12. மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம் . .


மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா (து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்.

தாழை மடல் பெரிது - தாழம்பூ நீண்ட பெரிய இதழ்களையுடையது, (ஆனால்) மகிழ் இனிது கந்தம் - (சிறிய இதழையுடைய) மகிழம்பூ இனிய வாசனையுடையது. அவ்வாறே, கடல்பெரிது - சமுத்திரம் மிகப் பெரியதாயிருப்பினும், மண்ணீரும் ஆகாது - அதன்நீர் அழுக்கைக் கழுவுதற்கேற்ற நீரன்று. (ஆனால்) அதன் அருகே சிற்றூறல் - அச்சமுத்திரத்தின் கரையின் அயலிலே (தோண்டப்படும்) சிறிய ஊற்றினது நீரானது, உண்ணீரும் ஆகி விடும் - குடிப்பதற்கும் ஏற்றதாய் அமைந்து விடும். (ஆதலின்) உடல் சிறியர் என்றிருக்க வேண்டா - உருவத்தாற் சிறியர் என்று எண்ணி ஒருவரை இகழுதல் ஏற்றதன்று.
மடல் - பூவிதழ்
மண்ணுதல் - கழுவுதல்
சிறுமை + ஊறல் = சிற்றூறல் - சிறிய ஊற்று

Posted on 26/12/12 & edited 26/12/12 @ ,