15. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி . .


வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக் காகாரம் ஆனாற்போல் - பாங்கறியாப்
புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்.

வரிப்புலி வேங்கை நோய் தீர்த்த விடகாரி - வரிகளோடு கூடிய வேங்கைப்புலி விடந் தீண்டியதால் உற்ற நோயைக் குணப்படுத்திய விடவைத்தியன், ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனாற் போல் - அப்புலிக்கே அவ்விடத்தில் ஆகாரம் ஆகியது போன்று, (தமக்கு அழிவு வரும் என்பதைச் சிறிதும் சிந்தியாது) பாங்கறியாப் புல்அறிவாளர்க்குச் செய்த உபகாரம் - நன்மை என்பதை அறியாத அற்ப புத்தியுடையவர்களுக்குச் செய்யும் உபகாரம், கல்லின் மேல் இட்ட கலம் - கல்லின்மேற் போடப்பட்ட மண்பாத்திரம் உடைவது போல உடனேயே அழிந்து விடும்.
விடகாரி - விடந்தீர்க்கும் வைத்தியன்
பாங்கு - நன்மை
புன்மை - அற்பம் - புல்லறிவு - அற்பபுத்தி
கலம் - மட்கலம் - மண்பாத்திரம்

Posted on 26/12/12 & edited 26/12/12 @ ,