மகாபாரதம்

உண்மையான வரலாற்றை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்ட காவியங்களை வடமொழியில் இதிகாசங்கள் என அழைத்தனர். வடமொழியில் எழுந்த இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களும் உலகப் புகழ் பெற்றவை. வால்மீகி முனிவர் வடமொழியில் இயற்றிய இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் இராமாயணத்தைத் தமிழில் ஆக்கினார். "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல் - பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை" என்று பாராட்டும் பாரதி கம்பனை முதலில் வைத்துப் பேசுகின்றார். காரணம் கம்பராமாயண இலக்கியச் சிறப்பு.

வியாசர் இயற்றிய மகாபாரதம் பெறும் "மகா" என்ற அடைமொழியே அக்காவியத்தின் சிறப்பை எடுத்துரைக்கப் போதியதாகும். அதனைத் தமிழில் ஆக்கிய வில்லிப்புத்தூரர் சாதாரண தமிழறிவுயுடையோரும் கற்று விளங்கக் கூடிய வகையில் இலகுவான மொழிநடையைக் கையாண்டுள்ளமை பாராட்டப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.

மகாபாரதம், கதாபாத்திரங்களூடாக நாம் பின்பற்றி ஒழுக வேண்டிய பல தரும நெறிகளை எமக்கு உணர்த்துகின்றது. தருமத்தைக் கடைப்பிடித்து ஒழுகுவதென்பது இலகுவானதோர் செயலன்று. பல சந்தர்ப்பங்களில் தரும சங்கடங்கள் தோன்றி எம்மை நெறிதவற வைக்கப் பார்க்கும், வைத்தும் விடும். அத்தகைய தருமசங்கடங்கள் விளையும்போது நல்லோர் பலர் தமக்கு வரக் கூடிய தீங்கைச் சிறிதும் எண்ணாது தர்மத்தைக் கடைப்பிடித்துப் பண்பால் உயர்ந்து விளங்கினர் என்பதை மகாபாரதம் பல இடங்களிலும் எடுத்துரைத்து எமக்கு வழிகாட்டுகின்றது. அவற்றுட் சிலவற்றை இப்போது நோக்குவோம்.

கங்காதேவியைக் கங்கைக்கரையில் அழகிய பெண்வடிவில் கண்டு காதல் கொண்டு மணம்புரிந்தவன் பாண்டவர்களின் முன்னோனான சந்தனு மகாராசன். திருமணத்திற்கு முன் செய்துகொண்ட உடன்படிக்கைக்கமைய முதலில் பெற்ற ஏழு குழந்தைகளையும் சந்தனு கங்கையில் வீசிவிட்டான். ஆனால் எட்டாவது குழந்தையின் அழகில் மெய்மறந்த சந்தனு அதனை ஆற்றில் வீச மறுத்து விடுகின்றான்.ஒப்பந்தம் முறிவடைந்தமையால் கங்கை இனி அவனுடன் கூடி வாழமுடியாது என்பதைத் தெரிவித்துக் குழந்தையுடன் மறைந்து விடுகின்றாள். சந்தனு துயரக் கடலில் மூழ்கினான். பதினாறு ஆண்டுகளின் பின் சகல கலைகளையும் கற்ற, வீரபராக்கிரமம் நிறைந்த வாலிபனாக அக்குழந்தையை கொண்டு வந்துகங்காதேவி சந்தனுவிடம் ஒப்படைத்து மறைந்து கொள்கிறாள். "தேவவிரதன்" என்றபெயர் பூண்ட அவ்விளவரசனே பின்னர் "பயங்கர சபதம் செய்தவன்" என்ற பொருள் தரும் "வீஷ்மன்" என்ற பெயரால் அழைக்கப்படுபவனாவான்

சந்தனு மகராசன் 'பரிமளகாந்தி' என்ற அழகிய பெண்ணைக்கண்டு அடங்கா மோகம் கொள்ளுகின்றான். அவளை மணம் புரிய எண்ணி அவளுடைய தந்தையிடம் ஒரு அமைச்சரைத் தூதனுப்புகிறான். முடிசூடி அரசனாக ஒரு குமாரன் முன்னரே இருப்பதால் தனது மகள் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசுரிமை கிட்டாது எனக் காரணம் கூறி அவளது தந்தை மறுத்துவிடுகின்றான். செய்தியறிந்த சந்தனு அக்கவலையால் வாட்டமடைகின்றான்.

தந்தையின் கவலைக்காண காரணத்தை அறிந்த வீட்டுமர் நேரே பரிமளகாந்தியின் தந்தையிடம் சென்று தான் அரசாளப் போவதில்லை என ஆணையிட்டு அவனுடைய மகளை விவாகம் செய்து கொடுக்குமாறு வேண்டினார். "நீ அரசாளாவிட்டாலும் உன்னுடைய பிள்ளைகள் அரசுரிமை கோருவார்கள் தானே, ஆதலின் நான் திருமணத்திற்கு உடன்படேன் என அவன் மீளவும் மறுக்கின்றான். தான் திருமணமும் செய்யப்போவதில்லை என்று பயங்கர சத்தியம் செய்து தந்தை அப்பெண்ணை மணக்க வழி வகுக்கின்றார் வீஷ்மர். தந்தைக்காகத் தனயன் புரிந்த தியாகத்தை இங்கு காண்கின்றோம்.

இச்சத்தியமே பின்னர் குருவுக்கு எதிராக வில்லெடுக்க வைக்கும் தருமசங்கடத்தை வீட்டுமருக்குக் கொடுத்து விடுகிறது. தன்னைச் சரணடைந்த அம்பை என்னும் காசிராசன் மகளை மணக்குமாறு பணிக்கிறார் வீட்டுமருக்கு வில்வித்தை கற்பித்த குருவாகிய பரசுராமர். தனது விரதத்தைக் கூறிப் பணிவோடு மறுக்கிறார் வீட்டுமர். கோபம் கொண்ட பரசுராமர் யுத்தம் புரியத் தொடங்கவே வீட்டுமர் குருவுக்கு எதிராகப் போரிட வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகின்றது. போரிட்டு வெற்றியடைகின்றார் வீட்டுமர். இப்படியான தருமசங்கடங்களை மகாபாரதத்திற் பல சந்தர்ப்பங்களில் நாம் காணமுடிகின்றது.

பூதத்துடன் பந்தயம் வைத்துத் தன்னை நோக்கி ஓடிவந்த வீமன் ஒரு காலைத் தருமரிருந்த இடத்தில் வைக்கும் போது தூக்கிய மறு காலை பூதம் பிடித்து வழக்கிட ஒருபாதி பூதத்திற்கே என்று தீர்ப்பு வழங்குகின்றான் தருமன். பூதமாக வந்த தேவன் தருமனுடைய நடுநிலையை வாழ்த்திச் செல்கின்றான்.

இராச சூயயாகம் காணவந்த துரியோதனன் தருமன் பெற்றுள்ள உயர்நிலை கண்டு மனம் கொதிக்கின்றான். கொதிக்கும் பொறாமைக்கடலை மேலும் மூட்டி விடுகின்றனர் கண்ணன், சகுனி முதலியோர். சகுனி ஆலோசனைப்படி அழகியமண்டபம் நிறுவி அதன் திறப்புவிழாவுக்குப் பாண்டவரையழைத்து சூதாட வைத்து அவர்களை ஓட்டாண்டிகளாக்க முயல்கின்றனர். மகனின் வார்த்தைக்குத் தந்தை திருதராட்டினன் இணங்குவது தகாத செயல் எனக் கண்டித்துத் தமையனுக்குப் புத்திமதி கூறுகின்றான் விதுரன். அங்கு விதுரனையே பாண்டவரை அழைத்துவரப் போ என்கிறான் திருதராட்டினன். விதுரனுக்குத் தர்மசங்கடம். போவது பாண்டவருக்கு அழிவைத் தேடித்தரும். போக மறுப்பது தமையன் சொல்லை மறுக்கும் தர்மம் அல்லாத செயல். தமையன் சொல்படி தூது போகின்றான். மறத்துக்குத் துணைபோகின்றான் விதுரன்.

ஆனால், தருமனிடம் ஓலையைக் கொடுத்தபோதே அழைப்பின் மூல நோக்கம் சூதாடல் என்பதையும் தெரிவித்துத் தன்னுடைய சுமையையும் இறக்கிவிடுகின்றான். நோக்கம் அதுவாயின் நாம் போகத் தேவையில்லை என்கின்றனர் தம்பியர். அழைத்தவன் பெரிய தந்தை; அழைக்க வந்திருப்பவன் சிறிய தந்தை; இவர்களுடைய வார்த்தைகளை மறுக்கும் பாவத்திலும் பார்க்க, உடைமைகளை இழப்பதால் நமக்கு வரப்போகும் கேடு பெரிதில்லை என்று கூறி அவர்களுடன் புறப்படுகின்றான் தருமன். தருமம் விளைக்கும் சங்கடத்தில் தீர்வு காணும் திண்மையைத் தருமன் எமக்கும் காட்டுகின்றான்.

துரியோதனன் துகிலுரியுமாறு கட்டளையிட்டபோது வீமன் கதையில் கை வைக்கிறான். விஜயன் வில்லில் கைவைத்து விட்டான். நகுல சகாதேவரும் கொதிக்கின்றனர்; கட்டுண்டோம் பொறுத்திருப்போம் என்ற தமையன் வார்த்தைக்கு ஆண்மையாளர்களாகிய அவர்கள் அடங்கிவிடுவதைக் காண்கின்றோம்.

சூதாட்டமுடிவில் வனம் செல்லப் புறப்படும் போது மறுசூதாட வேண்டுகிறான் திரெளபதி. தருமத்தைப் பணயமாக வைக்கின்றான் தருமன். மாமனின் வெற்றியில் அசையாத நம்பிக்கை கொண்ட துரியோதனன் அதுவரை தருமன் தோற்றன யாவற்றையும் எதிர்ப்பணயமெனக் கூறுகின்றான். கிருஷ்ணனின் அருளால் சகுனியின் மாயம் தோற்றது. தருமன் செப்பியயாவும் வென்றான். அப்படியானால் வனம் போகத் தேவையில்லை என்கின்றனர் தம்பியர். வீட்டுமார் போன்ற பெரியோர்கள் பன்னிரண்டு வருடம் வனவாசம், ஒருவருட அஞ்ஜாவாதம் என்று கூறிய கட்டளைகளை முதலில் நிறைவு செய்த பின்னரே வென்றன பெற்று அரசாள்வது என்று கூறிப் புறப்பட்டு
" நாட்டிடை எல்லை பெற்றாள் நறுமலர் சிவப்ப ஏகிக்
காட்டிடை புகுந்த போதும் கலக்கமற்று உவகை கூர்ந்த"
தருமன் செயல் போதிக்கும் பாடம் எத்தகையது? எண்ணிப்பாருங்கள்.

வனவாச காலத்தில் துரியோதனன் ஏவற்படி காளமாமுனியின் யாகத்தில் தோன்றிய பூதத்திடமிருந்து காப்பாற்றுவதற்காகக் கிருஷ்ணரும் தருமதேவதையும் உருவாக்கிய நச்சுப் பொய்கையில் நீரருந்தித் தம்பியர் நால்வரும் இறந்து கிடக்கக் கண்டு தானும் நீரருந்தி இறக்கத் துணிகின்றான் தருமன். தருமனிடம் யட்சன் பல வினாக்களை வினாவித் தகுந்த விடைபெற்று மகிழ்ந்து இறந்து போன தம்பியரில் ஒருவனை மாத்திரமே எழுப்ப முடியும். யாரை எழுப்ப? எனக் கேட்ட போது நகுலனை எழுப்புமாறு வேண்டுகின்றான் தருமன். வீமனை, அருச்சுனனை எல்லாம் விட்டு விட்டு நகுலனை எழுப்புமாறு கேட்டதேன் என்றனர்.

"குத்திர மிலா மொழிக் குந்திக்கு யான் ஒரு
புத்திரன் உளன் எனப் புரிந்து நல்கினாய்
மந்திரிக்கு ஒருமகவு இல்லை"
என்று தருமன் கூறும் வார்த்தை - குந்திக்கு நான் ஒருமகன்; அதுபோல தாய் மைத்திரியின் பிள்ளைகளில் ஒருவரான நகுலன் உயிர்வாழ வேண்டும் என எண்ணும் தருமனின் நடுவுநிலைமை எமது உள்ளத்தைச் சிலிர்க்க வைக்கின்றது.

சமாதான வாழ்வை வேண்டி எவ்வளவு தூரத்துக்கு விட்டுக்கொடுக்க முடியுமோ அவ்வளவுக்கும் விட்டுக் கொடுத்து போரைத் தவிர்க்க முயலும் தருமனையும் கிருஷ்ணனைத் தூதாக அனுப்பும் சந்தர்ப்பத்தில் காண்கின்றோம். நாட்டின் பாதி வேண்டு; மறுத்தால் ஐந்து ஊர் வேண்டு; அதையும் மறுத்தால் ஐந்து இல்லம் வேண்டு......... என்று கூறுகின்றான். "கேள்" என்று கூறாது "வேண்டு"என்று கூறும் பண்பும் நாம் உணரவேண்டியதாகும்.

போர் என்று நிலை முற்றி விட்டது. களப்பலியூட்டவேண்டும். ஏற்ற நாட்பார்க்கச் சகாதேவனிடமே வருகின்றான் துரியோதனன். தருமனது தலைவிழக் களவேள்வி தொடக்கக் காலங் கணித்துக் கொடுக்கின்றான் சகாதேவன். தன்னைநம்பி வந்தவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாது தமையன் தலை விழ நாட் கணிக்கின்றான் சகாதேவன். அவனது செயலறிந்து தம்பியைப் பாராட்டிய தருமனின் பண்பிற்கு ஈடேது

மருமகனாகிய தருமனுக்கு உதவியாகப் படை கொண்டு வருகின்றான் இணையில்லாத வீரனாகிய சல்லியன் துரியோதனன் சூழ்சியாகக் காட்டுவழியில் தண்ணீர்ப்பந்தல் அமைத்து உணவும் கொடுத்ததை அறியாது உண்டு பின் அதற்காக அந்தத் துரியோதனன் பக்கம் சேனையோடும் சேர்ந்து போரிடும் சல்லியனின் தருமசங்கடமும் எம்மைச் சிந்திக்க வைப்பதொன்றேயாகும்.

பதின்மூன்றாம் நாட்போரிலே தனியொருவனாக நின்று துரோணரின் சக்கரவியுகத்தைச் சிதறடித்துப் பின் தேரிழந்து, வில்லிழந்து, வாள்பிடித்த வலக் கரமும் இழந்து நின்றநிலையில் யுத்ததர்மம் என்பதைச் சிந்தியாது சயந்திரனாற் கொல்லப் படுகின்றான் அருச்சுனனின் வீரமைந்தன் அபிமன்யு. சயந்திரனைக் கொல்வதாகச் சபதம் கூறிச் சிவனிடம் அம்புபெறச் செல்கின்றான் அருச்சுனன் அதர்மயுத்தம் நிகழ்த்திய அன்றைய சூழ்நிலையிலும் அருச்சுனன் சபதம் செய்திருப்பதையும், சிவனிடம் சென்றிருப்பதையும் துரியோதனனுக்கு அறிவிக்காமல் விடுவது யுத்ததர்மம் அல்ல எனக்கலங்கி வீமன் மகன் கடோட்கஜனை துரியோதனனது பாசறைக்கு இரவில் தூதனுப்புகின்றான் தருமன்.

இவ்வாறு மகாபாரதம் எமக்குப் புகட்டும் பாடங்களை மக்கள் வாழ்விற் கடைப்பிடிக்க முயல்வரேல் உலகில் அறம் ஓங்கும், அழிவு நீங்கும். சாந்தியும் சமாதானமும் நிலைக்கும் என்பதற்கு ஐயம் இன்று.

ஆக்கம்: வித்துவான் சி.குமாரசாமி

Posted on 22/12/12 & edited 22/12/12 @ ,