அறிவும் ஆத்மீகமும் இணைந்த அபூர்வப்பிறவி

அறிஞர்களையும் ஆன்மீகவாதிகளையும், தொண்டர்களையும், பாவலர்களையும் ஈன்றெடுத்த பதி நயினாதீவு. இப்பதியின் பெருமையை நிலைநாட்டி எம்மத்தியில் வாழ்ந்து மறைந்தவர்களும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் பலர். இவர்களில் ஒருவராய் எம்முள்ளத்தில் என்றும் இடம்பெற்றவராய்க் குறிப்பிடப்படுபவரே அமரர் வித்துவான் குமாரசாமி அவர்கள். துன்பம் பிறருக்கு, இன்பம் நமக்கு என்று வாழாமல் துன்பமும் இன்பமும் எனக்கும் சொந்தமானவை என்ற சம நோக்கில் அமைதியாக வாழ்ந்து வந்த பெரியார் இவர். மனித வாழ்வின் குறிக்கோளை உணர்ந்து வாழ்ந்தமையால் இவருடைய இலட்சியம் உயர்ந்த இடத்தை எட்டிப்பிடித்தது. சிற்றின்பத்துக்கும் பேரின்பத்துக்குமுள்ள வேறுபாட்டை உணர்ந்து தெளிவு நிலையில் வாழ்ந்தமையால் இருந்தவரை அமைதியைத் தழுவிக்கொண்டார். அறிவுநிலை வேறு உணர்வுநிலை வேறு என்று பகுத்து உணர்ந்து கொண்டமையால் இவருடைய வாழ்வில் தடுமாற்றத்துக்கு இடம் ஏற்படவில்லை.

ஆசிரியப்பணியிலே ஆனந்தமடைந்து அறிஞர்களை உருவாக்குவதிலும் ஆசிரியர்களை உருவாக்குவதிலும் இலக்கிய ரசிகர்களை உருவாக்குவதிலும் வெற்றி கண்டார். எளிமையான வாழ்வும் உறுதியான உள்ளமும் தான் மனிதனை மனிதனாக வாழ வழிவகுக்கும் என்ற நம்பிக்கை இவரிடம் நன்கு பதிந்திருந்தமையால் அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்டார் என்று கூறுவது பொருத்தமானது. ஏனென்றால் இன்று மனிதர்களிடையே சமுதாய நீதியும் சமத்துவமும் கனவுகளாகவே தோன்றுகின்றன. நாட்டுப்பற்று, இனப்பற்று, ஒழுக்கம், ஒற்றுமை, சகோதரத்துவம், ஆகியவற்றை வளர்க்கும் கல்வி வெறும் ஏட்டளவிலும் பரீட்சையளவிலும் நின்று விடுகிறது. சமுதாய மட்டத்தில் இதன் பிரதிபலிப்பைக் காணமுடியாமல் இருக்கின்றது. காரணம் எமது சைவநீதியை நாம் நல்ல படி புரிந்துகொள்ளாமையே யாகும்.

எனவே அமரர் வித்துவான் குமாரசாமி போன்றோரின் மகிமையானதும் அறிவுவளம் பொருந்தியதுமான வாழ்வை ஒருகணம் நாமும் சிந்தித்து மனிதப்பிறவி எடுத்த எமது குறிக்கோளை நிறைவேற்றுவது தலையாய கடனாகும்.
வித்துவான் அவர்களின் ஆத்மா நயினை நாகபூஷணியம்பாள் திருவடிகளில் இன்புற்றிருக்கப் பிரார்த்தித்து அமைகின்றேன்.

ஆக்கம் : செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
தலைவர், துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பளை

Posted on 12/12/12 & edited 03/04/15 @ Nainativu, LK