ஆடிப்பிறப்பு

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு என்பன மாத முதற்றிகதிகளில் வரும் முக்கியமான பண்டிகைகளாகும். பூமி தன்னைத்தான் சுற்றி வருவதோடு சூரியனையும் சுற்றி வருகின்றது. பூமி தன்னைத்தான் சுற்றி வரும் காலம் ஒரு நாளாகும். அது சூரியனைச் சுற்றி வரும் காலம் ஒரு வருடமாகும். இதனை 3651/4 நாட்கள் என அறிஞர்கள் கணித்துள்ளனர். இவ்வாறு சுற்றும் பூமி தன்னுடைய அச்சிலிருந்து 231/2 பாகை சரிந்து சுழல்கின்றது. அதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் கதி பூமத்திய கோட்டில் இருந்து தெற்கே 231/2 பாகை வரை சென்று பின் அங்கிருந்து பூமத்திய கோட்டுக்கு வடக்கே 231/2 பாகை வரை மாறிச் செல்கின்றது. பூமத்திய கோட்டுக்குத் தெற்கே 231/2 பாகையிலுள்ள கோட்டை மகரக்கோடு என்பர். அவ்வாறே பூமத்திய கோட்டுக்கு வடக்கே 231/2 பாகையில் அமையும் கோட்டைக் கடகக் கோடு என்பர்.

மகரத்தில் சூரியன் நிற்கும் மாதம் தைமாதமாகும். அதனால் அதனை மகர சக்கிராந்தி என்பர். அதன் பின்னர் வடக்கு நோக்கிச் சூரியனின் உச்சகதி மாறிக்கொண்டே சென்று கடகக் கோட்டை அணுகும். இவ்வாறு செல்வதற்கு ஆறுமாதகாலங்கள் செல்கின்றன. ஆடிமாதம் சூரிய உச்சம் கடகக் கோட்டை அடையும் காலமாகும்.

தைமாதம் தொடக்கம் ஆனிமாதம் முடிய உள்ள காலத்தில் சூரியன் மகரத்திலிருந்து கடகம் நோக்கிச் செல்கின்றது. இவ்வாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆறு மாத காலத்தை உத்தராயண புண்ணிய காலம் என்பர். உத்தரம் என்பது வடதிசை. அயனம் என்பது செல்லுதல் எனப் பொருள்படும். அவ்வாறே ஆடி மாதத்திலிருந்து தை மாதம் வரை அதாவது கடகத்திலிருந்து மகரம் வரை தெற்கு நோக்கிச் சூரிய உச்சகதி செல்லும் காலம் தட்சணாயண புண்ணிய காலம் எனப்படும். தட்சணதிசை தென்திசையாகும்.

சோதிடர்கள் ஒரு வருடத்தைப் பன்னிரண்டு இராசிகளாகப் பிரித்து மேடம் முதலாக மீனம் வரை பெயரிடுவர். சித்திரை மேட மாதமாகும். ஆடி கடக மாதமாகும். தை மகர மாதமாகும். அவ்வவ் மாதங்களில் அவ்வவ் இராசிகளில் சூரியன் உச்சமாக நிற்பதாகச் சோதிட நூல்கள் கணிக்கின்றன.

மகரத்தில் சூரியன் உச்சம் கொடுக்கத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் திருநாளாகும். இதனைச் சூரியனைப் போற்றி வழிபடும் நாளாக இந்துக்கள் கொண்டாடுவர். மழையும் வெயிலும் தந்து பயிர் வளர்த்துத் தம்மை வாழ்விக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்திப் பொங்கலும், படையலும் இட்டு உழவர் வணங்கும் உழவர் திருநாளாக நாம் தைப்பொங்கலைக் கருதுகின்றோம்.

சூரியன் 231/2 பாகை சரிந்து சுற்றுவதால் பருவகாலங்கள் உண்டாகின்றன. பருவகாலங்களோடு தொடர்பு பூண்டு பருவப் பெயர்ச்சிக் காற்றுக்களாக தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றும், வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றும் வீசுகின்றன. இப்பருவப் பெயர்ச்சிக் காற்றால் மழை பெறும் நாடுகளில் முக்கியமானவையாக இந்தியாவும் இலங்கையும் விளங்குகின்றன.

ஆடி தொடக்கம் தை வரையுள்ள காலம் பெரும்பாலும் மாரிகாலமாகக் காணப்படுகின்றது. அதனால் “ஆடிவிதை தேடி விதை” என்று கூறும் பழமொழியும் எம்மிடை வழங்கி வருகின்றது. ஆடிமாதத்தை விதைப்புத் தொடங்கும் காலமாகவும், தைமாதத்தை அறுவடை முடிந்த காலமாகவும் நாம் கணிக்கலாம்.

இதனால் தைப்பொங்கல் பெறும் அளவு முக்கியத்துவத்தை ஆடிப்பிறப்பும் பெறுகின்றது. எனினும் கைப்பொருளைச் செலவிட்டு விதைப்புத் தொடங்கும் மாதத்திலும் பார்க்க அடுவடை மூலம் பெரும் பயன் பெற்றபின் வரும் தைப்பொங்கலே உழவர்கள் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். எனவே தைப்பொங்கலும், ஆடிப்பிறப்பும் சூரியனை நன்றி யோடு நினைந்து அவனுக்கு வழிபாடு செய்யும் இரு புண்ணிய காலங்கள் என்பதை நாம் நினைவிற் கொள்ளல் வேண்டும்.

ஆதிகாலத்தில் சூரியன், சந்திரன், அக்கினி, ஆறு, மலை போன்ற இயற்கைப் பொருட்களையே மக்கள் வழிபாடு செய்தனர் என வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. சூரிய வெப்பமே மழை பெய்யவும் காரணமாகும். மழை தரும் ஈரமும், சூரியன் தரும் வெப்பமும் பயிர்கள் வளர்வதற்கு இன்றியமையாதவை.

அவ்விரண்டுமே புல், பூண்டுகள், செடிகள், மரங்கள் என்பன தோன்றி வளரவும் காரணிகளாய் அமைகின்றன. மனிதன் தனக்கு வேண்டிய தானியங்கள், காய், கனி, கிழங்குகள் போன்ற உணவுப்பொருட்களைப் பயிர்கள், செடிகள், கொடிகள், மரங்கள் போன்றவற்றிலிருந்து பெற்றுக் கொண்டான். அன்றியும் தாவர உணவுஉண்ணும் பிராணிகள், பறவைகளையும் வேட்டையாடி அவற்றின் மாமிசங்களையும் உணவாகக் கொண்டான். தாவர உணவுகளையும், மாமிச உணவுகளையும் தாங்கள் பெற உதவும் தெய்வமாகச் சூரியனைப் பண்டைய மனிதர்கள் போற்றினர். நாகரீக வளர்ச்சியில் காலத்தால் முற்பட்ட தேசங்களாகக் கருதப்பட்ட எகிப்து, பாபிலோனியா, கிரேக்கம் போன்ற நாடுகளிலும் சூரியன் முக்கிய தெய்வமாகப் போற்றப்பட்டிருப்பதைக் காண்கின்றோம்.

இருக்கு வேதத்திலும் சூரியன் பல பாடல்களில் போற்றப்பட்டுள்ளான். இந்து மதத்தின் ஆறு பெரும்பிரிவுகளாகக் கொள்ளப்படும் சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணபத்தியம், கெளமாரம், செளரம் என்பவற்றுள், செளரம் என்பது சூரியனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு போற்றும் சமயமாகும். சிவபெருமானது வலது கண்ணாகச் சூரியனும், இடது கண்ணாகச் சந்திரனும், நெற்றிக் கண்ணாக அக்கினியும் போற்றப்படுவதும் சூரியன் இந்து மதத்தில் பெறும் முக்கியத்துவத்தை எமக்கு எடுத்துரைக்கின்றது. ஆலயங்களில் பரிவார தெய்வமாக சூரியனுக்கும் கோவில் அமைந்திருக்கின்றது.

இத்தகைய மகிமை பொருந்திய சூரியனுக்கு வழிபாடாற்ருவதை நோக்கமாகக் கொண்ட ஆடிப்பிறப்பு இந்து சமயத்தவர் அனைவரும் தவறாது கொண்டாட வேண்டிய புண்ணிய தினமாகும். இதன் மகத்துவத்தை உணராத காரணத்தால் இந்துக்களிற் பலர் ஆடிப்பிறப்பைக் கொண்டாடாமலே விட்டுவிடுகின்றனர். யாவரும் கொண்டாடும் தைப்பொங்கல் பெறுகின்ற அளவு முக்கியத்துவம் ஆடிப்பிறப்புத் திருநாளுக்கும் உண்டு என்பதை நாம் உணரவேண்டும்.

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இருபதாம் நூற்றாண்டிலே ஈழத்தில் வாழ்ந்த பெரும் புலவர் ஆவர். அவர் சிறுவர்கள் பாடி மகிழ்வதற்கேற்ற பல பாடல்களையும் பாடியுள்ளார். அவை "சிறுவர் செந்தமிழ்" என்ற நூலாகத் திரட்டி அச்சிடப் பெற்றுள்ளன. அதில் ஆடிப்பிறப்புப் பற்றி அவர் பாடியுள்ள ஒரு பாடலை இங்கு நோக்குவோம்.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே” எனத் தொடங்குகின்றது அச் சிறுவர் பாடல். இதிலிருந்து ஆடிப்பிறப்பு இந்து சமைய பாடசாலைகளிலே ஒரு விடுமுறை தினமாகக் கொண்டாடப் பட்டிருந்தமையை நாம் உணர முடிகின்றது. அத்தகைய ஒரு சிறப்பை, பெருமையை, முதன்மையை ஆடிப்பிறப்பு மீண்டும் பெற வேண்டுமானால் ஆடிப்பிறப்பு ஒரு விடுமுறை தினமாகப் பிரகடனப் படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இது விடயத்தில் கவனம் செலுத்துமாறு இந்து சமய கலாச்சார அமைச்சை வேண்டுதல் வேண்டும்.

தை மாதத்தில் பொங்கல் முக்கிய இடம் பெறுவது போன்று ஆடிப்பிறப்பில் கூழ் காய்ச்சுதல் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்கள் சாதாரண நாட்களில் ஒடியல் மாவையே கூழ் காய்ச்சுவதற்குப் பயன்படுத்துவர். ஆனால் ஆடிக் கூழ் காய்ச்சுவதற்கு அரிசிமா, உளுத்தம்மா என்பனவே கொள்ளப்படும். அன்றியும் அவ்வாடிக் கூழ் தித்திப்பான சுவையுடையதாக அமைதலும் வேண்டும். அதற்காக பனங்கட்டி, அல்லது வெல்லம் என்பவற்றைத் தேங்காய்ப் பாலில் கரைத்து அதனுடன் விட்டுக் கூழ் சமைப்பர். கூழுடன் மாத்திரம் ஆடிப்பிறப்பு விழா நின்றுவிடுவதில்லை. இனிப்பான பலகாரவகைகளும் செய்யப்படும். மோதகம், கொழுக்கட்டை போன்ற பலகாரங்கள் முக்கியமாக இடம்பெறும். அப்பம், வடை போன்ற பலகாரங்களையும் சிலர் ஆக்குவர். வீட்டிலுள்ள சுவாமியறையில் நிறைகுடம் வைத்து, பழம், பாக்கு, வெற்றிலை ஆகியவற்றுடன் இவற்றைப் படைத்து, தேங்காய் உடைத்து, தூப தீபம் காட்டித், தோத்திரப் பாடல்கள் பாடி வழிபடுவர். பின்னர் அவற்றைத் தாம் பகிர்ந்து சுவைத்து உண்பர். அயலவர், உறவுனர் வீடுகளுக்குக் கொடுத்தனுப்பி மகிழும் வழக்கமும் இந்துக்களிடை உண்டு. இவற்றைப் பிரதிபலிக்கின்றது புலவர் அவர்களின் பாடல். அன்றியும் அவை செய்யப்படும் முறையையும் இளஞ்சிறுவர் விளங்கிக் கொள்ள தக்க வகையில் கூறும் பாங்கு புலவரவர்களுக்குரிய தனிச் சிறப்பாகும். அப்பாடலைப் பார்ப்போம்.

ஆடிப்பிறப்பு

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே

பாசிப் பயறு வறுத்துக் குற்றிச் செந்நெல்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூருச் சர்க்கரையும் கலந்து
தோண்டியில் நீர் விட்டு மாவை அதிற் கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லthoக் கலவையை உள்ளே வைத்துப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா உருண்டை பயறும் இட்டு
மாவைக் குழைத்தம்மா வார்த்துத் துழாவுவாள்
மணக்க மணக்கவாய் ஊறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூட்டியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் வெற்றிலை பாக்குடன்
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப்புதுக்கூழ் குடிப்போமே..

"கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் " என்று தோழர்களுக்குக் கூறும் விபரம் தெரிந்த சிறுவன், அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்ற விபரத்தையும் வரிசைக் கிராமமாக எடுத்துரைகின்றான்.

கொழுக்கட்டையும் மோதகமும் வெவ்வேறு வடிவ அமைப்பைக் கொண்டவையாயினும் அவற்றின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பொருள்கள் ஒத்த தன்மை கொண்டனவே. அதனால் ஒரேமாதிரியான சுவையே அவற்றில் உண்டு. மோதகம் அல்லது கொழுக்கட்டைக்கு உள்ளே வைக்கப்படும் சுவையும், மணமும் பொருந்திய பொருளைப் பெண்கள் தமது பேச்சுவழக்கில் “உள்ளுடன்” என்பர். உள்ளுடனாக அமைவது பயற்றம் பருப்பாகும். முதலில் பாசிப்பயறு வறுத்துக் குற்றிப் பின் அந்த வாசப் பருப்பை அவித்தெடுப்பர். அவித்த அந்தப் பருப்புடன் வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவிய பூவையும் சர்க்கரையையும் கலப்பர். உள்ளுடன் தயாராகிவிட்டது. அதனை உள்ளே அடக்கும் வெளிப்புற மாப்பொருளை எவ்வாறு தயாரிப்பது என்பதும் ஒரு பாடலிலே அமைவதைப் பார்க்கலாம்.

செந்நெற் பச்சையரிசியை இடித்துத் தெள்ளி அல்லது அரித்து எடுத்தல் வேண்டும். பின்னர் அம்மாவைப் பதமாய் வறுத்து அல்லது அவித்து எடுத்தல் வேண்டும். அவ்வாறு எடுத்த மாவை வாயகன்ற பாத்திரத்திலிட்டு நீரூற்றிப் பக்குவமாகக் குழைத்து உருட்டி எடுத்தல் வேண்டும். பின்னர் வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளே வைத்து அதன் ஓரங்களைக் கொழுக்கட்டை வடிவிலோ அல்லது மோதக வடிவிலோ அமையக்கூடியதாகப் பொருத்துவர். கொழுக்கட்டையில் ஓரத்தில் பல்வடிவ அமைப்பு வைப்பர். மோதகத்தின் நடுவில் குடுமி போன்ற அமைப்பு ஏற்படுத்துவர். இவ்வாறு அலங்காரம் செய்த பின் அவற்றை ஆவியில் அவித்தெடுப்பர்.

கொழுக்கட்டை அல்லது மோதகம் அவிக்கும் இடத்தில் பயற்றம் பருப்பும், சர்க்கரையும், ஏலமும் கலந்த ஒரு கதம்ப மணம் ஆவியுடன் கலந்து பரவும். "மணக்க மணக்க வாய் ஊறிடுமே" என்கின்றான் சிறுவன்.

கூழ் காய்ச்சும் பக்குவமும் அழகாகக் கூறப்படுகின்றது. தேங்காய் பாலில் மாவுருண்டை, பயறு என்பனவும் பனங்கட்டியும் இட்டுக் கரைக்கப்படுகிறது. அவ்வாறு கரைத்த கரைசலை நீர் கொதிக்கும் பாத்திரத்தில் வார்த்துத் துலாவுகின்றாள் அம்மா. நன்றாக அகப்பையால் துழாவாவதுவிடின் கட்டிபட்டுவிடும். கூழ் காய்ச்சும் இடத்திலே மணம் வாயில் நீர் ஊற வைக்கின்றது. கரண்டிக்குப் பதிலாக பலாவிலையால் சுடு கூழை அள்ளிக் குடிக்கும் போது பெறும் சுவையனுபவமும் மகத்தானது.

இவ்வாறு குழந்தைகள் விளங்கிக் கொள்ளக் கூடிய பழகு தமிழில் ஆடிப்பிறப்பைப் பற்றிய பாடலை ஆக்கித் தந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களையும் நாம் இப்பண்டிகைத் தினத்தில் நினைவு கூற வேண்டியது எமது கடப்பாடாகும்.

தைப்பொங்கல் சூரியனின் உத்தராயணச்செலவையும், ஆடிப்பிறப்பு அவனுடைய தட்ஷ்ணாயணச் செலவையும் குறிக்கின்ற பண்டிகை நாட்கள் எனப் பார்த்தோம். மேலும் ஆடிப்பிறப்பு விதைப்புத் தொடங்குதற்குரிய மாதமாகிய உழவர் திருநாள் என்றும், தைப்பொங்கல் அறுவடை முடித்துப் பயன்பெற்ற உழவர் திருநாள் என்றும் அறிந்து கொண்டோம். எமது வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவையாகிய உணவை நாம் பெறக் காரணனாக விளங்கும் சூரிய தேவனுக்கு நாம் எமது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவிக்கும் விழாக்களாக இவை இரண்டும் விளங்குகின்றன. இப்புண்ணிய காலங்களில் நாம் படையலும் வழிபாடும் ஆற்றிச் சூரியனை உள்ளன்புடன் வணங்கி உய்தி அடைவோமாக.

ஆக்கியவர்: வித்துவான் சி. குமாரசாமி

Posted on 21/12/12 & edited 04/04/15 @ ,