நயினாதீவின் பொருளாதாரம் அன்றும் இன்றும்

இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கைத் தீவின், ஈழத்திரு நாட்டின் வடபால் சைவமும் தமிழும் ஒருங்கே தழைத்தோங்கி விருட்சமாய் விழுது விட்டு உலகெலாம் உயர்வுடனும் உணர்வுடனும் போற்றிப் பேசப்படும் யாழ்ப்பாணமும் அதற்கு அருளுட்டி அழகுசேர்க்கும் தெய்வீகத் தீவாய், சப்த தீவுகளின் நடு நாயகமாய் திகழும் நயினாதீவின் பொருளாதார வளத்தினை அந்த மண்ணின் மைந்தனாய் இருந்து ஆராயக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பம் எல்லாமே நான் பிறந்த இந்த மண்ணினதும் இந்த மண்ணில் வீற்றிருந்து அருளாட்சி புரிந்து தன் குழந்தைகளையெல்லாம் பாரெங்கும் புகழ்பரப்பச்செய்யும் அந்த அன்னை நாகபூசணியினதும் ஆசியும் அருளுமே அன்றி வேறில்லை.

சர்வ மத சன்னிதானமாக திகழும் இத் திருத்தீவானது பல புராண, இதிகாச மற்றும் காவிய காலங்களுடன் தொடர்புபட்டு அக்கால இலக்கியங்களிலும் இடம் பிடித்துள்ளதை இந் நூலின் ஏனைய கட்டுரைகள் தெளிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்துள்ளனர். அந்த வகையில் நயினாதீவின் பண்டைக்கால பொருளாதார முறைமை யானது புராண, இதிகாச மற்றும் காவிய கால பொருளாதார முறைமைக்கு விதிவிலக்காக இருந்திருக்க வாய்ப்பில்லை எனலாம்.

வாணிபத்தின் பொருட்டு ஓட்டிச் சென்ற தமிழ் வணிகர்கள் இடைவழியில் மணிபல்லவத் துறையில் தங்கிச் செல்வது வழக்கம் என்ற விடயத்தினை மணிமேகலையின் 14ஆம் கதையில் அறிய முடிவதுடன் நயினாதீவின் மேற்குக் கரையில் பட்டுத்துறை என்ற பெயரால் ஓர் இடம் இன்றும் அழைக்கப்படுகின்றது. நாகம் பூசித்த நயினை நாகபூஷணி அம்பாள் அறங்காவலர் சபை வெளியீடு.

இவ்வாறான தெய்வீகத் தன்மையும் காலத்தால் முந்திய வரலாற்றுப் பதிவுகளை யும் கொண்டு அன்றும் இன்றும் என்றும் வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தினை பிடித்து வைத்திருக்கும் நயினாதீவின் பொருளாதாரத்தினை பொருளாதாரத்தின் முக்கிய வகைப்படுத்தலான வேளாண்மைத் துறை, கைத்தொழில்துறை, பணிகள்துறை ஆகிய முக்கிய மூன்று துறைகளிளுள்ளும் உள்வாங்கி நயினாதீவின் பொருளாதாரத்தின் அமைப்பு ரீதியான மற்றும் சிந்தனை ரீதியான மாற்றங்களையும் போக்குகளையும் ஆராய்வோம்.

நயினாதீவினைப் பொறுத்த வரையில் பொருளாதாரத்தின் அனைத்துத்துறை களினதும் பங்களிப்புக்களின் பதிவுகளை தெளிவாகக் காணக்கூடியதாயுள்ளது. வேளாண்மைத் துறையினைப் பொறுத்த வரையில் இரண்டாம் ஈழயுத்த காலம் என வரலாற்றில் குறிப்பிடப்படும் 90 பின்னரான காலம் வரை நயினாதீவின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றி வந்துள்ளதுடன் அதற்கு பிற்பட்ட காலத்தில் வேளாண்மைத் துறையின் பால், குறிப்பாக பயிரிடலில் மக்களின் ஆர்வம் குறைவடைந்து வந்துள்ளமை ஓர் கசப்பான உண்மை. இதற்கான அடிப்படைக் காரணங்களை அடுத்து வரும் பந்திகளில் ஆராய்வோம். எனினும் வேளாண்மைத்துறையினுள் உள்ளடங்கும் மீன்பிடித்துறையினைப் பொறுத்த வரையில் இதன் செயலாற்றம் தொடர்ந்து சிறப்பாக காணப்படுகின்றமையை காணமுடிகின்றது. இருப்பினும் போர் இடம்பெற்ற காலங்களில் காணப்பட்ட கடல்வலயத்தடைச் சட்டம் மற்றும் மீன்பிடித் தடை என்பன நயினாதீவின் மீன்பிடித் தொழில்துறையிலும் கணிசமான தாக்கத்தினை செலுத்திய தெனலாம். கைத்தொழில் துறையினைப் பொறுத்த வரையில் அன்று முதல் இன்று வரை சிறு மற்றும் குடிசைக் கைத்தொழில் துறைச் செயற்பாடுகளே நயினாதீவில் காணப்பட்டதனை இனம்காண முடிகின்றது. நெசவு, தளபாடம் தயாரித்தல், இரும்பு மற்றும் உருக்கிலான உபகரணங்கள் தயாரித்தல் போன்ற சிலவற்றை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். மின்வலுவினைப் பொறுத்த வரையில் இலங்கை மின்சாரசபை தனது பங்களிப்பை வழங்கி வருகின்றது. கட்டடவாக்கமும் வீதி மற்றும் ஏனைய உட்கட்டுமான வசதிகளிற்கு தேவையான கல்லுடைத்தலும் கைத் தொழில் துறையினுள் இடம் பெறுகின்ற ஏனைய விடயங்களாக குறிப்பிடலாம். பணிகள் துறை என்பது ஆரம்ப காலம் தொட்டே நயினாதீவின் பொருளாதாரத்தில் பெரும்பங்காற்றி வந்துள்ளதுடன் இரண்டாம் ஈழயுத்தத்திற்கு பின்னரான பொருளாதாரச் செயற்பாடுகளும் முதலீடுகளும் பணிகள் துறைசார்ந்தவையாகவே காணப்பட்டன. அந்த வகையில் பொது நிர்வாகம் ஏனைய அரசாங்க சேவைகள், மொத்த மற்றும் சில்லறை வியாபாரம், போக்குவரத்து என்பன பணிகள் துறையின் செயலாற்றத்திற்கு தொடர்ந்து பெரும் பங்காற்றி வந்துள்ளது. மேலும் ஆயுதப்போராட்ட காலத்திலும் அதற்கு பின்னரான காலத்திலும் வெளிநாட்டு பணவனுப்பல்களின் தாக்கம் தமிழர்களின் பொருளாதாரத்தில் பல சாதக பாதக நிலைமைகளை ஏற்படுத்திய அதே வேளை நயினாதீவும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதனை இக் காலப் பகுதியின் பொருளாதாரச் செயற்பாடுகளும், ஊழியப்படையினுள் உள்வாங்க கூடியவர்களின் சிந்தனையும் செயற்பாடுகளும் எடுத்தியம்புகின்றன. இங்கு ஒவ்வொரு துறைகளின் சொற்திறனையும் முடிந்தவரை விரிவாக நோக்குவோம்.

வேளாண்மைத் துறை

வேளாண்மைத் துறையினைப் பொறுத்த வரையில் பயிர்ச்செய்கை, மற்றும் மீன்பிடி ஆகிய இரு பிரதான துணைத்துறை களினதும் செயலாற்றத்தினை ஆராய்வது சாலப் பொருந்தும். அந்த வகையில் தீவின்பால் விளங்கும் வயலும் வயல் சார்ந்த தோட்ட நிலங்களும் தீவைச்சூழ பரவிக் கிடக்கும் நீளப்பெருங்கடலும் நயினாதீவிற்கு அழகுசேர்க்கும் அதேவேளை பொருளாதாரத்திற்கு பக்கபலமாக இருந்து பெரும்பங்காற்றி வருகின்றது.

பயிர்ச்செய்கையும் மண் வளமும்
நயினாதீவின் பயிர்ச்செய்கை தொடர்பாக ஆராய்கையில் நெற்செய்கை, வர்த்தகப் பயிர்களான புகையிலை, வெங்காயம், மிளகாய் மற்றும் சிறுதானியங்கள், மரக்கறி வகைகளின் பயிரிடல் தொடர்பாக ஆராயலாம். மண் வளத்தினைப் பொறுத்த வரையில் நயினாதீவின் மண் வளமானது பெரிதும் வளம் கொளிக்கும் மண்ணாக காணப்படாததுடன் பெரும்பாலான பகுதிகள் உவர்த்தன்மை கலந்ததாகவும் இயற்கை மற்றும் செயற்கை வளமாக்கிகளினால் வளமூட்டப்பட்டு நிலக்கீழ் மற்றும் மழை நீரை நம்பியதாகவும் காணப்படுகின்றது.

நெற்செய்கை
நெற் செய்கையினைப் பொறுத்தவரையில் நயினாதீவிலும் சிறுபோகம் மற்றும் பெரும்போகம் என இரண்டு காலங்களிலும் நெல் பயிரிடப்பட்டு அறுவடை மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன் இது பெரிதும் உள்ளூர் தேவையினை பூர்த்தி செய்வதனை நோக்கமாக கொண்டதாகவே இருந்தது. இலங்கை தீவின் சுதந்திரத்திற்கு முந்திய காலத்திலேயே நயினாதீவில் பலர் நெற் செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் இந்த நெற்செய்கை நடவடிக்கைகள் மழை வீழ்ச்சியினையும் குளங்களிலிருந்து நீர்ப்பாசனத்தினையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த வகையில் நயினாதீவின் வடக்கே கிராய்குளம். நரிக்குளம் மற்றும் தெற்கே பெருங்குளம் என்பன பிரதான நீர்ப்பாசன குளங்களாக விளங்கியுள்ளதுடன் நயினாதீவின் வடக்கிலும் தெற்கிலும் பல்வேறு சிறிய குளங்களும் மழைக்காலத்தின் நீரேந்து நிலைகளாக காணப்பட்டு நெற்செய்கைக்கான நீர்ப்பாசனத்திற்கு உறுதுணையாக விளங்கியுள்ளன. இலங்கைத் தீவின் சுதந்திரத்திற்கு பின்னரான ஈழவிடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பரிணமிப்பதற்கு முந்திய காலத்திலும் நயினாதீவில் நெற் செய்கையில் பலர் ஈடுபட்டு வந்ததுடன் பெரும்போக காலமான ஐப்பசி முதல் தை மாதம் வரையிலான காலத்தில் மழை வீழ்ச்சியை நம்பியே பெரிதும் இடம் பெற்று வந்துள்ளது. சிறுபோக காலமான சித்திரை, வைகாசி, காலப்பகுதியில் நெற்செய்கையானது பெரும்பாலும் குளத்து நீரை பெரிதும் நம்பியதாக காணப்பட்டது. ஈழவிடுதலையின் ஆயுதப்போராட்ட காலத்திலும் சரி அதற்கு பின்னரான காலத்திலும் சரி நெற்செய்கை நடவடிக்கைகள் நயினாதீவில் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மேற் கொள்ளப்பட்டு வந்துள்ளது. இக்காலப் பகுதியில் வயல் நிலங்கள் கடற்கரையாக மாற்றமடைந்து காலப்போக்கில் அவை போக்குவரத்துப் பாதைகளாக மாற்றமடைந்தன. ஆசைக்குத்தன்னும் வயல் விளைந்துள்ளதனை பார்க்க நயினாதீவின் வடக்கே திரு.சு.குமாரசாமி அவர்களின் வயல் வளர்ந்துவரும் வரை காத்திருக்க வேண்டியதோர் துர்ப்பாக்கிய நிலை 80களிலேயே ஏற்பட்டுவிட்டது. இந்த நிலை ஏற்படுவதற்கு பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் காலநிலைக் காரணிகளின் காரண மாயிருந்ததுடன் இக்காரணிகள் காலப் போக்கில் நயினாதீவின் பொருளாதாரத்தினை சுயசார்பு நிலையில்லிருந்து தங்கி வாழும் நிலை நோக்கி நகர்த்தியது. இந்த நிலைமை தனியே நயினாதீவில் மட்டுமன்றி ஈழத்தின் ஏனைய பகுதிகளிலும் உணரப் பட்டது. இக்காரணிகளின் செல்வாக்கினையும் அதன் பொருளாதார தாக்கத்தினையும் இக் கட்டுரையின் இறுதியில் ஆராய்வோம்.

வர்த்தகப் பயிர்ச் செய்கை
நயினாதீவின் வர்த்தகப் பயிர்ச்செய்கையினை பொறுத்த வரையில் மிளகாய், வெங்காயம், மற்றும் புகையிலைப் பயிர்ச் செய்கை இலங்கைத்தீவின் சுதந்திரத்திற்கு முன்னரான காலம் முதல் முக்கிய இடத்தினைப் பெற்றிருந்ததுடன் தீவின் வேளாண்மைத்துறைசார் சமூகத்தினர் அனைவரும் இவ் வர்த்தகப் பயிர்ச்செய்கையில் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்துள்ளனர். அரச தொழில் புரிவோரும் தமது ஓய்வு நேரங்களில் இவ் வர்த்தகப் பயிர்ச் செய்கையில் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்துள்ளனர். அரச தொழில் புரிவோரும் தமது ஓய்வு நேரங்களில் இவ்வர்த்தகப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு மேலதிக வருமானத்தினை ஈட்டிவந்துள்ளனர். தீவின் உவர்த்தன்மை குறைந்த நன்னீர் வளமுள்ள பகுதிகளிலேயே பெரும்பாலான பயிர்செய் நிலங்கள் (தோட்டங்கள்) காணப்பட்டதுடன் மழை நீர் மற்றும் கிணற்றிலிருந்து பெறப்படும் நிலக்கீழ் நீர் என்பவற்றை நம்பியதாக இப் பணப்பயிர்கள் அல்லது வர்த்தகப் பயிர்களின் பயிர்ச்செய்கை காணப்பட்டது. இவ் வர்த்தகப் பயிர்ச் செய்கையானது இரண்டாம் ஈழ யுத்தகாலம் என வரலாற்றில் குறிப்பிடப்படும். காலம் வரை நயினாதீவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வந்துள்ளதுடன் இவற்றின் மூலம் பெறப்பட்ட வருவாயும், இயல்பாகவே நயினாதீவு மக்களின் கல்வியின் பால் கொண்ட ஆர்வமுமே புகழ்பூத்த மருத்துவர்களையும், பொறியியலாளர்களையும், கணக்காளர்களையும் வங்கியாளர்களையும், பேராசிரியர்களையும் விரிவுரையாளர்களையும், நிர்வாக அதிகாரிகளையும் மற்றும் இன்னும் பெயர் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பாடசாலை அதிபர்களையும் ஆசிரியப் பெருந்தகைகளையும் உருவாக்குவதற்கு பக்கபலமாக விளங்கியது. இரண்டாம் ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் நயினாதீவு யாழ் குடாநாட்டுடனான தரை வளி மற்றும் கடல் வளி தொடர்புகள் அனைத்தையும் இழந்த சூழ்நிலையில் வர்த்தகப் பயிர்களை சந்தைப்படுத்துவது என்பது சிக்கல் நிறைந்ததாக மாற்றமடைய வர்த்தகப் பயிர்ச்செய்கையின்பால் மக்கள் கொண்டிருந்த ஆர்வம் படிப்படையாக குறைவடையத் தொடங்கியது. இவ்வாறு வர்த்தகப் பயிர்ச்செய்கை தனது சந்தை வாய்ப்பை இழந்த அதேவேளை விவசாயிகளும் அவர் சார்ந்தவர்களும் பொருளாதாரத்தினை தேடிக்கொள்வதற்கு வேறு வழியின்றி காலம் கொடுத்த வாய்ப்பினை பயன்படுத்தி மேலை நாடுகளுக்கு முறை சார்ந்தும் முறை சாராமலும் செல்லத் தொடங்கினார்கள். மேலும் வர்த்தகப் பயிர்ச்செய்கையினால் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த அரச உத்தியோகத்தர்களும் தமது குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் சுகாதார தேவை கருதி குடும்பமாக தீவினை விட்டு வெளியேறி யாழ்ப்பாணக் குடாநாட்டில் குடியேறத் தொடங்கினார்கள். இது போன்ற காரணங்களினால் இரண்டாம் ஈழப்போர்காலத்தின் பின்னர் நயினாதீவில் வர்த்தகப் பயிரிடல் என்பது கணிசமாக குறைவடைந்துள்ளதுடன் தோட்டங்களின் உரிமையாளர்கள் வெளிநாடுகளுக்கும், யாழ்ப்பாணம் மற்றும் இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுக்கும் சென்றுவிட்டமையினால் அவை தரிசு நிலங்களாக மாறி எல்லைகள் அற்று உள்ளதுடன் வாகனப் போக்குவரத்து மார்க்கங்களாக மாறியுள்ள துர்ப்பாக்கிய நிலையையே இன்று காண முடிகின்றது. மேலும் ஆங்காங்கே தோட்டக் காணிகளில் சிதைவடைந்த நிலையில் புகையிலைக் குடில்கள் காணப்படுவதுடன் அவை இன்று விஷஜந்துக்களின் வாழ் விடமாக மாறியுள்ளன.

சிறு தானியம் மற்றும் மரக்கறி உற்பத்தி
சிறுதானிய உற்பத்தியினைப் பொறுத்த வரையில் உழுந்து, பயறு கௌப்பி, எள்ளு போன்ற சிறு தானியங்களின் பயிரிடலை வர்த்தகப் பயிர்களின் அறுவடையின் பின்னர் விவசாயிகள் தமது சொந்த உணவுத் தேவைக்காக மேற்கொண்டு வந்ததுடன் மரக்கறிப் பயிர்ச்செய்கையானது ஆண்டின் அனைத்து காலங்களிலும், பெரும்பாலும் தீவின் அனைத்து வீடுகளிலும் தோட்டங்களிலும் இடம் பெற்று வந்துள்ளது. விவசாயிகள் மரக்கறியில் தமது சுய தேவைக்கு போக எஞ்சியதை உள்ளூரில் விற்பனை செய்துள்ளனர். இங்கு சிறப்பாக குறிப்பிடவேண்டிய விடயம் என்னவெனின் மரக்கறிப் பயிர்ச்செய்கை என்பது வீட்டுத் தோட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தமையினால் சேதனப் பசளைகளையே (இயற்;கைப் பசளைகள்) மக்கள் பெரிதும் பயன்படுத்தியதுடன் உள்ளூர் மரங்களின் சுகாதாரத்திற்கும் உடல்நலத்திற்கும் தீங்கற்றதாக காணப்பட்டன. இருப்பினும் இச் சிறுதானியம் மற்றும் மரக்கறி பயிர்ச் செய்கையும் வர்த்தகப் பயிர்ச்செய்கையின் போக்கினை ஒத்ததாகவே காணப்பட்டதுடன். இன்று கிராமவாசிகள் அனைவருமே யாழ் குடாநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் சிறுதானியம் மற்றும் மரக்கறிகளிலேயே பெரியளவில் தங்கியுள்ளனர். பிற்பட்ட காலத்தில் நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய உற்சவ காலத்தில் பலர் கீரை வகை போன்ற சில மரக்கறிகளை பயிரிட்டு வந்தாலும் இன்று அவர்கள் கூட பயிர்ச் செய்கையில் அக்கறையின்றி அல்லது அதன் தேவையின்றி வாழ்ந்து வரும் சூழ் நிலையைத்தான் காணமுடிகின்றது. தவிர உள்ளூர் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் நயினாதீவில் தெங்கு உற்பத்தி காணப்பட்டு வருகின்றது எனலாம்.

மீன்பிடி
மீன்பிடி துறையினை எடுத்து நோக்கினால் இது நயினாதீவின் கரையோரத் தினை மையப்படுத்தியதாக காணப்பட்டதுடன் இத்தொழிலில் ஈடுபடுகின்றவர் களினது குடிகளும் கரையோரத்தில் மட்டுமே செறிந்து வாழ்கின்றனர். நயினாதீவு என்பது தன்னைச் சூழ கடல் வளத்தினை கொண்டிருந்தாலும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளிலேயே மீன்பிடித் தொழில் செழிப்புற்று காணப்படுகின்றது. நயினை தீவின் மேற்க்கு கரையினைப் பொறுத்த வரையில் ஒப்பிட்டு ரீதியில் மீன்பிடித் தொழில் மிகக் குறைந்தளவிலேயே இடம் பெற்று வந்துள்ளது. இலங்கைத்தீவின் சுதந்திரத்திற்கு முன்னரான காலம் முதல் சுதந்திரத்திற்குப் பின்னரான ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக தீவிரமடைவதற்கு முந்திய காலம் வரை நயினாதீவின் தெற்குப் பகுதியில் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் குறிப்பிட்ட காலத்தில் தங்கியிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இக் காலப்பகுதியில் நயினா தீவில் மீன்பிடியில் ஈடுபடுவோர் சிறிய மரத்திலான படகுகள் மற்றும் கட்டுமரம் எனப்படும் மீன்பிடிக் கலத்தினையுமே பயன்படுத்தி தமது தொழிலினை மேற்கொண்ட அதே வேளை யாழ் குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து வந்து காலத்துக்கு காலம் நயினாதீவில் தங்கியிருந்து மீன்பிடித் தொழில் புரிந்தோர் ஒப்பீட்டு ரீதியில் பெரிய படகுகளை பயன்படுத்தியிருந்ததனை அறிய முடிகின்றது.

மேலும் நயினாதீவின் மீன்பிடித் தொழிலின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்பது ஈழவிடுதலைப் போரின் ஆயுதப் போராட்ட வரலாற்றுடன் இணைந்ததாக காணப்படு கின்றது. காலத்துக்கு காலம் ஏற்படுத்தப்பட்ட மீன்பிடித்தடை மற்றும் கடல் வளத்தடைச்சட்டம் என்பன நயினாதீவின் மீன் பிடித் தொழிலினையும் பாதிக்கத்தவறவில்லை. தவிர ஆயுதப் போராட்ட காலத்தில் இடையிடையே ஏற்பட்ட யுத்த நிறுத்தங்கள் மற்றும் இந்திய இராணுவத்தின் பிரசன்னம் ஈழத்தை சூழ்ந்திருந்த காலத்திலும் மீன் பிடித்துறையின் செயலாற்றம் குறிப்பிட்டதக்களவில் சிறப்பாக காணப்பட்ட போதும் ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வரும் வரை இந்த நிலைமை தொடர்ச்சியாக காணப்படவில்லை. ஈழ விடுதலையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததன் பின்னரான காலத்தில் மீன்பிடித்துறை தொடர்ச்சியாக சிறப்பாக செயற்ப்பட்டு வருவதுடன் தொடர்ச்சியான சந்தை வாய்ப்பினையும் கொண்டுள்ளது. நயினாதீவிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள் யாழ்குடாநாட்டு சந்தைக்கு எடுத்துச் சென்று சந்தைப்படுத்துவது ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் இடையிடையே இடம்பெற்றாலும் இன்று அது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலைமையின் காரணமாக சில வேளைகளில் உள்ளூரில் மீன் தட்டுப்பாடு அல்லது தரமான மீன்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுகின்றது என்ற சில குற்றச்சாட்டுக்களும் இருக்கத்தான் செய்கின்றது. இருப்பினும் கடல் வலயத் தடைச்சட்டத்தின் நீக்கம் மற்றும், மீன்பிடி தொடர்பான உள்ளூர் தடைகள் நீக்கப்பட்ட மையும் நவீன மீன்பிடி உபரணங்களின் கிடைப்பனவும் போதிய சந்தைவாய்ப்புக்களும் நயினாதீவின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரின் பொருளாதார நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை. இது தவிர மீன்பிடியில் ஓர் சுவாரஸ்யமான இன்னுமொரு விடயம் என்னவெனில் ஊரில் இருந்த மற்றும் தற்போதுள்ள ஒரு சிலரால் மேற்க்கொள்ளப்படும் 'சூழ்' எனப்படும். கரை யோரத்தினை மையப்படுத்திய கடலுண வைத் தேடும் வழக்கம். பற்றி குறிப்பிட்டாக வேண்டும் இதற்கென அவர்களின் வீடுகளில் சூழ் அரிவாள் எனப்படும் நீண்ட நுனிப் பகுதியில் வளைந்த அரிவாள், தீப்பந்தம் என்பன காணப்படும். இரவிலும் அதிகாலையிலும் கடலுக்குள் நடந்து சென்று கடலுணவுகளை அந்த அரிவாளினால் கொத்தி எடுத்து வந்து கறிசமைத்து உணவு உண்ணும் வழக்கம் இவர்களிடம் காணப்பட்டது. இதில் சிலர் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களாகவும் காணப்பட்டனர். இவ்வாறு கொண்டு வரப்படும் கடலுணவில் சமைத்த கறியின் சுவை என்பது எழுதும் பொழுதே சுவைக்கின்றது. மேலும் ஊரில் பலர் கடல் வற்றும் காலங்களில் கடலுக்கு சென்று மட்டி, ஊரி என்பனவற்றை எடுத்தல், சிறிய நண்டு,மற்றும் மீன்களைப் பிடித்தல் என்பனவற்றில் ஈடுபட்டு வந்ததுடன் ஊரின் மக்களின் பொருளாதாரத்தில் கடலுணவு தொடர்ந்து பெரும் பங்காற்றி வருகின்றது.

கைத்தொழில்துறை

நயினாதீவில் கைத்தொழில் என்று நோக்குகையில் இக்கட்டுரையின் ஆரம் பத்தில் குறிப்பிட்டது போன்று சிறுகைத்தொழில் மற்றும் குடிசைக் கைத்தொழிலே காணப்பட்டு வந்துள்ளது. நயினாதீவினைப் பொறுத்தவரையில் உணவு பதனிடல் என்பது குடிசைக் கைத்தொழிலாக காணப்படுகின்றது. நயினாதீவும்; ஓரளவு பனை வளம் கொண்ட தீவாகக் காணப்படுவதால் பனம் பண்டங்களை பதனிட்டு தமது சொந்த தேவைக்கு பயன்படுத்துவதும் யாழ் குடாநாட்டில் விற்பனை செய்வதும் அன்று தொட்டு இடம் பெற்று வந்துள்ளது. அந்த வகையில் ஒடியல், அவித்த ஒடியல் (புளுக் கொடியல்) கருப்பட்டி மற்றும் பனாட்டு என்பன முக்கிய பனம் பண்டங்களாக காணப்படுகின்றன. இதற்காக இரண்டாம் ஈழவிடுதலைப் போராட்ட காலம் வரை பனம் விதைகளை சேகரித்தல் என்பது ஊரில் மக்களால் போட்டி போட்டு மேற்கொள்ளப்பட்டு வந்தது. தவிர கடலுணவுகளை பதப்படுத்தி கருவாடாக்கி விற்பனை செய்யும் நடவடிக்கையும் தொடர்ச்சியாக இடம்; பெற்று வந்துள்ளது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னரான காலத்தில் இலங்கைத்தீவின் தென்பகுதி மக்களின் சுற்றுலா வருகைகள் அதிகரிப்புடன் பனம் பண்டங்களினதும் கடலுணவுகளினதும் பதப்படுத்தல் ஊரில் கணிசமாக அதிகரித்துள்ளது எனலாம். இருப்பினும் பனம் பண்டங்களை பதப்படுத்தி தற்போதுள்ள சந்தை வாய்ப்பை சாதகமாக்கி பொருளா தாரத்தை வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய நிலையில் மிகக் குறைவாக காணப்படுகின்றது. என்றே சொல்ல வேண்டும்.

ஆடை தயாரித்தல் கைத்தொழில் என்பது வீடுகளில் தமது சொந்தத் தேவைக்கானதாக காணப்பட்ட அதேவேளை சிலர் தொழிலாகவும் மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக பெண்களுக்கான ஆடைகளை தயாரிப்பதில் சிலர் கைதேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். தவிர நயினாதீவின் மத்தியில் இரட்டங் காலிமுருகன் ஆலயத்திற்கு முன்னால் நெசவு சாலை ஒன்று காணப்பட்டதுடன் இதில் நயினாதீவில் பலருக்கு நெசவுப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் இன்று அத்திவாரமே அற்று அழிக்கப்பட்டு விட்டது. மர மற்றும் மரஉற்பத்திகளை பொறுத்த வரையில் தீவின் தளபாட மற்றும் மரதேவைகள் உள்ளூரிலேயே மேற்கொள்ளப்பட்டன. பனைமரம் மரத்தேவையை பூர்த்தி செய்வதில் கணிச மான பங்கு வகித்து வருகின்றது. மேலும் அடிப்படை உலோக உற்பத்திகள் சிறியளவில் இடம் பெற்று வந்துள்ளது. குறிப்பாக கத்திகள், கோடாரி, மண்வெட்டி, அரிவாள், கதவுப்பூட்டுக்கள் இரும்பு வாளிகள் போன்ற அடிப்படை உலோக உற்பத்திகள் உள்ளூரிலேயே மேற்கொள்ளப்பட்டன. இவற்றினை விட குடிசைக் கைத்தொழிலாக பெட்டி, கடகம், நீத்துப்பெட்டி, மற்றும் பாய் போன்றவற்றை தயாரித்து சொந்த தேவைக்கு பயன்படுத்துவதும் விற்பனை செய்வதும் இடம் பெற்று வந்துள்ளது. கட்டட வாக்கத்தினை பொறுத்தவரையில் உள்ளூர் கட்டடத் தேவைகள் உள்ளூரில் உள்ள கல் மண் என்பவற்றை கொண்டே ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் காலப்போக்கில் உள்ளூரில் இவற்றுக்கான தட்டுப்பாடு ஏற்படவே யாழ் குடாநாட்டினதும், தீவகத்தின் ஏனைய பகுதிகளிருந்தும் கொண்டு வரப்பட்டே கட்டடவாக்க வேலைகள் இடம்பெற்று வருகின்றது.

நயினாதீவில் மின்வலு மற்றும் நீர் தொடர்பாக நோக்குகையில் இலங்கை மின்சார சபையினால் நீண்ட காலமாக மட்டுப்படுத்தப்பட்டளவில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இது டீசல் இயந்திரத்தின் துணையுடன் வழங்கப்பட்டு வருவதனால் இயந்திரக் கோளாறு அல்லது டீசல் பற்றாக்குறை என்பனவற்றால் தடைப் படுவது நீண்டகாலமாக வழமையானதாக காணப்பட்டாலும் ஒப்பீட்டளவில் தற்போது ஓரளவு சீராக வழங்கப்படுகின்றது என்றே சொல்ல வேண்டும். மின்னூட்டல் என்பது தீவின் அனைவருக்கும் சென்றடையாவிடினும் ஓரளவு முக்கிய வீதிகளினூடாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. நீர் என்பது நயினாதீவினைப் பொறுத்தவரையில் ஓர் பிரச்சனையான விடயமாகவே மாறிவருகின்றது. நயினாதீவில் நன்னீர் கிணறுகள் எனப்பட்டவை கூட இன்று உவர்த்தன்மையடைந்து வருவது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயமாகும். இருப்பினும் நயினாதீவின் குறிப்பிட்ட பகுதிகளில் இன்றும் நன்னீர் வசதிகள் கிடைக்கக் கூடியதாயிருப்பதுடன் இப்பகுதியிலிருந்தே தீவின் ஏனைய மக்கள் தமது நன்னீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். மழைகாலங்களில் பெரும்பாலும் அனைத்து வீடுகளின்கிணறு களிலும் நன்னீரை பெற்றுக் கொள்ளக் கூடியதாயிருப்பது மக்களுக்குஓரளவு நிம்மதியளிக்கும் விடயமாகும்.இவ்வாறு நயினாதீவின் குறிப்பிட்ட பகுதிகளில் இன்னும் நன்னீர் வசதிகள் கிடைக்கக் கூடியதாயிருப்பதுடன் இப்பகுதியிலிருந்தே தீவின் ஏனைய மக்கள் தமது நன்னீர் தேவையை பூரத்தி செய்து வருகின்றனர்.

மழைகாலங்களில் பெரும்பாலும் அனைத்து வீடுகளின் கிணறுகளிலும் நன்னீரை பெற்றுக்கொள்ளக் கூயதாயிருப்பது மக்களுக்கு ஓரளவு நிம்மதியளிக்கும் விடய மாகும். இவ்வாறு நன்னீர் கிணறுகளும் உவர் தன்மை அடைவதற்கு முக்கிய காரணம் விவசாய நிலங்கள் பயன்படுத்தப் படாமல் கட்டாம் தரைகளாக காணப்படுகின்றமை, மற்றும் மதவுகள் சிதைவடைந்து காணப்படுகின்றமை அல்லது மதவுகளின் வான்கதவுகளை பயன்படுத்த முடியாமை என்பவற்றினால் மழை நீர் நிலத்தினுள்செல்லாது இலகுவாக கடலுடன் கலப்பதும் மழை நீரினைத் தேக்கி வைக்கக்கூடிய வகையில் குளங்கள் செப்பனிடப்பட்டு பராமரிக்கப்படா மையும் முக்கிய காரணங்களாகும். தீவின் நன்னீர் வளத்தினை பாதுகாப்பதற்கான தேவையானநடவடிக்கைகளை மேற் கொள்வது குடியிருப்பாளர்களினதும், பொது அமைப்புக்களினதும் அரச அதிகாரிகளினதும் கடமையாகும். நயினாதீவில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர்த்தாங்கியும் நீர் வழங்கல் திட்டமும் நீண்டகாலம் செயற்பட்டு வந்த போதிலும் இன்று அனைத்தும் அழிவடைந்த நிலையில் காணப்படுவது துரதிஷ;டவசமானதாகும். இவற்றை மீள் செயற்படுத்தவும் உரிய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

பணிகள் துறை

நயினாதீவின் பொருளாதாரத்தில் அன்று முதல் இன்று வரை பணிகள் துறையின் பங்கு அளப்பரியது. மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், போக்குவரத்து, தபால் மற்றும் தொடர்பூட்டல் வங்கித் தொழில் அரச பணிகள் மற்றும் தனியார் பணிகள் என்பன முக்கிய இடம் பிடித்துள்ளது. மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்தினைப் பொறுத்த வரையில் தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பங்களிப்பு அளப்பரியது. இலங்கைத் தீவின் சுதந்திர காலத்திற்கு அண்மைய காலம் முதல் நயினாதீவின் வடக்கே திரு.வ.கந்தசாமி என்பவரது (வ.க.கடை) நயிiனாதீவின் மத்தியில் சு.குமாரசாமி கடை (சு.கு.கடை) தெற்கே திரு.காராளபிள்ளை அவர்களின் கடை (காராளி கடை) என்பன முக்கிய சில்லறை வர்த்தக நிலையங்களாக இருந்ததுடன் நயினாதீவில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் செயற்படத் தொடங்கு முன்னர் இவை உணவு முத்திரைகளுக்கு பொருட்களை வழங்கும் நிலையங்களாகவும் செயற்ப்பட்டுள்ளன. இக் கடையில் இன்று சு.கு.கடை தவிர ஏனைய கடைகள் உரிமையாளர்களின் வாரிசுகளினால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இவைதவிர நயினாதீவின் அனைத்துப் பகுதிகளிலும் பல சில்லறை விற்பனை நிலை யங்கள் இன்னும் காணப்பட்டு வருவதுடன் இவற்றில் சில அன்றும் இன்றும் மொத்த விற்பனை நிலையங்களாகவும் காணப்படுகின்றன.இவ்வாறான மொத்தவிற் பனையில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களாக திரு.காராளபிள்ளை அவர்களின் வர்த்தக நிலையம் நெடுங்காலமாக செயற்பட்டு வருகின்றதெனலாம். நயினாதீவில்; பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தேவை உணரப்படவே 60களில் திரு.வித்துவான் சி.குமாரசாமி அவர்களின் தலைமையில் நயினாதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் நிறுவப்பட்டதுடன் இதனூடாக நயினாதீவு மக்களுக்கு சேவையாற்றப்பட்டிருப்பினும் அதனை நிர்வகிப்பதில் ஏற்ப்பட்ட சிக்கல் காரணமாக நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துடன் இணைக்கப்பட்டு 70களில் புங்குடுதீவு - நயினாதீவு பலநோக்குக்கூட்டுறவுச் சங்கம் நிறுவப்பட்டு இரண்டாவது ஈழயுத்தம் ஆரம்பித்து நயினாதீவானது யாழ் குடா நாட்டுடனான தொடர்பை இழக்கும் வரை பல்வேறு இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் குறிப்பாக இந்தியஇராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தகாலத்தில் நயினாதீவிற்கு வந்து சேர்ந்த அனைத்து மக்களும் தன்னால் முடிந்த வரை அளப்பரிய சேவையாற்றியது. நயினாதீவு யாழ் குடாநாட்டுடனான தொடர்பை இழந்த காலத்தில் (1991 இலிருந்து 1996 வரை) நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் மீண்டும் 1991ஆம் ஆண்டு திரு.சி.நா.மதியாபரணம் அவர்களின் தலைமையில் நிறுவப்பட்டு செயற்பட்டு வந்த போதிலும் நிதி பரிபாலனம் சரிவர மேற்கொள்ளப்படாமையினால் தொடர்ந்து செயற்பட முடியாத நிலையை அடைந்தது. இதன் விளைவால் மீண்டும் நயினாதீவில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாடானது புங்குடுதீவு - நயினாதீவு பலநோக்குச் கூட்டுறவுச் சங்கத்தினால் இன்று வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் இன்றைய நிலையில் இலவச நிவாரணம் போன்றவற்றினைத்தவிர ஏனைய கொள்வனவுக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் தங்கியிருப்போர் தொகை கணிசமாக குறைவடைந்து விட்டது எனலாம்.

போக்குவரத்துத் துறையினை எடுத்து நோக்கினால் உள்ளூரில் பயணிகள் தனியாள் போக்குவரத்தின் முக்கிய ஊடகமாக மாட்டு வண்டில்களும் துவிச்சக்கர வண்டில்களுமே நீண்டகாலம் உதவி வந்துள்ளது. சில குடும்பங்களின் முக்கிய பொருளாதாரத்தினை ஈட்டும் மார்க்கமாக மாட்டு வண்டில்கள் காணப்பட்டன. தவிர இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சேவையில் ஈடுபட்டு வந்ததுடன் 80களின் நடுப்பகுதியுடன் பேருந்து பழுதடைந்ததுடன் சேவை இடைநிறுத்தப்பட்டது. ஈழ விடுதலைப் போராட்டத்தின் சமாதானகாலம் எனப்படும் 2001 முதல் 2006 வரையான காலத்தில் நயினாதீவின் உள்ளூர் பிரயாணிகள் போக்குவரத்தில் முச்சக்கரவண்டிகள் முக்கிய இடம் பிடித்ததுடன் வீடுகளில் மோட்டார் சைக்கில்களின் பாவனையும் அதிகரித்தது. மேலும் 80களின் நடுப்பகுதியில் இடை நிறுத்தப்பட்ட இலங்கைப் போக்குவரத்து சபையின் சேவையும் மீள ஆரம்பிக்கப்பட்டது. இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் என்னவெனின் 90கள் வரை உள்ளூரின் பிராதான பயணிகள் போக்குவரத்துக்கும் பண்டங்களை இடமாற்றுவதற்கும் மற்றும் நன்னீர் வழங்கல்களுக்கும் பயன்படுத்தப்பட்ட வண்டில்கள் இன்று கண்காட்சிப் பொருட்களாக ஒரு சில வீடுகளில் காணப்படுகின்றன. வண்டில்களுக்கு இந்த நிலைமை ஏற்படுவதற்கு ஊர் மக்கள் வேளாண்மை செயற்பாடுகளில் ஆர்வமிழந்தமை ஓர் முக்கியகாரணமாகும். மேலும் தனியார் பயணிகள் போக்குவரத்தில் இன்று ஒரு சில கார்கள் மற்றும் வான்கள் என்பனவும் பயன்பாட்டிலுள்ளன. அந்த வகையிலே நயினாதீவின் உள்ளூர் தனியாள் மற்றும் பயணிகள் போக்குவரத்தில் 2001ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஓர் மறுமலர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. என்றே சொல்ல வேண்டும். இந்த மறுமலர்ச்சி இலங்கைத்தீவின் ஏனைய பாகங்களிலிருந்தும், வெளிநாடு களிலிருந்தும் நயினாதீவு நாகபூசணி அம்பாளின் உற்சவ காலத்திலும் ஏனைய விசேட வைபவங்களுக்கும் வருகை தரும் ஊரவர்கட்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த தன் பின்னரான சுற்றுலாப் பயணிகளின் வருகையின் அதிகரிப்புடன் பயணிகள் போக்குவரத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் மறுமலர்ச்சி பெரும் பங்காற்றி வருகின்றது. நயினாதீவு என்பது நாற்புறமும் கடலால் சூழப்பட்ட தீவாகையினால் தீவகத்தின் பெரும்பாகத்தினை அடைந்து யாழ்நகரை அடைவதற்கு கடல்வழிப் பயணமே ஓர் மார்க்கமாக இருந்த நிலையில் ஆரம்பத்தில் கடல்வழிப்போக்குவரத்து நயினாதீவிலிருந்து ஊர்காவற்றுறைக்கும் பின்னர் பண்ணைப்பாலம் நிறுவப்பட்ட பின்னர் புங்குடுதீவின் இறுப்பிட்டி (களுதைப் பிட்டி) துறைக்கும் படகுகள் மூலம் இடம் பெற்று வந்ததுடன் இவை நீண்ட நேர கடல் வழிப் பயணங்களாகவும் காணப்பட்டன. இருப்பினும் புங்குடுதீவின் குறிக்கட்டுவான் பகுதியில் இறங்குதுறை அமைக்கப்பட்டவுடன் நயினாதீவிலிருந்தான கடல் வழிப் பயணம் இலகுவானதாகவும் குறுகிய நேரத்தினை கொண்டதாகவும் மாற்றமடைந்தது. அடுத்து நயினாதீவிற்கும் குறிக்கட்டுவானுக்கும் இடையிலான குறுகிய கடல் வழியினை கடப்பதற்கு படகுச் சேவை இடம் பெற்று வருவதுடன், ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக வளர்ச்சியடைந்த காலத்தில் படகுசேவை அதிகம் நெருக்கடிமிக்கதாயிருந்தது. இப் படகு சேவையினை நடாத்துவதற்காக நயினா தீவின் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு துறைகள் காணப்பட்டன. வடக்கில் நாகபூசணி அம்பாள் ஆலயத்துக்கு முன்பாக உள்ள துறையினை மக்களால் 'கோவிலடி' என அழைத்ததுடன் தெற்கிலுள்ள துறையினை 'பங்களாவடி' இது பின்னர் மருவி 'வங்களாவடி' என அழைத்தனர். இவ்வாறு பங்களாவடி எனப் பெயர் வருவதற்கு இத்துறைமுகத்திற்கு எதிரே அரச அதிகாரிகள் வந்து தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த வாடிவீடு காரணமாயிருந்தது. இவ்வாறு ஆயுதப்போராட்டத்தில் இந்த இரண்டு துறைகளில்லிருந்தும் படகுச் சேவை இடம் பெற்று வந்ததுடன் கடற் படையினரின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த பௌத்த விகாரைக்கு முன்னால் (புத்தகோயிலடி) அமைக்கப் பட்டிருந்த துறையிற்கு சென்று பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு பரிசோதித்து மீண்டும் பயணத்தினை தொடர வேண்டிய நிலை காணப்பட்டது. இவ்வாறு பரிசோதிப்பதற்கு குறிக்கட்டுவானும் அதற்கப்பால் யாழ் குடாநாட்டின் ஏனைய பகுதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தமை முக்கிய காரணமாகும்.இவ்வாறு இரண்டு துறைகளும் (நயினாதீவு மற்றும் குறிக்கட்டுவான்) இரு வேறு ஆயுதம் தரித்தோரின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் பயனிகளும் படகு உரிமையாளர்களும் சந்தித்த இடர்பாடுகள் சொல்லில் அடங்காதவை. உதாரணமாக ஒரு விடயத்தை குறிப்பிடுகிறேன். பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் படகு உரிமையாளர்க்கு தமது படகுகளில் இலங்கைத்தீவின் தேசியக் கொடியினை பறக்க விட்டிருக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் அவை அகற்றப்படக் கூடாது என்பதும் நயினாதீவில் முகாமிட்டுள்ள கடற்படையினரின் கண்டிப்பான உத்தரவு.அவ் உத்தரவுக்கமைய படகு உரிமையாளர்கள் தமது படகுகளில் இலங்கைத்தீவின் தேசியக் கொடியினை பறக்க விட்டுக்கொண்டு குறிக்கட்டுவான் துறையை வந்தடைய அங்கு விடுதலைப் புலிகள் இலங்கைத்தீவின் தேசியக் கொடியினை கழற்றி சென்று விடுவர் சிலவேளைகளில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடியினை பறக்க விட்டு செல்லும்படி வற்புறுத்தியுள்ளனர். இவ்வாறான நிலைமைகளில் படகு உரிமையாளர்களும் பயணிகளுமே அதிகம் பாதிக்கப்பட்டதுடன் சில வேளைகளில் படகுசேவை நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நயினாதீவின் படகுச்சேவை இரு தலைக்கொள்ளி எறும்பாக இன்னல் பட்டுக்கொண்டு இருக்கையில் 1986ல் அம்பாள் கோயிலடி துறைமுகத்திற்கு வருகை தந்த கடற்படையின் மூலம் '110' என அழைக்கப்படும் படகு விடுதலைப் புலிகளினால் கடற்கண்ணிவெடி தகர்க்கப்பட்டதனைத் தொடர்ந்து கடற்படையினரும் இராணுவத்தினரும் இணைந்து நடாத்திய கொடூரத்தில் பல பயணிகள் படகுகள் தீக்கிரையாக்கப்பட்டன, பல பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன, மற்றும் நாகபூசணி அம்பாளின் தேர்கள் மற்றும் ஆலயக் கதவு என்பன தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறான இழப்புக்கள் மற்றும் அழிவுகளின் பின்பும் 1991 ஆம் ஆண்டு வரை பயணிகள் படகுச் சேவை தொடர்ந்தாலும் 1991ல் தீவகம் யாழ் குடாநாட்டுடனான தரைவழி தொடர்ந்தாலும் 1991ல் தீவகம் யாழ் குடாநாட்டுடனான தரைவழித் தொடர்பினை இழந்திருந்ததினைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் 1996இல் யாழ் குடாநாடு முழுவதும் இலங்கைத் தீவின் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டதனைத் தொடர்ந்து தீவகத்திற்கான தரைவழிப்பாதையும் மீண்டும் திறக்கப்பட்டது. அந்த வகையில் 1991 இன் பின்னர் 1996 வரையான காலப்பகுதியில் நயினாதீவின் பயணிகள் மற்றும் நோயாளிகளின் போக்குவரத்து சிக்கல் நிறைந்ததாக காணப்பட்டது. பயணிகள் திருகோணமலைக்கு செல்வதற்காக தமது பெயர்களைப் பதிவு செய்து விட்டு இலங்கை அரசாங்கத்தினால் கடற்படையின் உதவியுடன் செயற்படுத்தப்பட்டு வந்த கப்பல்களுக்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய நிலையிலிருந்தனர். மேலும் நோயாளிகள், கர்ப்பிணித்தாய்மார் கள் சர்வதேசசெஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இக் காலப்பகுதியில் நயினாதீவுக்கான உணவு வழங்கலும் மிக நெருக்கடிமிக்கதாகவே காணப்பட்டது. கப்பல்களில் கொழும்பிலிருந்து கொண்டு வரப்படும் பொருட்களிலேயே நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு போன்ற தீவுகள் தங்கியிருந்தன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு இலவசமாக பகிரப்பட்டமையானது மக்களின் உழைக்கும் ஆற்றலில் கணிசமான பாதிப்பினை ஏற்படுத்தியது. 1996இன் பின்னர் தரைவழிப்பாதை மீண்டும் திறக்கப்பட்டதுடன் நயினைதீவுக்கான பயணிகள் போக்குவரத்துக்கான படகு சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும் பங்களாவடி துறைமுகத்திலிருந்தான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டாலும் இதற்கு 1991க்கும் 1996க்கும் இடைப்பட்ட காலத்தில் படகுகள் பயன்படத்தப்படாமையினால் அவை பழுதடைந்து அழிவடைந்தமை மற்றும் படகு உரிமையாளர்களின் இடம் பெயர்வுகள் காரணமாயிருந்ததுடன் பங்களாவடி துறைமுகம் கடலரிப்பு மற்றும் பராமரிப்பின்மையினால் பழுதடைந்திருந்தமையும் காரணமாயிருந்தது. எனவே 1996 இன் நயினாதீவிலிருந்து குறிக்கட்டுவானுக்கான படகு சேவை கோவிலடி துறைமுகத்திலிருந்து மட்டுமே இடம் பெற்று வருவதுடன் கடற்படையினரின் ஓர் நாடகமாகும். சோதனைச்சாவடியும் இதிலுள்ளது.2001ம் ஆண்டுக்குப் பின்னர் 2006 வரை காணப்பட்ட சமாதான காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படவே அதனை ஈடுசெய்ய சில புதிய படகுகள் சேவையிலிணைத்துக் கொண்டன. இருப்பினும் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் தென்னிலங்கை சுற்றலாப் பயணிகளின் வருகை பெருமளவில் அதிகரிக்கவே நயினாதீவில் பலர் படகு கொள்வனவில் முதலிடுவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இவ்வாறு படகு கொள்வனவில் அதிகரித்த முதலீட்டினால் இன்று நயினாதீவில் ஏறக்குறைய 60 படகுகள் சேவையில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் கணிசமான வருவாய் அதிகரித்துள்ளதுடன் உள்ளூர் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. தொடர்பூட்டலினைப் பொறுத்த வரையில் நயினாதீவின் தபாலகம் நீண்டகாலம் இப்பணிக்கு பெரும் பங்காற்றி வந்துள்ளது. இந்த தொலைபேசி வசதியினை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட தொலைத் தொடர்பு கோபுரத்தினை நயினாதீவு தபாலகத்தில் இன்றும் காணலாம். நயினாதீவு தபாலகம் உப தபாலகமாக இருந்த காலத் திலும் சரி தபாலகமாக தரமுயர்த்தப்பட்ட காலத்திலும் சரி தொலைபேசி சேவையினை வழங்குவதில் அதன் பங்கு அளப்பரியது.ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக வளர்;ச்சியடைந்ததன் பின்னர் தபாலகத்தினூடாக தொலைத்தொடர்பு வசதிகள் செயலிழந்தன இதன் பின்னர் 1996 இற்கு பின்னரான காலத்தில் சிறிலங்காரெலிக் கொம்மினால் அறிமுகப்படுத்தப்பட்ட கம்பியற்ற தொலைபேசி இணைப்பினைபொது அமைப்புக்களும் சில தனியாரும் பெற்றுக் கொண்டதுடன் நயினாதீவில் தொலைபேசி வசதி மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததன் பின்னரான காலத்தில் யாழ் குடாநாட்டினை நோக்கிப் படையெடுத்த கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் நயினாதீவினையும் விட்டு வைக்கவில்லை. இன்று நயினாதீவிலும் சில கையடக்கத் தொலைபேசி நிறுவனங்களின் தொலைத் தொடர்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன் கையடக்கத்தொலைபேசியின் பாவனை நயினாதீவில் கணிசமாக அதிகரித்து நயினாதீவின் தொடர்பூட்டல் பணியில் முக்கிய பங்காற்றி வருகின்றதெனலாம். தொலைபேசி வசதிகளுக்கப்பால் பாரம்பரிய கடிதப் போக்குவரத்துப் பணியினை நயினாதீவு தபாலகம் தொடர்ந்து மேற்க்கொண்டு வருகின்றது.

நயினாதீவின் வங்கித் தொழிலைமேற் கொள்கையில் ஊர்காவற்றுறை, வேலணை யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கே மக்கள் தமது வங்கித் தேவையினைப் பூர்த்தி செய்வதற்கு செல்ல வேண்டியிருந்தது. ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் அதனால் நயினாதீவில் அதிகரித்த பணப்புளக்கம் (பொதுவாக வணக்கத் தலங்களில்) காரணமாக நயினாதீவில் வங்கியின் தேவை உணரப்படவே இலங்கை வங்கியானது நயினாதீவில் அதன் கிளை ஒன்றினை நிறுவி நயினாதீவு மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது. இந்தக் கிளை நிறுவப்பட்டதன் மூலம் நயினாதீவில் நீண்ட நெடுங்காலமாக காணப்பட்ட குறையான வங்கிச்சேவை யினை நயினாதீவு மக்கள் இலகுவாக அனுபவிக்க முடிந்துள்ளது.

அடுத்ததாக நயினாதீவின் அரசபணி என்று நோக்குகையில் உள்ளூரில் மூன்று அரச பாடசாலைகள், வைத்தியசாலை, தபாலகம், ஆயுள்வேத வைத்தியசாலை பிரதேச செயலகத்தின் உபஅலுவலகமும் நூலகமும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் அலுவலகம் இலங்கை மின்சார சபையின் அலுவலகமும், இலங்கை வங்கிக் கிளை இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரசன்னம் என்பன காணப்படு கின்றன. இவ் அனைத்து அரச மற்றும் அரசசார் நிறுவனங்களிலும் நயினாதீவு மக்கள் பெரும்பான்மையினராக 95 சத வீதத்திற்கு மேல் கடமையாற்றி வருகின் றனர். என்பது நயினாதீவுக்கே உரித்தான சிறப்பம்சமாகும். கல்வியில் நயினாதீவு மக்கள் கொண்டுள்ள ஆர்வமே இந்த நிலையில் நயினாதீவு காணப்படுவதற்கு முக்கிய காரணமாகும். தீவகம் யாழ் குடாநாட்டுடனான தரைவழித் தொடர்பினை இழந்திருந்த 1991 - 1996 வரையான காலத்தில் அனலைதீவு எழுவைதீவு, ஊர்காவற்றுறை, மற்றும் காரைநகர் ஆகிய இடங்களுக்கு நயினாதீவிலிருந்தே ஆசிரியர் கள் சென்று சேவையாற்றி வந்தனர் என்றால் நயினாதீவில் கல்விப்பணி உள்ளடங்கலாக அரசபணியின் முக்கியத்துவத்தினை விளங்கிக் கொள்ளலாம். நயினாதீவிற்கு வெளியே நயினாதீவில் பிறந்தோரின் பங்களிப்பும் குறிப்பிட்டுக்கூறக்கூடியதே பொது நிர்வாக அதிகாரிகளாக, விரிவுரையாளர்களாக, பேராசிரியர்களாக, கல்வி அதிகாரிகளாக புகழ்பூத்த அதிபர்களாக, பொறியியலாளர்களாக, கணக்காளராக, வங்கி அதிகாரிகளாக ஆசிரியப் பெருந்தகை களாக, திட்டப்பணிப்பாளராக திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளாக இருந்து புகழ்பரப்பி வந்துள்ளதுடன் இன்றும் புகழ் பரப்பி வருகின்றனர். இங்கு கவலையுடன் சுட்டிக் காட்டவேண்டியதோர் விடயம்; என்னவெனில் நயினை மைந்தர்கள் பலர் இன்று வைத்தியர்களாகவுள்ள நிலையில் நயினாதீவு வைத்தியசாலையில் கடமையாற்ற வைத்தியர்களை தேடவேண்டியதோர் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகும். நயினையினைச்சேர்ந்த வைத்தியர்கள் சுழற்சி முறையிலேனும் நயினாதீவு வைத்தியசாலையில் பணியாற்ற முன் வரவேண்டும்; என்பது தாழ்மையான வேண்டுகோள்.

தனியார் பணியினை எடுத்து நோக்கினால் காலத்துக்கு காலம் நயினாதீவினைச் சேர்ந்த ஆசிரியர்களால் தனியார் கல்வி நிறுவனங்கள் நடாத்தப்பட்டு வந்துள்ளன. இவ்வாறான தனியார் கல்வி நிலையங்களின் வருகை என்பது 80களிலேயே ஆரம்பித்தது எனலாம். தவிர தனியார் வைத்தியசாலைகள் என்னும் போது நயினாதீவினைச் சேர்ந்த தமிழ் பரி;யாரிமார் சிலரால் ஆயுள்வேத வைத்திய சாலைகள் நடாத்தப்பட்டு வந்துள்ளது. ஆங்கில வைத்தி யத்திற்கு அன்றும் இன்றும் அரசினர் வைத்தியசாலையினையே நாடவேண்டிய நிலை காணப்படுகின்றது. நயினாதீவில் கையடக்கத் தொலைபேசி பாவனை ஆரம்பிப்பதற்கு முன்னர் கம்பியல்லா தொலைபேசி இணைப்பினை பெற்றிருந்த ஒரு சிலரின் வீடுகளில் தொலைபேசி நிலையங்களை நடாத்தி வந்துள்ளரெனினும் இன்று அவை செயலிளந்து விட்டன எனலாம்.

சுற்றுலா
நயினாதீவில் சுற்றுலாத்துறையின் செயலாற்றத்திற்கு நீண்டகால வரலாறுண்டு. இதற்கு முக்கிய காரணம் நயினாதீவில் அமைந்து அருள் பாலிக்கும் இரண்டு முக்கிய வணக்க ஸ்தலங்கள் ஆகும். சரித்திரப் பிரசித்தி பெற்றதும் 64 சக்தி பீடங்களில் ஒன்றாகப் போற்றப்படும் புவனேஸ்வரி பீடமாகவும் திகழும் நாகபூசணி அம்பாள் ஆலயம் அதே போல் சிலப்பதிகார காலத்துடன் தொடர்புபட்டதும் கௌதம புத்தரின் இலங்கை விஐயத்தின் முக்கிய இடங்களில் ஒன்றாகவும் பௌத்தர்களால் போற்றப்படும் பௌத்த விகாரையும் நயினாதீவின் சுற்றுலா வரலாற்றுக்கு இன்றும் சான்று பகர்கின்றன. ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுத போராட்டமாக வளர்ச்சியடைவதற்கு முன்னரும் ஈழவிடுதலைப்போராட்டத்தின் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் பௌத் தர்களின் முக்கிய சுற்றுலா வணக்கத்தலமாக நயினாதீவு பௌத்த விகாரை காணப்படுவதுடன் இந்துக்களைப்பொறுத்த வரையில் அலைகடல் தாண்டி வந்து நயினையில் அருள்பாலிக்கும் அன்னை நாகபூசணியை தரிசித்து பலன் பெற அன்று முதல் இன்று வரை யாத்திரிகளின் வரவு அலைகடல் போல் வற்றாது காணப்படுவதுடன் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயமும் இலங்கைத்தீவின் ஓர் இந்து சுற்றுலா வணக்கத்தலமாக குறிப்பிட்டுள்ளமையும் நோக்கலாம். ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான காலத்தில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் குறிப்பிட்ட இரண்டு ஆலயங்களின் வருவாயும் கணிசமாக அதிகரித்த அதே வேளை உள்ளூர் வர்த்தகம், போக்குவரத்து என்பவற்றிலும் சுற்றுலாச் செயலாற்றம் பாரிய மாறுதல்களை ஏற்படுத்தியதுடன் முதலீட்டு வாய்ப்புக்களை அள்ளி வழங்கியுள்ளதெனலாம்.

குடிபெயர்ந்தோர் பணவனுப்பல்களும் அதன் சமூக பொருளாதார தாக்கமும் நயினாதீவினைப் பொறுத்த வரையில் வேலைதேடி வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு எனலாம். 1983க்கு முன்னர் ஈழவிடுதலைப் போராட் டத்தில் ஆயுதப்போராட்டம் தீவிரமடைவதற்கு முன்னர் நயினாதீவில் மிக சிறிய அளவினர் சிங்கப்பூர், மலேசியா, மாலைதீவுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைதேடிச் சென்று திரும்பியிருந்தனர். இருப்பினும் 1983இன் பின்னரான காலத்தில் அதிகரித்த வன்முறைகளும் மேலை நாடுகள் இலங்கையிலிருந்து வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கி பராமரிக்க முற்பட்டமையும் தமிழர்கள் பலர் மேலை நாடுகளை நோக்கி குடிபெயர்வதற்கு ஏதுக்காரணியாயிருந்ததுடன் நயினாதீவும் இதற்கு விதி விலக்கற்றதாய் விளங்கியது. இவ்வாறு குடிபெயர்ந்த இளவயது ஆண்கள் தங்களுக்கான வாழ்க்கைத் துணையினை உள்ளூரில் தேட முற்பட்டதுடன் அதன் மூலம் மேலை நாடுகளுக்கு குடிபெயர்ந்தோரின் எண்ணிக்கை மேலும் விரிவாக்க மடைந்தது. இவ்வாறு குடிபெயர்ந்தோர் ஊரில் வசிக்கும் தமது பெற்றோர், சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்களுக்கும் பணத்தினை அனுப்பி வைத்து அவர்களை சந்தோசப்படுத்த விழைந்தனர். இவ்வாறான குடிப்பெயர்வானது உள்ளூரின் உற்பத்தியில் குறப்பாக வேளாண்மையில் ஈடுபட்ட நிலங்கள் தரிசு நிலங்களாக்கியதுடன் குடிபெயர்ந்தோரின் பணவனுப்பல்கள் உழைத்து வாழ்ந்த எமது கல்விக்கே முக்கியம் கொடுத்து கற்றோரை மதித்து வாழ்ந்த எமது சமூகத்தினை சோம்பேறிகளாகவும் மாற்றிவிட்டது என்பது ஓர் கசப்பான உண்மை. கல்விக்கே முக்கியம் கொடுத்து கற்றோரை மதித்து வாழ்ந்த எமது சமூகம் வெளிநாட்டுப் பணம் மற்றும் கலாச்சாரத்தின் உள்வரவால் இன்று தவறான வழியில் செல்ல முற்படுவது வருந்தத்தக்கது. இதனைச் சீர்செய்வதற்கு இன்றைய இளைய தலைமுறையும், பொது அமைப்புக்களும், பெரியோரும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. எமது கலாச்சாரத்தினை பண்பாட்டினை, கலையை,மதத்தினை பாதுகாத்து பெரியோரையும் கற்றோரையும் மதிக்கக் கற்றுக் கொள்வதன் மூலமே எமது இனத்தினதும் சமூகத்தின் இருப்பினையும் பாதுகாக்க முடியும் குடிபெயர்ந்தோர் பணவனுப்பல்கள் இந்த சந்ததியுடன் முடிவடைவது. மேலை நாடுகளிலுள்ள அடுத்த சந்ததிக்கு எம்மில் எவரையும் தெரியாது அல்லது அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சிக்கப் போவதுமில்லை. ஆனால் நாங்கள் வாழவேண்டும், மாண்புமிகு மனிதர்களாக மானிட விழுமியங்களுடன் நயினை மண்ணிற்கு தொடர்ந்து புகழ் சேர்த்து வாழ வேண்டும். இதன் மூலமே நாமெல்லாம் பிறந்து வாழ்ந்த நயினைத் தாய் பூரிப்படைவாள். எதிர்காலத்தில் எங்கள் குழந்தைகளின் சிறப்பான வாழ்வு கருதி இன்றே உறுதியெடுத்து செயற்படுவோம். அனைவரும் கோர்த்து பயணிப்போம். நாமே எமது அடுத்த சந்ததிக்கு வழிகாட்டி. அதை மனதில் கொண்டு செயற்படுவோமாக.

நயினாதீவின் உட்கட்டமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் நயினாதீவு சமூகபொருளாதார கல்வி கலாசார அபிவிருத்திச் சங்கத்தின் பங்கு காத்திரமானது. நயினா தீவினை உட்கட்டமைப்பு வசதியினை எடுத்து நோக்கினால் முதலில் இது ஒரு நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட தீவு என்ற விடயம் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். அந்த வகையில துறைமுகங்களின் அபிவிருத்தி என்பது இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. நயினாதீவின் வடக்கேயுள்ள துறைமுகம் 1986 இல் விடுதலைப் புலிகளின் கடற்படை படகு மீது நடத்திய கடல் கண்ணிவெடித் தாக்குதலில் இரண்டாகப் பிளவடைந்து கடலினுள் வீழ்ந்தது. இதன் பின்னர் இரண்டு துண்டுகளுக்கும் இடைப்பட்ட பகுதி கற்கள் மற்றும் மண் போடப்பட்டு நிரப்பப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனைப் புனரமைக்க வேண்டிய தேவை நெடுங்காலமாக உணரப்பட்டமையினால் இது விடயம் தொடர்பாக நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாச்சார அபிவிருத்தி சங்கம் உரிய அதிகாரிகளுடன் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் தொடர்பு கொண்டு ஆவன செய்ததன் பலனாய் இத் துறைமுகம் புனரமைக்கப்பட்டது. இருப்பினும் தெற்கே பங்களா வடியிலுள்ள துறைமுகத்தினை புனரமைப்பதற்கு இதுவரை எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்படாத போதிலும் இதற்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமையாகும். மேலும் வீதியினைப் பொறுத்தவரையில் பௌத்த விகாரையினை ஊடறுத்துச்செல்லும் பிரதான வீதி, வீரபத்திரர் வீதி, முருகன் வீதி, பிள்ளையார் வீதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமானதாகவுள்ளதுடன் ஏனைய வீதிகள் பிரதேச சபைக்கு சொந்தமானதாகும். நயினாதீவின் வீதிப்பராமரிப்பு எந்த நிறுவனத்திற்கு சொந்தமாயிருந்தாலும் வீதிகளின் கற்கள் மக்களின் கால்களை பதம்பார்ப்பதே அதிகம். வீதிகள் அதிகம் பழுதடைந்தமைக்கு நீண்டகாலம் பராமரிக் கப்படாமலிருந்தமை மற்றும் நீண்டகாலமாக நயினாதீவில் மாட்டுவண்டிகள் பயன் பாட்டிலிருந்தமை என்பவற்றை முக்கிய காரணமாகச் சொல்லலாம். நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாச்சார அபிவிருத்திச் சங்கம் உரிய அதிகாரி களுடன் தொடர்பு கொண்டு ஆவன செய்த போதிலும் இவ்வீதிகளின் செப்பனிடும் பணி இன்னமும் மந்த கதியிலேயே இடம் பெற்று வருகின்றது. இவ்வாறு செப்பனிடும் பணி இன்னமும் மந்த கதியிலேயே இடம் இடம்பெறுவதற்கு வேலையாட்கள்உட்பட உள்ளீடுகளை உள்ளூரில் பெற்றுக்கொள்ள முடியாமை மற்றும் போக்குவரத்தில் ஏற்படும் தாமதமும் அதிகரித்த செலவும் காரணமாயிருக்கலாம். நயினாதீவில் வீதி அபிவிருத்தி என்று சொல்லும் பொழுது நயினாதீவு சமூக பொருளாதார கலாசார அபிவிருத்திச் சங்கத்தின் பணி போற்றுதற்குரியது. நயினாதீவின் பிரதான வீதி பௌத்த விகாரையை ஊடறுத்துச் செல்வதுடன் இதன் குறுகிய பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டில் காணப்பட்டமை பொது மக்களின் இயல்பான போக்குவரத்திற்கு இடஞ்சலாக விளங்கியமையை கருத்தில் கொண்டு பிரதான வீதிக்கு மேற்கேயுள்ள ஆலங்குளம் வீதியை அகலப்படுத்தி தார் ஊற்றப்பட்ட வீதியாக செப்பனிட அங்கத்தவர்-களினதும் மற்றும் அதிகாரிகளினதும் பாரிய பங்களிப்புடன் நடவடிக்கை மேற்கொண்டு அதனில் வெற்றியும் கண்டது. இவ்வாறு ஆலங்குளம் வீதி செப்பனிடப்பட்டதன் மூலம் நயினை வாழ் மக்கள் பெரும்பயனை பெற்று வருகின்றனர். தவிர இவ்வீதிக்கு மின்னூட்டுவதற்கும் சங்கம் நடவடிக்கை எடுத்ததுடன் அதனையும் வெற்றிகரமாக செய்து கொடுத்த போதிலும் பயன்பெறு வோரால் அதனை பராமரிக்க முடியாத துரதிஷ;டமான நிலை ஏற்பட்டுள்ளது. என்பது அவ்வீதியால் இன்று பயணிக்கும் அனைவருக்கும் கண்கூடு. மேலும் நயினாதீவின் தெற்குப் பகுதிக்கு மின்சார இணைப்பினை விஸ்தரிப்பதற்கும் சங்கம் நடவடிக்கை எடுத்து அதனை மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. இவ்வாறான வீதிப்புனரமைப்பு மற்றும் மின்நூட்டல் பணிகளுக்கப்பால் நயினாதீவு வைத்திய சாலை, மற்றும் மணிபல்லவ கலாமன்ற மண்டபம் என்பனவற்றை தனது சங்க நிதியிலிருந்தும் அங்கத்தவர்கள் நலன் விரும்பிகள் உதவியுடனும் புனரமைத்து பயன்பாட்டுக்கு ஏற்ற விதத்தில் அமைத்தது நயினாதீவு நாகபூசணி வித்தியாசாலையில் கணணிக் கூடம் ஒன்றையும் அமைத்துக்கொடுத்ததுடன் நயினாதீவு கணேசவித்தியாலத்திற்குக் காணி யொன் றையும் விலையாகப் பெற்றுத் தந்துதவியுள்ளனர். நயினாதீவின் உட்கட்டுமான பணிகளின் அபிவிருத்திக்கு தொடர்ந்து அளப்பரிய தொண்டாற்றிவருகின்றது. இவற்றுக்கப்பால் நயினாதீவில் பசுமையினைப் பேணவேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடாய் ஆலங்குளம் வீதியின் பக்கத்தில் மரக்கன்றுகளை நாட்டி சங்க நிதியில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் நயினாதீவில் நன்னீர் கிணறுகளை பராமரிக்கும் பணிகளிலும் சங்கம் தனது பங்களிப்பினை வளங்கி வருகின்றது. அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் நயினாதீவின் உட்கட்டுமானப் பணிகளின் அபிவிருத்திக்கு நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்திச் சங்கத்தின் பணி அளப்பரியது. என்பதுடன் மேலும் பல அபிவிருத்திச் செயற்றிட்டங்களை முன்னெடுக்க நயினைவாழ் மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாய் இருப்பதுடன் பாரிய நிதிச் செலவில் மேற் கொள்ளப்படும் திட்டங்களை பாதுகாத்து எமது அடுத்த சந்ததியினருக்கும் செம்மையாக வழங்க வேண்டிய பொறுப்பு எம் அனைவரினதும் தலையாய கடமையாகும்.

நயினை மண் மேலும் பொருளாதார வளம் பெற நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்- வாரீர் வடம் பிடிப்போம்.

Posted on 05/10/12 & edited 02/04/15 @ Nainativu, LK