nayinai's blog

பூ முத்தம் நீ தந்தால்!

comments: 0
சின்ன இதழ் பூச்சரமே!
செம்பவளத் தாமரையே!!
சிந்துகின்ற புன்னகையில்
சித்தமது கலங்குதடி!!


அன்றலர்ந்த தாமரையே!
அழகுமலர்த் தேவதையே!
பிஞ்சுமுகம் பார்க்கையிலே
பேசும்மொழி எதுக்கடி?


முல்லை மலர்ப்பூங்கொடியே!
முத்துமணிப் பாச்சரமே!
கொள்ளையிடும் உன்சிரிப்பில்
கோடிசுகம் இருக்குதடி!!


பூவிழியின் ஓரத்திலே!
புன்னகையின் ஈரத்திலே!
பூமுத்தம் நீ தந்தால்
பூமியிலே சொர்க்கமடி!!
அம்புலியில் அடைக்கலம்
யார் கொடுத்தார்...
கோடையைக் கண்டு
ஒழித்தோடிய குளிர் தென்றலே
வசந்தத்தை வாழவைக்க
கொடுமழை தவிர்த்தாங்கே
காற்றுப் புரவிக்குள்
கார்மேகச் சிக்கெடுக்கக்
கரைகொண்ட கடலாங்கே
நுரைதாங்கி நொடிகிறது.
காய்கின்ற நிலவதனைக்
கானாதேசம் என்றெண்ணி
தளர்நிலைப் பாட்டி - ஆங்கு
தஞ்சம் கொண்டதேனோ...

ஒருவார்த்தை மொழியடி

comments: 0
கண்ணாலே நீமொழிந்த
வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து
பல்லாயிரம் கவிதை
வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி .


கால்விரல்கள் தீட்டும்
கோலத்தைச் சேர்த்தெடுத்து
ரவிவர்மன் ஓவியத்தையும்
வெல்வேனடி .


நீ சிந்தும் சில்லிடும்
சிரிப்பழகை என்னுள் சேர்த்து
சரித்திரமே படைப்பேனடி .


உன் விரல்கள் காட்டும்
சைகைமொழி கண்டெடுத்து
சுந்தர நயங்கள் சொல்லும்
சாத்திரங்கள் வடிப்பேனடி .


உன் வாய்பேசும்
இன்மொழியில்
எந்தன் காதலையே
காவியமாக்கி உலகுக்கு
உவந்தளிப்பேனடி .
என்னுயிரே! ஒருவார்த்தை மொழிந்திடடி.

மாட்டு பொங்கல்

comments: 0

வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம் என்றெல்லாம் கூப்பிடுவார்கள் கடைசிபிள்ளையாக பிறந்தால் இன்னும் கொஞ்சம் கூட செல்லத்தை பொழிவார்கள் என்ன மாதிரி இடையில பிறந்தால் சிறு சிறு குற்றங்கள்செய்யப்படும் போதெல்லாம் வைக்கப்படும் பெயர்களில் ஒன்று தான் மாடு. சில நேரங்களில் மிகவும் பாசமாக எருமைமாடு என்று அழைப்பார்கள் .சில இடங்களில் நடவடிக்கைகளும் அப்படி தான் இருக்கும் .மூத்த பிள்ளை பிறக்கும் பொழுது மாமா சித்தப்பா பெரியப்பா மச்சான் என்று எல்லோரும் சங்கிலி காப்பு மோதிரம் என்று கொண்டுவந்து போடுவார்கள் .இடுப்புக்கும் வெள்ளியில் அரைநாண் கயிறு போடுவார்கள் .நமக்கு மாட்டுக்கு கழுத்துக்கு கட்டுறமாதிரி ஒரு நூல்தான் கிடைக்கும் .இடுப்புக்கும் அதே நூல் தான் .

விடை தருவாயா‏

comments: 0
இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த
இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள்
மீட்டபடாத வீணையின் இனிய ராகங்களாய்
மிதந்து நாடி நரம்புகளில் ஓடித்திரிகிறது,,,


தொலை தூர நிலாவில் பார்த்த அழகு முகம்
தெருவோரம் விழி நுகராமல் செல்லும் வேளை
வேதனையின் வடுக்கள் உன் ஞாபகங்களை
வெளிப்படுத்தி இதய கதவுகளை உரசுகிறது,,,


இதமான காற்றுகூட என்னை தொடவிரும்பாமல்
இதயத்தை அழுத்தி நெஞ்சும் வலிக்கிறது
மறுபடியும் உன்பார்வை படும் வேளை எல்லாம்
ஏமாற்றபட்ட ஏழையாய் நின்று எட்டி பார்க்கிறது ,,,,


நம்பிக்கை மீண்டும் மீண்டும் மூளை
நரம்புகளை மீட்டுக்கொண்டே இருக்கிறது
கால ஓட்டத்தில் காதருகில் கதை பேசி
கண்கள் சந்தித்து காது மடல் வருடி
மூக்குகள் மூச்சு காற்றை சுவாசித்து
இதழ்கள் பனிக்கும் காலம் வருமா ,,,அன்பே
இல்லை என் இதயமே நின்று போகுமா ,,,,,
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண் கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
‘இனிது’ எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள் நுதல் முகனே!”

குறுந்தொகை (167)
பாடியவர்: கூடலூர் கிழார்

நாகர்களும் நாக பூசணியும்

comments: 0

அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை
சத்தி இன்றி சிவம் இல்லை
என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார ஒலியாய் தாந்திரீய சைவத்தின் உயிர் நாதமாய் இன்றும் சிவலிங்கத்தை அணைத்தபடி அன்னையவள் நாகபூசணி நாகக் குடை நிழலில் அமர்ந்திருக்கும் திருத்தலமே நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், அம்பாள் நாககுடைநிழலில் இருந்து அருள்பார்வை பார்க்க சிவன் தாண்டவம் ஆட உலகம் இயங்குகின்றது.

முப்பொழுதுச் சொப்பனத்தில்

comments: 0
முப்பொழுதுச் சொப்பனத்தில்
முழு நிலவாய் வந்தவளே
யார் நினைவு வந்ததென்று
தேன் நிலவில் பாடுகின்றாய்
காற்றுமிழ்ந்த தேகமதின்
காமத்தீ ஓசை ஒன்றை
சாமத்தீ வரையிசைக்க,
ஓர்மத்தீ உழல் விடலை
யாகத்தீ சுமந்தவளே
நந்தவனப் பூக்களுக்கு
நீயின்றி நாற்றமில்லை,
காந்தர்வ மணம் கொள்ள.
சொந்தவனம் சொல்லிவிடு.
இதழோரம் இரைதேட
இமைநோக்கி விழியூரப்
பருவத்தின் களம் தந்து
போரிடையில் கொல்லிடவே
ஜாமத்தில் சாமத்து
வேதத்தில் வெண்ணிலவில்
கோதைகொள் போகத்தை
போதைக்காய்ப் பாவுக்காய்ப்
பாவைக்காய்ப் பாடுகிறாய்
அலையாடும் அரவம் கேட்டுச்
சிலைகளே சிதறும்போதும்
மலை நிகர் மனதோடின்று
மன்னவன் மணித்தேர் பார்த்து
காற்றுக்குள் முடங்கள் வைத்து
நாளைக்குள் நாழி பார்த்க
வேளைக்குள் வேந்தே வந்தான்.

அன்புடன் கங்கைமகன் - 22.03.2015

“வாழ்த்திவிடு நீயே!!”

comments: 0
பொங்கியெழு மங்கையெழில்
பூத்த மலரிதழோ!
மங்கையிவள் அங்கமெலாம்
தங்கநிகர் சிலையோ!
பங்கமிலாப் பைந்தமிழில்
பாடுமெழில் உனதோ!
சங்கம்வளர் கங்கைமகள்
தந்தகவி நானோ!
சிந்துகமழ் சந்தணமும்
தந்திடுவேன் நாளும்
வந்துஉயர் தந்துயெனை
வாழ்த்திவிடு நீயும்!
எந்தனுயிர் உள்ளவரை
உன்னைத்தினந் துதிப்பேன்
உந்தன்மலர்ப் பாதமதில்
உயர்கவிதை படைப்பேன்!
கங்கைமகள் பெற்றெடுத்த
மங்கையிவள் என்றே
காலமெலாம் கவியுரைக்கக்
கவிஞர்பலர் வருவர்!
திங்கள்முகம் காட்டியெனைத்
தேற்றிவிடு தாயே!
தேன்கவிகள் நான்படைக்க
வாழ்த்திவிடு நீயே!
கலைவாணி அருள்பெற்ற
கவிஞன் இவனென்றே
கவியுலகம் நாள்தோறும்
உனைப்புகழ வேண்டும்!
சிலையாக வந்துதிப்பாய்
நாவினிலே நீயும்
நிலையாக நான்பாட
நீயருள்வாய் நாளும்!!

சிறீ சிறீஸ்கந்தராஜா ( 21/02/2015 )

“அந்தணர் என்போர் அறவோர் மற்(று)
எவ்வுயிர்க்கும்
செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப் பெருமானின் குறளுக்கேற்ப வாழ்ந்துவரும் சிவஸ்ரீ. சம்பு மஹேஸ்வரக் குருக்கள் ஐயா வின் சதாபிஷேகம் நயினை நாகபூஷணி அம்பாள்,அருளாசியுடன் சுதுமலை புவனேஸ்வரி ஆலயத்தில் நடைபெற்றது.

சதாபிஷேகம் பிரயோகாச்சார்யர்களாக டாக்டர் யு.பு.ஸ்ரீநிவாஸ சாந்திரிகள் (ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோவில் சென்னை), சிதம்பர நடராஜ பூஜ்யஸ்ரீ.ஜி .பரமேஸ்வர தீட்சிதர்(ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜப் பெருமான் திருக்கோவில்.சிதம்பரம்) கலந்துகொண்டனர்.

ஈழத்து அந்தணப் பெருமக்களும் கிரியா நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தமது ஆசீர்வாதத்தை வழங்கினர்.அந் நன்னாளில் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை மொழிபெயர்த்து உருவான “நெடுமால் பெயராயிரம் “ அதோடு லலிதா அஷ்டோத்தர சதநாமாக்களையும் சங்கரபாக்ஷ்ய மரபில் தமிழ் உரையோடு உள்ளடக்கிய “சீதா மஹேஸ்வரம்” என்ற சதாபிஷேக சிறப்பிதழும் அன்றைய தினம் வெளியிடப்பட்டது .

Pages