கலைமகள் தாயே!!

கலைமகள் தாயே! சிலையுரு நீயே!!
இலைபயம் எனக்கு! நிந்துணை இருக்க!!
என்னுயிர்த் தமிழே! இன்னுயிர் நீயே!!
இங்கெழுந் தருள்வாய்! இன்னருள் தருவாய்!!


பூமழை தூவி போற்றிட வருவாய்!
நாமகள் எந்தன் நாவினில் உறைவாய்!!
தாயவள் உந்தன் தரிசனம் பெற்றால்
தரணியில் நானும் தமிழ்மழை பொழிவேன்!!


ஆயநற் கலைகள் அறிந்திட வேண்டும்!
அகத்தியன் தமிழை நான் பெறவேண்டும்!!
பாவினில் பொழியும் பைந்தமிழ்ச் சுவையை
பாரினில் உள்ளோர் பருகிட வேண்டும்!!


தூய நற்றமிழில் துதி பலபாட
தூயவளே நின்துணை பெற வேண்டும்!
காவியத் தமிழில் கவி பலபாட
கலைமகள் நீயும் களிப்புற வேண்டும்!!
Written by: 
Posted on 29/05/14 & edited 06/07/15 @ Nainativu, LK