நயினைப் புலவர்கள் : ஒரு வெட்டுமுகப் பார்வை

அறிமுகம்.
ஈழத்துத் தமிழ்ப்புலவர் பாரம்பரியத்துக்கு நீண்ட ஒரு வரலாற்றுப் பின்புலம் உள்ளது. தமிழகத்தைச் சார்ந்து வருகின்ற தமிழிப்புலவர் பாரம்பரியத்துக்குச் சமாந்தரமாக ஈழத்திலும் ஒரு புலவர் பாரம்பரியம் இருந்திருக்கிறது. சங்க இலக்கியம் புலவர் பெயர்ப் பட்டியலில் வருகின்ற ஈழத்துப் பூதத் தேவனார் என்ற புலவர் பெருமகனார் ஈழத்தவராகி இருத்தல் கூடுமெனத் தக்க சான்று கொண்டு ஆராய்ச்சியாளர்கள் நிறுவியிருக்கிறார்கள். தவிர ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் வழிவருகின்ற தமிழ்ப்புலமைப்பாரம்பரியம் ஷஷஈழத்தில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது புலமை மேதாவிலாசத்தைப் பதிவு செய்துள்ளது.|| தமிழ் இலக்கிய வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டு ஈழத்தவர்க்குரியது' எனத் தக்கவர்கள் பேசும் நிலை என்பது வெறுமனே வந்த ஒன்றல்ல. அதற்குப் பின்னால் வளமான ஒரு பின்புலத்திலேயே நயினாதீவுப் புலவர்களையும் அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது.

"நயினைப்புலவர்கள்" என்றதலைப்பிலான இக்கட்டுரை நயினாதீவுப் புலவர் பாரம்பரியத்தின் ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் ஒரு வெட்டு முகப்பார்வையாக நோக்க விழைகிறது. நயினாதீவில் வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற புலவர் பெருமக்களைப் பட்டியல்லிடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறி இப்புலவர் பாரம்பரியத்தின் திசை காட்டிகளாகக் காலந் தோறும் விளங்கிய சிலரை இனங்கண்டு சுட்டுவதனூடே இப்புலவர் மரபின் வீச்சினை அளவிட முடிகிறது.

நயினைப்புலவர் வரிசை குறித்துப் பேசுகின்ற எவரும் நயினை நாகமணிப் புலவர், அண்டில்புலவர், குட்டிப்பிள்ளையார், வே. கனகசபை, நயினை இரட்டையர், வைத்தியகலாநிதி. ஆ. இராமுப்பிள்ளை, மார்க்கண்டர் பொன்னர் முதலானோரை, விடுத்துப் பேசமுடியாது. நயினைப் புலவர் மரபுக்கு அணிசேர்த்தவர்களில் இவர்கள் தலையானவர்கள்.

நயினைப்புலவர் மரபின் தொடக்கப் புள்ளியாக விளங்குபவர் நாகமணிப்புலவராவார். நயினாதீவைச் சேர்ந்த கதிரேசன் - சின்னம்மா தம்பதிகளின் சிரேஷட புத்திரனாகப் பிறந்த புலவரின் வாழ்க்கைக் காலம் 1881-1933 வரை காணப்பட்டிருந்தது. ஈழத்தவர் பெருமை கொள்ளத்தக்க தமிழ்ப் புலமையினைப் புலவர் கொண்டிருந்தார். திண்ணைப்பள்ளி மரபு புலவரைப் புடம் போட்டது. இப்பள்ளிகளில் இலக்கண, இலக்கியம், சோதிடம், தருக்கம், தத்துவம் முதலான புலங்களில் கற்பித்தல் நடைபெற்றது. தவிர புராணபடனமும் சொல்லித்தரப்பட்டது. இம்மரபினூடாக நாகமணிப் புலவருக்கு நல்லறிவுச்சுடர் கொழுத்தியவர்களாகக் உபாத்தியாயர்களான வேலாயுதர், வீரகத்திப்பிள்ளை, சோமசுந்தரக் குருக்கள் முதலானோர் காணப்பட்டிருந்தனர் . தவிர பின்னாளில் வேலணைத் தம்பு உபாத்தியார், புன்னாலைக்கட்டுவன் வித்துவ சிரோன்மணி கணேசையர் புலோலி விசாக உபாத்தியார், முதலானோர் மூலமும் தீவகத்தில் தமிழ்ப் புலமைக்கான அடித்தளம் இடப்பட்டதாக அறியமுடிகிறது. இவர்கள் வழியே தேவார, திருவாசகம். புராண இதிகாசங்கள் நீதிநூல்கள், நிகண்டுகள் தீவகமக்களுக்கு நன்கு பரிச்சயமாயின. புலவர் காலகட்டத்து நயினை மக்களில் பலரும் போதுமான தமிழறிவு வாய்க்கப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இவ்வாறான ஒரு புலமைச் சூழலே நாகமணிப்புலவரை உருவாக்கித் தந்ததாகக் கருதலாம்.

புலவர் மிக இளம் வயதிலேயே கவிபுனையும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவராக விளங்கினார். பதினான்கு வயதில் தமது மேய்ப்பில் இருந்த செம்மறி ஆட்டுக்குட்டி இறந்தபோது புலவர் பாடியதாகக் கருதப்படும் சாமகவிச் செய்யுள், பின்னாளில் புலவர் அடையப் போகின்ற புலமை விருத்திக்கான குறிகாட்டியாக அமைந்திருந்தது. யாப்பிலக்கணம். எதுகை, மோனை முதலானவற்றில் போதிய பரிச்சயமில்லாத பராயத்தில் புலவர் இச்செய்யுட்களைப் பாடியதாக அறியமுடிகிறது. புலவருக்கு வாய்த்திருக்கக் கூடிய இயல்பான ஆற்றலையே இது வெளிப்படுத்துகிறது.

நாகமணிப்புலவருடைய ஆக்கங்களில் நயினைமான்பியம், வழிநடைச்சிந்து, ரயில் விபத்துச் சிந்து, நயினை நீரோட்டயமக அந்தாதி மற்றும் கணிசமான தனிப்பாடல்களைச் சுட்டமுடியும். நயினை மான்மியம், நீரோட்டயமக அந்தாதி என்பன புலவரின் மேதா விலாசத்துக்கான மிகச்சிறந்த எடுத்துக் காட்டுக்களாகும். தலபுராணச் சாயலில் அமைந்து காணப்படுகின்ற நயினைமான்மியத்தில் நாகபூசணி அம்பாள் ஆலய வரலாறு, அம்பாளின் அருள்திறம், மகிமை முதலானவற்றை புலவர் அழகுற அமைத்துப் பாடியுள்ளார். சமகாலத்தவர்களான சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர். ஆசுகவி வேலுப்பிள்ளை, அம்பிகைபாகப்புலவர், உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர், க.மயில்வாகனப்புலவர், முருகேச பண்டிதர் முதலானோருடைய படைப்புக்களுடன் ஒப்பு நோக்கத்தக்க புலவருடைய ஆக்கங்களில் பலவும் நூலுருப் பெறாமல் காலவெள்ளத்தில் அள்ளுண்டு போனமை ஈழத்தவர்களின் தவக்குறைவே எனலாம்.

நாகமணிப்புலவர் காலத்துக்குப் பின்னர் புலவர் மரபில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவராக வருபவர் திருவாளர் ஆண்டில் புலவராவார் அருமையான பாடல்களை நினைத்தமாத்திரத்தே பாட்டுப்பாடுவதில் வல்லவராக அண்டில் புலவர் விளங்கினார். தமது மனைவி பொன்னியார் தம்மைவிட்டுப் பிற ஆடவனுடன் சென்று விட்டபோது தமது மனைவியின் பெயரில் இவர் பொன்னிபுராணம் என்ற தலைப்பில் ஒரு புராணம் பாடியதாக அறியக்கிடக்கிறது. இப்புராணத்தின் பாடல்கள் எவையும் கிடைத்தில இவருக்குரித்தாகச் சொல்லப்படும் பிற உதிரிப்பாடல்களின் இலக்கியச் செழுமையினை அவதானிக்கின்றபோது பொன்னி புராணத்தின் தரத்தினை ஊகித்து அறிய முடிகிறது. சொற்செறிவும், எளிமையும் இவருடைய கவிதைகளின் தனிப்பண்புகளாக விளங்குகின்றன.

பொதுவுடமைத் தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த திருவாளர் மார்க்கண்டர் பொன்னர் என்பவர் நயினைப் புலவர் மரபுக்கு அணிசேர்த்த பிரிதொருவராவார். இவருடைய கவிகளாகச் சொல்லப்படும் கவிகளில் சமூக அக்கறை விரவிக் காணப்படுகிறது. பொதுவுடமைச் சார்பு கொண்டிருந்த இவர் தமது கவிதைகளில் பட்டணத்து வாழ்க்கைமுறை மற்றும் கிராமிய வாழ்க்கை முறைகளில் காணப்பட்டிருந்த ஏற்றத்தாழ்வுகளை பெரிதும் விமர்சித்தார்.

குட்டிப்பிள்ளையார் என்ற புனை பெயர் தாங்கிய புலவர் ஒருவர் பற்றிய செய்திகளும் இப்புலவர் பாரம்பரியத்தில் பேசப்படுகின்றார். ஆயினும் இவருக்குரியதாகச் சொல்லப்படும் பாடல்கள் எவையும் இன்று காணக்கிடைக்கவில்லை.

சரமகவி பாடுவதில் வல்லவராக விளங்கிய திருவாளர். வே. கனகசபை என்பவரும் இம்மரபில் குறிப்பிட்தக்க ஒருவராக விளங்கினார் நயினாதீவு, பிடாரி அம்பாள் ஷஷமீது பிடாரி அம்மன் துதி' என்ற பாமாலை ஒன்றையும் இவர் புனைந்ததாகச் சொல்லப்படுகிறது. சந்தங்களைப் பொருத்தமுற அமைப்பதில் இவர் வல்லவராக விளங்கினார்.

நயினை இரட்டையர்கள் என்று இலக்கிய உலகில் பேசப்பட்ட திரு.சோ. இராசரத்தினம், திரு. பொ. தருமலிங்கம் ஆகியோர் இவ்விடத்தில் விதந்து குறிப்பிடத்தக்கவர்களாவர். நயினாதீவு மக்கள் சிலேடையாகவும். நகைச் சுவையாகவும் பேசுவதில் இன்றும் வல்லவர்களாக விளங்குகின்றனர். இந்த ஊற்று மேற்படி இரட்டையர்கள் வழி மேலும் வளம் பெற்றதாக அமைந்தது. நண்பர்கள் வட்டத்துக்குள்ளேயே பெரிதும் அனுபவிக்கப்பட்டதான இவர்களுடைய பாடல்கள் பலவும் அகப்பொருள் பற்றியதாகவே அமைந்திருந்தன. நினைந்து நினைந்து இரசிக்கும் தன்மை இவர்களுடைய பாடல்களுக்கான தனிப்பண்பாக இருந்தது. இந்த இரட்டையர்களுடைய பாடல்களில் பல அக்காலத்து நாளிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. சோ.இராசரத்தினம் அவர்களுடைய அசைவ வினாவிடை நாவலர் பெருமானின் சைவவினாவிடையை அடியொற்றி வெளிவந்தது. அந்நூலின் சில பகுதிகளைத் தனது கட்டுரை ஒன்றில் பண்டிதர். நா. கந்தசாமி நினைவு கூர்ந்து உள்ளார்.

நாகமணிப் புலவருக்கு அடுத்த நிலையில் நயினைப் புலவர் மரபுக்கு மிகுந்த வளம் சேர்த்தவர் வைத்திய கலாநிதி. ஆ. இராமுப்பிள்ளை ஆவார். கணிசமான தனிப் பாடல்களை இவர் படைத்தார். அவற்றுட் பல இலங்கை மற்றும் இந்தியத் தமிழ் நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகளில் வெளியாகின. நினைத்தமாத்திரத்தே கவிபுனைவது இவரது சிறப்பியல்பாகப் பேசப்பட்டது. நயினைத்தீவின் முக்கிய சம்பவங்கள் பல குறித்தும் இவர் கவிபாடியதாகச் சொல்லப்படுகிறது. அவை எவையுமே எழுத்துருப் பெறவில்லை என்பது சோகமான செய்தியாகும்.

நீண்டு செல்கின்ற நயினைப் புலவர் பாரம்பரியத்தில் தமது பாடல்களினூடு ஏதோ ஒருவகையில் தடம்பதித்தவர்களாக மேலும் பலரை இவ்விடத்தில் சுட்டிக் காட்ட முடியும் நயினை உயர்திரு. முத்துக்குமார சாமி, திருவாளர். இராமச்சந்திரா. ப.கு.சரவணபவன் (பாரதியடியான்) இ.ஐயாத்துரை, கா.தி.செல்லையா. வே.கந்தவனம் தியாகர் அருணாசலம், சோதிடர் ஐயாத்துரை தலைமையாசிரியர். நா.க. சண்முகநாதபிள்ளை க.காமாட்சி சுந்தரம் சிவராசசிங்கம், க.வீரகத்தி, i வ . விசுவலிங்கம், பசிக்கவி.சி. பரராசசிங்கம், ருட்கவி.வே.தருமலிங்கம் கா.பொ.இ.குலசிங்கம் முதலானோர் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்கள்.

நயினைப் புலவர் மரபில் காலத்துக்குக் காலம் பல்வேறு புலவர்கள் வந்து போயிருக்கிறார்கள் ஈழத்துத் தமிழ்ப் புலமைக்குக் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வளம் சேர்த்தவர்களில் சிலரும் இப் பட்டியலில் வருகிறார்கள் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆயினும் இப்புலவர் பெருமக்கள் பலரது ஆக்கங்களும் பிரக்ஞை பூர்வமாக ஆவணப்படுத்தப்படாமை இப்புலவர் மரபை அறிந்து கொள்வதில் மிகுந்த இடர்பாட்டை ஏற்படுத்துகிறது. நயினைப் புலவர்களுடைய ஆக்கங்கள் காலமுறைப்படுத்திப் பேணப்பட வேண்டும். நாகமணிப் புலவருக்குப் பின்பு வருவதான புலவர் பெருமக்களது ஆக்கங்களில் பலவும் பேணப்படவேயில்லை என்பது வருத்தத்திற்குரியது. பிற்காலப் புலவர்களது கவித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் கல்வெட்டுப் பாடல்களிலேயே கண்டு கொள்ளமுடிகிறது. குறிப்பாக வைத்திய கலாநிதி மு.இராமுப்பிள்ளை அவர்களுடைய தனிப்பாடல்கள் பலவும் தீவின் மூத்த தலைமுறையினரின் ஞாபகத் திறனிலேயே குடிகொண்டிருப்பதைச் சுட்டிக்காட்ட முடியும். அவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. நயினைப் புலவர் வரிசையில் வரும் புலவர் பெருமக்களது வழித்தோன்றல்கள், தமது மூதாதையரின் புலமை மேதாவிலாசம் குறித்த தரவுகளை உரியவர்களிடம் வெளிப்படுத்தி உதவமுன்வரவேண்டும். இல்லையேல் நயினைத்தீவின் புலவர் வரிசை என்பது பெயரளவிலான வெறும் வரிசையாகவே அமையும். நயினைப் புலவர் வரலாறு குறித்த விரிவான ஆவணத்துக்கான ஒரு ஆரம்ப எழுத்தாக இக்கட்டுரை அமைகிறது நயினைப் புலவர் வரிசை முழுமை பெறுவது நயினைக் குடிமக்கள் அனைவரது கைகளிலும் தங்கியிருக்கிறது.

Posted on 25/10/12 & edited 02/04/15 @ Nainativu, LK