிறந்த செய்தி கேட்டுக் கோபாலர்களும் கோபிகைகளும் திரண்டு வந்தனர். குழந்தையை நீராட்டிப், புத்தாடை புனைந்து, திலகம் இட்டு, பொன்னாபரணம் பூட்டி, மந்திரம் ஓதி, முன்று முறை நெய்யைத் தொட்டுக் குழந்தையின் நாவில் தடவினாள் யசோதரை. குழந்தைக்குக் கிருஷ்ணன் என நாமமும் சூட்டினர்.

நந்தகோபன் அந்தணர்களுக்குப் பசுக்களைத் தானம் செய்தான். மற்றவர்களுக்குப் பொன்னையும், மணியையும், தானியங்களையும் வாரி வாரிக் கொடுத்தான். பாலும், தயிரும், வெண்ணையும், நெய்யும் குடங் குடமாக ஏந்தி வந்தனர் இடையர்கள். பரிசுப்பொருட்களும் குவிந்தன. இவ்வாறு நந்தகோபன் மனையில் முதன்முதலாகக் கிருஷ்ண ஐயந்தி மிக மங்களகரமாக நிறைவேறியது.

குழந்தைக் கண்ணனைக் கொல்லுமாறு கம்சன் பூதனை என்ற அரக்கியை ஏவினான். அவள் தாய் வடிவிற் சென்று கண்ணனுக்கு நச்சுப் பாலூட்டிக் கொல்ல முயன்றாள். கண்ணன் பாலுடன் பூதனையின் உயிரையும் சேர்த்து உறிஞ்சினான.

கடகாசுரன் வண்டி வடிவில் உருண்டு வந்து கண்ணனைத் தாக்க எண்ணினான். குழந்தைக் கண்ணனின் காலுதை பட்டுச் சகடம் நொறுங்கியது.வெண்ணெய் திருடித் தின்கின்றான் என்று ஒரு கோபிகை குற்றம் சுமத்திய போது யசோதைக்கு வாயைத் திறந்து காட்டினான் கண்ணன். அண்டசராசரம் முழுவதும் அங்கு தோற்றியது கண்டு கண்ணன் தெய்வக் குழந்தை என்பதை யசோதை அறிந்து கொண்டாள்.

ஆயர்பாடியில் கண்ணன் செய்த குறும்புகள் அளவற்றவை. ஆயினும் அக்குறும்புகள் கோபியர் உள்ளத்தில் பெருமகிழ்வூட்டின.

கண்ணனைக் கொல்ல கம்சன் ஏவிய அரக்கன் காளை வடிவில் வந்து கண்ணனை இடித்துக் கொல்ல முயன்றான். இடைச்சிறுவர்களைக் கூவியழைத்த கண்ணன் நிறைந்த பழத்துடன் விளங்கிய விளாமரத்தில் அக்காளையைத் தூக்கி அடித்தான். காளை மடிந்தது. இடையர்கள் பழங்களைப் பொறுக்கி மகிழ்ந்தனர்.

யமுனை நதியிலே கண்ணன் பாய்ந்து, அங்கு வாழ்ந்து வந்த காளிங்கன் என்ற பயங்கர நாகத்தின் தலையிலே நின்று நடனமாடி அதன் வலியை அடக்கி அதனை அங்கிருந்து அகற்றிய அற்புதச் செயலும் யாவரும் அறிந்ததே.

யாதவர் இந்திரனுக்கு விழா எடுக்காது விட்டதால் இந்திரன் கோபமுற்றான். சப்தமேகங்களையும் ஏவினான். இடியுடன் கன்மழை பொழிந்த போது கோவர்த்தனகிரியைக் குடையாக உயர்த்திப் பசு நிரைகளையும், இடையர்களையும் கண்ணன் காப்பாற்றினான்.

தந்தையையும் சிறையிலடைத்துவிட்டு இராச்சியத்தைத் தானே கவர்ந்து கொடுங்கோல் ஆட்சி செய்தான் கம்சன். அவனைக் கொல்லக் கண்ணனும் பலராமரும் மதுரைக்குச் செல்லவேண்டிய சந்தர்ப்பத்தையும் அவனே ஆக்கிக் கொண்டான். தான் செய்யும் தனுர் யாகம் காண வருமாறும், கண்ணனையும் பலராமரையும் தவறாது அழைத்து வருமாறும் அக்ரூரர் என்ற முனிவரைக் கம்சன் நந்தகோபன் அரண்மனைக்கு அனுப்பினான். அவர்கள் மதுரைக்கு வரும்போது அவர்களைக் கொல்லக் குவலயாபீடம் என்ற யானையையும், மல்லர் இருவரையும் ஏற்பாடு செய்திருந்தான். கண்ணன் குவலயாபீடம் என்ற யானையைக் கொன்றான். பலராமருடன் சேர்ந்து இரு மல்லர்களையும் கொன்று ஒழித்தான். ஈற்றில் கம்சனும் கண்ணன் கையால் மரணமடைந்தான். அதன்பின் கண்ணன் வடமதுரையிலும் பின்னர் துவாரகையிலும் இருந்து யாதவ அரசை ஆண்டான். யாதவர் மகிழ்ச்சியடைந்தனர்.

"நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கிப் பூபாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல் வண்ணா" என்பது சகாதேவன் கூற்று. அதுவே, பூபாரம் தீர்ப்பதே கிருஷ்ணாவதார முக்கிய நோக்குமாகும். அறநெறி தவறாத பாண்டவர் சகாயனாய் நின்று, ஆபத்துக்களில் நின்று காத்தும், தூது நடந்தும், பார்த்த சாரதியாய் அருச்சுனனுக்குத் தேரோட்டியும், கீதோபதேசம் செய்தும், கிருஷ்ணன் புரிந்தவற்றை மகாபாரதம் விரிவாக எடுத்தோதுகின்றது.

கண்ணனால் கொல்லப்படும் பேறு பெற்றவர்களும் நற்கதியையே அடைவர். கண்ணனது அருட் பிரவாகத்தில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள். அதனால் நம்மாழ்வார்
"உண்ணும் சோறும் பருகும் நீரும்
தின்னும் வெற்றிலையும் கண்ணனே"

என்றுணர்ந்து உள் உருகுகின்றார். அதனால் எம்மில் பங்கும் பாகமுமாக உள்ளவன் அவனே என்ற பேருண்மையைப் பக்தர்கள் அநுபவவாயிலாகப் பெற்று ஆனந்திக்கின்றனர்.

சைவர்களும் வைஷ்ணவர்களும் கண்ணனைப் போற்றி வழிபடும் விழா கிருஷ்ண ஐயந்தி. இக் கிருஷ்ண ஐயந்தி முன்பு இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. இப்பொழுது உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது.

கிருஷ்ண ஐயந்தியில் குழந்தைக் கண்ணன் தம்முடைய பூஜை அறையுள் நடந்து வருவது போன்று கோலத்தில் சிறு காலடிகள் தீட்டி அழகு செய்வர். குழந்தைக் கண்ணனுக்கு விருப்பமான பல இன்சுவைப் பண்டங்களையும் தயாரித்துப் படைப்பர்.

கிருஷ்ண ஐயந்தி விரதம் அனுஷ்டிப்பது இம்மை, மறுமைப் பயன்களைத் தர வல்லது. வாழ்வில் வெற்றியையும் மங்களத்தையும் ஏற்படுத்துவது. வேணுகானம் இசைத்து உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பெருமானின் விழாவில் புல்லாங்குழல் இசையும் பிரதான அம்சமாகும். ஆவணி மாத ஜென்மாஷ்டமி நோன்பை அனைவரும் அனுட்டிப்போமாக.

ஆக்கம்: வித்துவான் சி. குமாரசாமி

Posted on 22/12/12 & edited 04/04/15 @ ,