நெஞ்சோடு என் நயினை...!!!

ஊருக்கு போய் வந்தால்
உறங்க மறுக்கும் கண்கள்
என் ஊர் நினைவெல்லாம்
என் நெஞ்சில் இனிக்கும்
அலைகள்...!

எத்தினைய சொல்லுவன்?
வரிசையா மண்வாசனை...
என்ன தான் இருந்தாலும்
பசுமையான நினைவுகள்...

ஒண்டு ரெண்ட சொல்லுறன்
ஒரு மனதா கேளுங்கோ...!

குறிகட்டுவான் பாலத்தில
குத்த வைச்சு உக்காந்தா
இருப்புக் கொள்ளாது நமக்கு!
கண் முன்னே ஊர் இருக்க
இருப்பு கேக்குதோ உமக்கு...!
மனசு கேக்கும் கேள்வி இது!

கப்பலில ஆடி ஆடி
அனலதீவு, நெடுந்தீவு
எண்டு
கண்ணுக்கு எட்டின தூரம் எல்லாம்
நிண்டுக்கிட்டே பாத்து வந்து,
நம்ம ஊரில கால் வைச்சா
சில்லெண்டு தழுவும்
காத்து அது,
அம்மா இறுக்க கட்டி அணைத்தால்
போல் இருக்கும்!!!

கொஞ்ச தூரம் மாட்டு வண்டி
கொஞ்ச தூரம் பஸ் வண்டி
கொஞ்ச தூரம் சைக்கிள் எண்டு
மகிழ்ச்சியாய் தொடர்ந்திடும்
நம் வீடு நோக்கிய பயணம்...!

இதமான உப்பு காற்று,
இறுக்கமான கிளுவம் வேலி,
கருக்கு மட்டை படலை தாண்டி
காவோலை சத்தம் கேக்க
காலில் செருப்பும் இன்றி
ஊரில்லாம் நடந்து வருவதில்
உள்ள சுகம் வேறெங்குண்டு...?

நல்ல தண்ணிக் கிணறு,
ஒற்றைப் பனையடி தண்ணி,
பரியாரியார்ட தண்ணி
எண்டு
நல்ல தண்ணி தேடி
கான், போத்தில், பரல்
எல்லாம் காவிப் போறது
தனி சுகம்...!

பூவரசம் இல பீப்பி,
புளுதி படிந்த மணல் பரப்பு,
வெடித்து பரவும் இலவம் பஞ்சு,
அத பிடிக்க நினைச்சு
காலில் கல்லடி வாங்கி
இப்பிலிப்பில் சாறு வைச்சு
காயம் ஆற்றின நினைவிருக்கு...!

வடக்குக்கும் தெற்குக்கும்
பொடி நடையாப் போய் வந்து
வீட்டு நாய்களுக்கு
கல்லெறிஞ்சு
ஊரிடத்தில் பொல்லாப்பு
தேடின ஞாபகமும்
வந்து போகுது...

விடிய கால
மீனுக்கெண்டு
வடக்கால போய் நிண்டு
கடலுக்கு கல்லெறிஞ்சு,
நேரத்த போக்காட்டி,
கரை சேரும் கட்டு மரத்தில்
கோர்வை மீன்
வாங்கிய நினைவிருக்கு...!

மட்டி பொறுக்க என
வீட்டு முன் கடலில்
முழங்கால் மட்டும் தண்ணி ஏற
கரை எல்லாம் தோண்டி
மட்டி எடுத்து
காச்சி உண்டத மறக்க தான்
முடியுமா...?

வித விதமாய் கூழ்
காச்சி
கூடி இருந்து குடிச்சு
மகிழ்ந்து,
பனங்காய் பணியாரம்,
பருத்தித்துறை வடை
என
அப்பப்போ பல உணவு...
அம்மம்மா கைப்பக்குவம்
அடேங்கப்பா!
சொல்ல தான் வேணுமா...?

சொல்ல சொல்ல
என்னில் பல ஞாபகங்கள்
வார்த்தை இன்றி தவிக்கிறது
நம்ம ஊரு வாழ்க்கை அது
நெஞ்சோடு கூட இருக்கு...!!!

நினைவுகளுடன், பிறேம்.

Posted on 26/12/13 & edited 03/04/15 @ Colombo, LK