கோயில்களின் கணக்குக் கோணினால்?

கோயில்களாக இருந்தாலும் பொது நம்பிக்கைச் சொத்துக்களாக இருந்தாலும் அவற்றை நிர்வகிக்கின்ற நிர்வாகிகளின் தூய்மையான சேவையை உறுதிப்படுத்துவது வருடா வருடம் நிர்வாகிகளால் வெளிப்படுத்தப்படுகின்ற நிதி ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை. பட்டயக் கணக்காளர்களின் கணக்காய்வு அறிக்கைகள் தான் நிர்வாகிகளின் புனிதமான பணியை உறுதிப்படுத்துகின்ற நற்சான்றிதழ். கணக்காய்வு அறிக்கை சரியாக இருக்கின்ற கோயில்கள் மற்றும் பொது நிறுவனங்களை நிர்வகிக்கின்ற நிர்வாகிகளுக்கு எதிராக சர்வ வல்லமை மிக்க எந்தச் சக்தியாலும் குற்றம் சுமத்தவோ, நீதிமன்றம் செல்லவோ முடியாது. நிதி ஆண்டு ஆய்வு அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிடுகின்ற நிர்வாகத்தினர் எவருக்கும் எந்தக் காலத்திலும் அஞ்சவேண்டியதில்லை. அவர்களைப் பற்றி யாரும் விமர்சிக்க முடியாது.

பட்டயக் கணக்காளர்களின் கணக்காய்வு அறிக்கையில் சந்தேகங்கள், பற்றுச்சிட்டைகள், ஆவணங்களில் திருத்தங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தால், பற்றுச்சிட்டைகளின் ஒப்புப் பிரதிப் புத்தகங்களில் திருத்தங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தால், அந்தக் கணக்காய்வு அறிக்கையை பொதுச் சபை ஏற்கமுடியாத நிலை ஏற்ப்படும். இது கோயில்கள் மற்றும் நம்பிக்கைச் சொத்துக்களை பரிபாலிக்கின்ற நிர்வாகிகளின் செயற்பாட்டில் ஐயப்பாட்டை ஏற்படுத்தும்.

தனிமனித வாழ்வில் ஒழுக்கம் உயிரினும் மேலானது. "ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்று வள்ளுவன் சொன்னவாறு தனிமனித வாழ்வில் ஒழுக்கம் உயிரானது. பணம், பதவி, கல்வி, அறிவு அனைத்தும் ஒருங்கே அமைந்து சகல செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழும் ஒருவனுக்கு ஒரு அணு அளவு கீறல் விழுந்தாலும் அவனது அனைத்துப் புகழும் பாழாகி விடும். அதேபோன்று கோவில்கள், நம்பிக்கைச் சொத்துக்கள் பொது நிறுவனங்களின் கணக்கில் குளறுபடி ஏற்பட்டுவிட்டால் நிர்வாகிகளின் அனைத்து செயற்பாடுகளும் கேள்விக் குறியாகி விடும்.

அடியவர் ஒருவர் கோயில் ஒன்றுக்கு ஓரு தொகைப் பணத்தைக் காணிக்கையாகக் கொடுக்கும் பொழுது கோவில் நிர்வாகத்தில் சார்பாக கொடுத்த பணத்தின் தொகைக்குப் பற்றுச்சிட்டை வழங்கப்படுகின்றது. பற்றுச்சிட்டையைப் பெற்றுக் கொண்ட அடியவர் தன் நேர்த்திகடன் தீர்ந்துவிட்டதாகப் பூரணமான மனத்திருப்தி அடைகின்றார். அடியவருக்குப் பூரணமான நம்பிக்கையை ஏற்படுத்தியது அடியவருக்கு வழங்கப்பட்ட பற்றுச்சிட்டைதான். தனது பணம் கோவில் நிதியோடு சேர்ந்துவிட்டது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது கோவில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்ட பற்றுச்சிட்டை. இந்தப் பற்றுச்சிட்டையின் ஒப்புப் பிரதி நாளாந்தக் கணக்குப் பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்டு பற்றுச்சிட்டையின் ஒப்புப் பிரதியும் கணக்குப் புத்தகமும் வருடாந்தக் கணக்கை ஆய்வுசெய்யும் பட்டயக் கணக்காளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் அனைத்தையும் சரிபார்த்து ஆய்வுசெய்து பட்டயக் கணக்காளர்களால் ஆய்வு செய்யப்பட்ட நிதி ஆண்டறிக்கையாக வெளிவரவேண்டும். அடியவருக்கு வழங்கப்பட்ட பற்றுச்சிட்டை உண்மையாக கோவிலின் நிதியோடு சங்கமமாகி விட்டது என்பதை உறுதிப்படுத்துவது வருடாந்தக் கணக்காய்வு அறிக்கைதான். உண்டியல்கள் வரவு பற்றுச்சிட்டை இல்லாத வரவு. எனவே உண்டியல்களின் வரவை வெளிப்படுத்தி உறுதிப்படுத்துவது கணக்காய்வறிக்கை தான். உண்டியல்கள் எண்ணுகின்ற பொழுது கணக்காய்வாளர் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் பிரசன்னமாகி இருப்பார். எனவே உண்டியல் வரவும் உண்டியலில் கிடைக்கின்ற தங்கம், வெள்ளி, காணிக்கைப் பொருட்களும் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுகின்றன. உண்டியல் வரவில் சேர்க்கப்பட்டு பட்டயக் கணக்காளரால் கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப் படுகின்றது. பக்தர்களுக்கு வழங்கும் பற்றுச் சிட்டை கணக்காய்வின் பின் தான் உயிர் பெறுகின்றது.

ஒரு கோவிலின் நிர்வாகத்திடம் பணத்தையோ, அல்லது காணிக்கையாகத் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களையோ வழங்குகின்றபோது பற்றுச்சிட்டை வழங்கப்படுகின்றது. வழங்கப்படுகின்ற பற்றுச்சிட்டை தமது பங்களிப்பு ஆலயச் சொத்துடன் சங்கமம் ஆகிவிட்டது போன்ற நம்பிக்கையைத் தருகின்றது. நமக்கு வழங்கப் பட்ட ஒப்புப் பிரதி, புத்தக இலக்கப் பற்றுச்சிட்டையின் இலக்கம், கொடுத்த பணத்தின் தொகை, பெயர் விபரம் நாளாந்தப் பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்டு வருடாந்தக் கணக்காய்வின்போது சமர்பிக்கப்படவேண்டும்.

கொள்வனவு, கொடுப்பனவுக்கான வவுச்சர் என்பன திகதி ஒப்பம் தெளிவாக அனைத்து விபரங்களுடன் பட்டயக் கணக்காளர் பார்வைக்கு கொடுக்கப்படுவதுடன் அவர்கள் கேட்கின்ற ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும். ஆவணங்களில் திருத்தங்கள், சந்தேகங்கள் இருக்குமானால் பட்டயக் கணக்காளர் தனக்கு ஐயப்பாடுள்ளதாக விதந்துரையில் சுட்டிக் காட்டுவார். எனவே தான் பட்டயக் கணக்காளர்களால் சுட்டிக்காட்டப்பட்டு விதந்துரைக்கப்படுகின்ற விதப்புரையுடன் கணக்காய்வறிக்கை வெளிவரவேண்டும். பட்டயக் கணக்காளர் விதப்புரையில்லாமல் மொட்டையான கணக்காய்வறிக்கை ஏற்புடையதல்ல. "கோவில் பணத்தை, சொத்தை நிர்வாகிப்பது கூரியவாளின் முனையில் நடப்பதற்கு ஒப்பானது" என்ற அமரர் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அவர்களின் அமுத வாசகத்துக்கமைய கோவில்களில் கணக்குகள் பேணப்பட வேண்டும். கோவில்களின் கணக்குகள் கோணினால் முற்றிலும் கோணும் என்ற முதுமொழியின் உட்பொருள் முதல் என்பது சொத்து. சொத்தின் கணக்குக் கோணினால் அனைத்துச் செயற்பாடுகளும் கோணல் தான். முதலில் கோணினால் முற்றிலும் கோணும். கோணலை நிமிர்த்துவது முடியாத காரியம்.

நயினை நாக. கோபாலகிருஷ்ணன்
உதயன் 03 - 07 - 2012

Posted on 07/03/12 & edited 31/03/15 @ Nainativu, LK