13. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் . .


கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவை அல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே
நீட்டோலை வாசியாநின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நல் மரம்.

கவையாகி கொம்பாகி - கிளைகளையும், (அக்கிளைகளிலிருந்து தோன்றும்) கொப்புக்களையும் உடையனவாய், காட்டகத்தே நிற்கும் - காட்டினுள்ளே வளர்ந்து ஓங்கி நிற்கும், அவை நல்ல மரங்கள் அல்ல - அவற்றை நல்ல மரங்கள் என்று கூறுதல் பொருந்தாது , ஏனெனில், சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் - சபையின் நடுவிலே ஒருவர் வாசிக்குமாறு நீட்டிய ஓலையை வாசிக்க முடியாதவனாய் நிற்கும் எழுத்தறிவற்றவனும், குறிப்பறிய மாட்டாதவன் - பிறருடைய உள்ளக்குறிப்பை அறிய மாட்டாதவனுமே, நல் மரம் - நல்ல மரங்களாவர்.
கவை - பெரிய கிளை
கொம்பர் - கிளைகளில் தோன்று கொப்புகள்
ஓலை - எழுதிய ஓலை

Posted on 26/12/12 & edited 26/12/12 @ ,